Published:Updated:

அமெரிக்காவின் மானியக்கொள்ளை; கதர் சாயம் வெளுத்துப்போச்சு, காவிச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும்!

இந்திய விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதால், அமெரிக்காவுக்கு என்ன பிரச்னை? கொஞ்சம் உள்ளுக்குள் ஆழ்ந்து சென்று யோசித்தால்தான் புரியும்... அது, இந்திய விவசாயிகளின் வாழ்க்கையைக் குலைத்துப்போடக்கூடிய வில்லாதி வில்லத்தனம் கலந்த வசனம் என்பது!

அமெரிக்காவின் மானியக்கொள்ளை; கதர் சாயம் வெளுத்துப்போச்சு, காவிச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும்!

இந்திய விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதால், அமெரிக்காவுக்கு என்ன பிரச்னை? கொஞ்சம் உள்ளுக்குள் ஆழ்ந்து சென்று யோசித்தால்தான் புரியும்... அது, இந்திய விவசாயிகளின் வாழ்க்கையைக் குலைத்துப்போடக்கூடிய வில்லாதி வில்லத்தனம் கலந்த வசனம் என்பது!

Published:Updated:
`இந்திய அரசு, தன்னுடைய நாட்டு விவசாயிகளுக்கு கொடுத்துவரும் மானியத் தொகை காரணமாக, அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பு. உடனடியாக இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடரவேண்டும்' என்று அமெரிக்க அதிபருக்கு, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்-க்கள் 28 பேர் கடிதம்!
- இது, அண்மையில் வெளியாகியிருக்கும் செய்தி.

இதைப் படித்ததுமே உங்களுக்கு என்ன தோன்றும்?

`இங்க அடிச்சா... அங்க வலிக்கும்' என்று தமிழ் சினிமாக்களில் அவ்வப்போது வில்லன்கள் விடும் வசனம் போல இருக்கிறதே! இந்திய விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதால், அவர்களுக்கு என்ன பிரச்னை? கொஞ்சம் உள்ளுக்குள் ஆழ்ந்து சென்று யோசித்தால்தான் புரியும்... அது, இந்திய விவசாயிகளின் வாழ்க்கையைக் குலைத்துப்போடக்கூடிய வில்லாதி வில்லத்தனம் கலந்த வசனம் என்பது!

`இந்திய அரசு, தன்னுடைய கோதுமை விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதால், ஆண்டுதோறும் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அமெரிக்கக் கோதுமை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடுக்கவேண்டும்’ என்பதுதான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கோரிக்கையின் சாரம்!

American flag
American flag

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எது நடக்கக்கூடாது என்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உயிரைக் கொடுத்துப் போராடிப் போராடி, விவசாயிகளாகிய நாங்கள் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோமோ... அந்தக் கோட்டைக்கு இப்போது ஆபத்து வந்தேவிட்டது, வில்லாதி வில்லன்களான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால்!

கார்ப்பரேட்களுக்குக் கால்பிடிக்கும் ஆட்சியாளர்கள்!

உலகம் மொத்தத்தையும் வணிகம் என்கிற ஒற்றைக் குடையின்கீழ் கொண்டு வருவதில் தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டே இருக்கிறார்கள் உலகளாவிய பெருவணிகர்கள். `கார்ப்பரேட் கும்பல்' என்று சொன்னால், சட்டென்று புரிந்துவிடும். அவர்களுக்குக் கவரி வீசி, கால்பிடித்து, வணிகத்தைப் பெருக்குவதற்கான அத்தனை உதவிகளையும் செய்வது ஒன்றுதான் தங்களுடைய தலையாய பணி என்றே உலகளாவிய ஆட்சித் தலைவர்களும் பணியாற்றி வருகின்றனர். உண்மையில், அனைத்தையும் வணிகமயமாக்குவது பேராபத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதற்கு நூற்றாண்டு சாட்சி... ஆங்கிலேயர்களுடைய நாடு பிடிக்கும் வெறிதான். கடல் கடந்து உலகையே தங்களின் ஆளுகையின்கீழ் கொண்டுவந்து, மக்களையெல்லாம் அடிமைகளாக மாற்றினார்கள். அடிப்படைத் தேவையான உணவையும் ஒட்டுமொத்தமாக வணிகக் குடையின் கீழ் கொண்டு வந்தார்கள். விளைவு... உலகம் முழுக்கவே பசி, பஞ்சம், பட்டினி என்று கணிசமான கூட்டம் சுருண்டுகிடக்க... சிறு அளவிலான கூட்டம் சொத்துகளைச் சேர்த்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வணிகத்துக்கு மனிதம் தெரியாது!

