Published:Updated:

திப்பு சுல்தான் படையில் சிப்பிப்பாறை... விவசாயிகளின் தோழன் கட்டைக்கால்...

கண்காட்சியில்
பிரீமியம் ஸ்டோரி
கண்காட்சியில்

நாட்டின நாய்களின் கண்காட்சி!

திப்பு சுல்தான் படையில் சிப்பிப்பாறை... விவசாயிகளின் தோழன் கட்டைக்கால்...

நாட்டின நாய்களின் கண்காட்சி!

Published:Updated:
கண்காட்சியில்
பிரீமியம் ஸ்டோரி
கண்காட்சியில்

கௌரவம் என்ற பெயரில் பலரும் வெளிநாட்டின நாய்களைத் தங்களுடைய வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வரும் சூழலில், நம் மண் சார்ந்த நாட்டின நாய