உள்ளூர் வணிகம், உலக வணிகம், தடையற்ற வணிகம் போன்றவையெல்லாம் ஒருபோதும் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தாது. வணிகத்துக்கு மனித முகம் கிடையாது. லாபம் ஒன்றுதான் நோக்கம். அந்த லாபமும் வணிகர்களுக்கு மட்டும் கிடைக்குமே தவிர, மக்களுக்குக் கிடைக்காது. எனவே, தடையற்ற உலக வணிகம் என்பது விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்குக் கட்டும் சமாதி. இதைத்தான் விவசாயச் சங்கங்கள் 1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு, பொருளாதாரரீதியில் வலுவான ஒரு நாட்டில் அபரிமிதமாக உணவு தானியங்கள் விளைகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதுவும் அந்த நாட்டு அரசு மானியங்களை அள்ளிவீசி விளைவித்த உணவு தானியங்கள். அத்தகைய தானியங்களை, மானியம் என்றால் என்னவென்றே தெரியாத ஏழை நாடுகளுக்குக் கொண்டுபோய், அந்த வலுவான நாடு விற்பனை செய்தால் என்ன நடக்கும்?

அமேசானும் இலங்கையும்!

தங்கள் நாட்டில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உற்பத்தி செய்த அந்த ஏழை நாட்டு விவசாயிகளின் பொருள்கள் விலைபோகாது. மானியத்தில் விளைவித்த பொருள்களை, குறைந்தவிலையில் வெளிநாட்டுக்காரர்கள் வந்து விற்பனை செய்யும்போது, அதை வாங்கத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள்... அமேசான், ஃப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் என்று இணையத்தில் முட்டிமோதுவதுபோல! இது, ஏழை நாட்டு விவசாயிகளின் வாழ்வைக் கூண்டோடு அழித்துவிடுவதோடு மட்டுமல்லாமல், அந்த நாட்டையும் பொருளதாரரீதியில் பிச்சை எடுக்கவைத்துவிடும்; தற்போது இலங்கை தேசமே சீனாவிடம் கையேந்திக் கொண்டிருப்பதுபோல. மக்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படும்; வாங்கும் சக்தி முற்றிலுமாகக் காணாமல்போகும்; வறுமை, பஞ்சம், பசி, பட்டினி என்பது மட்டுமே எங்கெங்கும் குடியேறும்; கொள்ளையடித்த பணத்தில் சொத்து சேர்த்த அதிகார, அரசியல் மற்றும் ஆட்சியாளர்களின் வர்க்கம் மட்டும் குஷியோடு வாழும்.

எனவேதான்,`உலக வர்த்தக மைய (WTO) வரையறைக்குள் விவசாயத்தைச் சேர்க்கக் கூடாது' என்று உலக விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடினர். அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயிகள் சங்கமும் (Family Farmer Organisation) இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri Lanka
Sri Lanka
AP Photo/Eranga Jayawardena

இந்நிலையில்தான், இப்போது மானியத்துக்கு எதிர்ப்பு என்கிற ரூபத்தில் இந்திய விவசாயிகளின் கழுத்துக்குத் தூக்குக்கயிற்றை மாட்டச் சொல்ல ஆரம்பித்துள்ளனர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்திய விவசாயிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடமும் இந்திய அரசியல்வாதிகள் அடகு வைத்துவிட்டனர் என்பதே உண்மை. இதற்கு, வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கவேண்டும்.

மாறனின் குரலுக்கு மரியாதை!

1995–ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு (WTO) தொடங்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு நாட்டில் வர்த்தக மந்திரிகள் கூடி சட்ட திட்டங்களை வகுக்கவேண்டும் என்பது விதி. பொதுவாக, உலக வர்த்தக மந்திரிகள் மாநாட்டில் எல்லா பிரச்னைகளுக்கும் எளிதில் விடை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், விவசாயம் என்பதற்கு மட்டும் ஒவ்வொருமுறையும் முட்டுக்கட்டை விழுந்துவிடும். காரணம்... உலக விவசாயிகளின் தொடர்போராட்டம். அத்துடன், 2001-ம் ஆண்டு தோஹா மாநாட்டில் இந்திய வர்த்தக மந்திரி எழுப்பிய கடுங்குரலும் முக்கியமான காரணம். அன்றைய மாநாட்டில், விவசாயத்துக்கான மானியத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய குரலாக முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியா போன்ற ஏழை-வளரும் நாடுகள், தமது நாட்டு விவசாயிகளுக்குத் தந்துவரும் மானியத்தை மூட்டைக் கட்ட வேண்டும்' என்று வலியுறுத்தினார்கள். இதைக்கேட்டுக் கொதித்தெழுந்த அன்றைய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன், 'வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு வாரிக்கொடுக்கும் மானியங்களை நிறுத்தும் வரை, உலக வர்த்தக அமைப்பில் விவசாயத்தைச் சேர்க்கக்கூடாது' என்று தனி ஒருவராகக் கர்ஜனை செய்தார். இது இந்தியாவுக்கு மட்டுமான கோரிக்கை அல்ல. வளரும் ஏழை நாடுகள் (least developing countries) அனைத்துக்குமான கோரிக்கை என்பதால், அப்போது அரங்கமே அதிரும்படி கைத்தட்டல்கள் எழுந்தன முரசொலி மாறனின் குரலுக்கு ஆதரவாக!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகிடுதத்த அமெரிக்கா

மாற்றம் ஒன்றுதான் நிலையானது. இங்கு மட்டும் மாற்றம் நிகழாதா என்ன? அன்றிலிருந்து அமெரிக்கா தனது கொள்ளிக்கண்ணை இந்தியா மீது பதித்தது. மனித குலத்துக்கு விரோதமாக விஞ்ஞானத்தை வளைப்பதில் வளர்ப்பதில் எப்போதும் அமெரிக்கா முதலிடம் வகிக்கும். விஞ்ஞானம் என்ற பெயரில் உழவர்கள் கையிலிருந்த காலகாலமாகக் கட்டிக்காப்பாற்றி வந்த விதையில், மரபணு மாற்றம் என்கிற விஷத்தைப் புகுத்தி காப்புரிமை பெற்று தனிச்சொத்தாக மாற்றியது தொடங்கி, தொடர்ந்து பல்வேறு தகிடுதத்தங்களை விஞ்ஞானம் என்கிற பெயரில் செய்துகொண்டே இருக்கின்றன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள்.

உலக வர்த்தக அமைப்பு தொடங்கியபோது கொண்டு வந்த சட்ட திட்டங்களில் மிக முக்கியமானவை... `பத்து வருடங்களில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டதோ அவை மட்டுமே, உலக வர்த்தக அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் இறுதி வடிவம் கொடுத்துவிட வேண்டும். ஒத்தக்கருத்து ஏற்படவில்லை என்றால், உலக வர்த்தக அமைப்பு என்பதையே கலைத்துவிட வேண்டும்' என்பவைதான். இந்தப் பின்னணியில், 2005-ல் ஹாங்காங்கில் நடைபெற்ற வர்த்தக மந்திரிகள் மாநாடு முக்கியத்துவம் பெற்றது. அதாவது, உலக வர்த்தக அமைப்புத் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த மாநாட்டில் முக்கியமான முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும். இல்லையென்றால், உலக வர்த்தக அமைப்பே இல்லாமல் போய்விடும் என்பதால், வளர்ந்த நாடுகளிடையே (அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள்) பதற்றம் தொற்றிக்கொண்டது. உலக வர்த்தக அமைப்பு தோற்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் அனைவருமே குறியாக இருந்தனர்.

Farming
Farming

வலையில் விழுந்த கதர்!

ஹாங்காங்கில் ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலக நாட்டுத் தலைவர்கள் கூடினர். குறிப்பாக, அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யு புஷ் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இந்தியாவின் வர்த்தக மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கலந்துகொண்டார். வரலாறு காணாத பாதுகாப்புடன் மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. `உலக வர்த்தக அமைப்பில் விவசாயத்தைச் சேர்க்க ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது' என்று விவசாயிகளும் திரண்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த சூழலிலும், கடலில் குதித்து, நீந்திச் சென்றெல்லாம் மாநாடு நடைபெற்ற வளாகத்தை முற்றுகையிட்டனர் உலக விவசாயிகள்.

இந்நிலையில், தமது நரித்தனத்தைக் காட்டத் தொடங்கியது அமெரிக்கா. ஏழை மற்றும் வளர்ந்த நாடுகளின் வர்த்தக மந்திரிகளைத் தனித்தனியாகச் சந்தித்து, கொடுக்கவேண்டியதைக் கொடுத்து, காட்டவேண்டியதைக் காட்டி வளைக்கத் தொடங்கியது. விளைவு, உலக வர்த்தக அமைப்பின் உயிர் போய்விடக்கூடாது என்பதற்காக இந்தியாவின் மானத்தையே விற்றார் அந்த மாநாட்டில் பங்கேற்ற அன்றைய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஒரு நாளைக்கு ஐந்து முறை ஆடை மாற்றினார், அழகழாக தொலைக்காட்சிக்கு-க்கு பேட்டிக் கொடுத்தார், முடியவே முடியாது என்று முறுக்கினார்... இறுதியில் காயடிக்கப்பட்ட காளையாக, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தார் ஜெய்ராம் ரமேஷ். `உலக வர்த்தக அமைப்பின் வளையத்துக்குள் வராத பிரச்னைகளைப் பற்றி பிறகு பார்ப்போம். இப்போதைக்கு இன்றைய நிலையே தொடரலாம்' என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியா எனும் மாபெரும் சந்தை!

இங்குதான் அமெரிக்காவின் நரித்தனத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலக வர்த்தக அமைப்பு தோற்றுவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் துடியாய் துடித்தார். மாநாட்டில் இந்தியாவை மட்டுமே குறிவைத்துத்தான் தனது காய்களை நகர்த்தினார். உலகின் பெரிய நாடு, மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு சீனா. அதற்கடுத்த இடத்திலிருக்கும் நாடு இந்தியா. சீனாவை வளைக்க முடியாது. அதேசமயம், இந்தியாவை வளைப்பது எளிது, ஒருபோதும் இந்தியா தன் கையைவிட்டுப் போய்விடக் கூடாது' என்பதற்காகக் காய்நகர்த்தினார் அமெரிக்க அதிபர் எனும் அந்த உலகப் பெரும் முதலாளி.

'மிடில் கிளாஸ் பாப்புலேஷன் ஆஃப் இந்தியா'தான் அமெரிக்கர்களின் மிகமுக்கிய வர்த்தகச் சந்தை. அதாவது, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட, இந்தியாவின் நடுத்தர மக்கள் தொகை அதிகம். அதனால், இந்தியாவானது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய சந்தையாக வருங்காலத்தில் இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டே உலக வர்த்தக அமைப்புக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது அமெரிக்கா.

கரைந்துபோன பொருளாதார புலி!

Farmer (Representational Image)
Farmer (Representational Image)
AP Photo / Rajesh Kumar Singh

காலச்சக்கரம் உருண்டோட, அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்புக்கு வந்தார். முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவியான ஹிலரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு பொறுப்பேற்றார். ஹிலரியை இந்தியாவுக்கு அனுப்பி, அன்றைய பிரதமரான `பொருளாதார புலி' மன்மோகன் சிங்கிடம் பேசிப் பேசி கரைத்தார், ஒபாமா. 2013-ல் இந்தோனேசியாவின் பாலி தீவில் உலக வர்த்தக மந்திரிகள் மாநாடு டிசம்பரில் நடைபெற்றது. வழக்கம்போல முதலில் எதிர்ப்புக்காட்டுவதுபோல பாவ்லா காட்டிய அன்றைய இந்திய வர்த்தக மந்திரி ஆனந்த சர்மா, இறுதியில் முடங்கிப் போனார். மன்மோகன் சிங்கின் கெழுதகை நண்பரான ஒபாமாவை மீறி, என்ன செய்ய முடியும்?

`விளைச்சலில் 10% வரை மட்டுமே விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கலாம்' என்று முடிவானது. அதாவது, ஒட்டுமொத்த விளைச்சல் மதிப்பில் 10 சதவிகிதம் வரை மானியம் அனுமதி. இதில்தான் அனைத்து சூழ்ச்சிகளும் அடங்கியிருக்கின்றன.

அள்ளிக் கொடுக்கும் அமெரிக்கா!

அமெரிக்கா, தன்னுடைய விவசாயிகளுக்கு மானியத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறது. அதெல்லாம் விளைச்சலை அறுவடை செய்து, வியாபாரத்துக்குத் தயார்ப்படுத்தும் முன்பாக வழங்கப்படும் மானியங்கள். அதையெல்லாம் மானியக் கணக்கில் சேர்க்காமல், ஊக்கத்தொகை என்கிற பெயரில் கணக்குக் காட்டுகின்றன பெரிய அண்ணன் அமெரிக்காவும், அதன் அடிவருடிகளாக இருக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும். இதுமட்டுமல்ல, விவசாயம் செய்யாமலிருக்கக்கூட அங்கெல்லாம் அரசாங்கம் மானியம் தருகிறது. அதெல்லாம் மானியம் என்கிற கணக்கில் வராதாம்.

உதாரணத்துக்கு அமெரிக்காவில் ஒரு பயிருக்கு ஊக்கத்தொகை என்கிற பெயரில் 3.9 பில்லியன் டாலர் மானியம் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்தப் பயிருக்கான உற்பத்திசெலவு 3.4 மில்லியன் டாலர்தான். அதற்கு மேலேயே மானியம் கொடுக்கிறார்கள் ஊக்கத்தொகை என்கிற பெயரில். இந்நிலையில், அந்தப் பொருள் என்ன விலைக்கு விற்றாலும், விற்காமல் போனாலும்கூட அமெரிக்க விவசாயிகளுக்கு லாபமே!

கிள்ளியும் கொடுக்காத இந்தியா!

உண்மை நிலை இப்படியிருக்க, இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் மக்களுக்குக் கொடுப்பதற்காகக் கொஞ்சமோ கொஞ்ச அளவில்தான் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. அதாவது, விளைச்சலில் 30% மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து இந்திய அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது. ஆனால், இதுகூட அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்காக 82 கோடி மக்களுக்கு மாதம் 5 கிலோ உணவுதானியம் கொடுக்க, குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்குவதைக்கூட அமெரிக்கா எதிர்க்கிறது. சொல்லப்போனால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்கிற இந்த மானியம், விவசாயிகளுக்காக அல்ல. உணவு, இந்திய மக்கள் எல்லோருக்கும் போய்ச் சேரவேண்டும் என்கிற நோக்கில்தான் கொடுக்கப்படுகிறது.

Farming
Farming

ஊக்கத்தொகை என்கிற மாய்மாலம்!

விவசாயம் செய்தாலும், செய்யாவிட்டாலும் ஏக்கருக்கு 1,000 முதல் 2,500 டாலர்கள் வரை ஊக்கத்தொகை என்கிற பெயரில் தன்நாட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டிருக்கின்றன அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் அரசுகள்.

பால் விவசாயி என்று பதிவு செய்தாலே போதும்... பால் கறந்தாலும் கறக்காவிட்டாலும் நேரடியாகப் பணம் போய்ச் சேர்ந்துவிடும். ஒயின் விவசாயிகள் (திராட்சை) எத்தனை ஏக்கர் விவசாயம் செய்கிறேன் என்று பதிவிட்டாலே போதும், வங்கிக்கணக்கில் ஊக்கத் தொகை ஏறிவிடும். இதேபோலத்தான் பலவிதமான விளைபொருள்களுக்கும் அங்கெல்லாம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இப்படி அள்ளிவிடப்படுவதெல்லாம் மானியம் என்கிற கணக்கில் வராதாம். இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்று கொடுக்கப்படும் பிச்சைக்காசு மட்டும் மானியக்கணக்கில் வருமாம்.

மானியமே இல்லாத நாடு இந்தியா மட்டுமே!

உண்மையில் இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று எந்தவிதமான மானியமும் இல்லவே இல்லை. உரமானியம் என்கிறார்கள்... அது ஒருநாளும் விவசாயிகளின் கைகளுக்கு வந்ததில்லை. உரக் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாக வழங்கப்படுகிறது. சொட்டுநீர் மானியம் என்கிறார்கள். அது, சொட்டுநீர் உபகரணத் தயாரிப்புக் கம்பெனிகளின் கணக்குக்குத்தான் போகிறது. ஆக, இங்கேயும் கம்பெனிக்காரர்களின் வளர்ச்சிக்காகவே மானியம் வழங்கப்படுகிறது.

காலில் விழுந்த காவி!

காங்கிரஸ் அரசு, விவசாயிகள் தலையில் கல்லைப் போட்டு ஒட்டுமொத்த விவசாயிகளைக் கொன்றது என்றால், 2014-ல் பாலி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட புதிய புரட்சித் தாய் அன்றைய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன், சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து, விவசாயிகள் எழுந்து வந்துவிடக் கூடாது என்று மண் அள்ளிப் போட்டார். அதாவது, `இந்திய விவசாயிகளுக்கான மானியம் என்பது, 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இதை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயமாகப் பின்பற்றவேண்டும். அதுவரையிதான் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது தரப்படவேண்டும். அதன்பிறகு, பொதுச்சந்தையில் மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும்' என்று நிபந்தனை விதித்தது உலக வர்த்தக மையம். புளகாங்கிதப்பட்டுப் போன நிதியமைச்சர் நிர்மலா, ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டு, இந்திய விவசாயத்துக்கு ஒட்டுமொத்தமாக சங்கு ஊதிவிட்டார். அதற்காகத்தான், அடுத்த சில ஆண்டுகளில் நிதி அமைச்சர் எனும் மாபெரும் பொறுப்பை மானியமாக... மன்னிக்கவும் ஊக்கத்தொகையாகக் கொடுத்திருக்கிறார்கள் போலும்!

இதோ... அந்த நன்கு ஆண்டுகள் கெடு முடிவுக்கு வந்துவிட்டது என்பதைத்தான் கூப்பாடு போட்டு சொல்ல ஆரம்பித்துள்ளனர் அமெரிக்க எம்.பி.க்கள். `இனி, உலக சந்தையில்தான் கொள்முதல் செய்யவேண்டும். இந்திய விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தந்து கொள்முதல் செய்யக்கூடாது' என்று கடிவாளம் போடா ஆரம்பித்துள்ளனர்.

இப்போது கொடுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டுப்படி ஆகவில்லை. அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் இந்திய விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், அதையும்கூட கொடுக்கக்கூடாது என்று முஷ்டியை உயர்த்துகிறது அமெரிக்கா.

Agriculture (Representational Image)
Agriculture (Representational Image)
Photo by Sergio Camalich on Unsplash

தேவை, மீண்டுமொரு போர்!

இன்று, 28 அமெரிக்க எம்.பி-க்கள், இந்தியாவின் கோதுமை விவசாயிகளுக்கு எதிராக எழுப்பியிருக்கும் இந்தப் போர்க்குரல், நாளை நெல்லுக்கும் புல்லுக்கும்கூட நிச்சயமாக வரக்கூடும். இதுபோன்ற ஆபத்துகள் குறித்துதான் இந்திய விவசாயிகள் 1991-ம் ஆண்டிலிருந்தே எதிர்க்குரல் கொடுத்துவருகின்றோம் (2002-லிருந்து ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் பசுமை விகடனில் பல கட்டுரைகளை நானும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்). ஆனால், கதரோ... காவியோ இந்திய அரசு என்கிற பெயரில் செயல்படும் எந்த அரசுமே விவசாயிகளின் கஷ்டத்தையும் உணர்வுகளையும் உணர்ந்துகொண்ட மாதிரி தெரியவில்லை.

கதர் சாயமும் வெளுத்துவிட்டது... காவிச்சாயமும் வெளுத்துவிட்டது. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் கார்ப்பரேட்களுக்கு கால்பிடிப்பவர்களாக இந்திய ஆட்சியாளர்கள் இருக்கும்வரையில், ஒருநாளும் இந்திய விவசாயிகளுக்கு விடிவே இல்லை. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீரமிக்க, வீரமிக்க நடத்தப்பட்ட போராட்டத்தைப் போல், மற்றுமொரு போராட்டத்தால் மட்டுமே, இந்த கார்ப்பரேட் அடிமைகளிடமிருந்து நாம் விடுதலை பெற முடியும்.

- தூரன் நம்பி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism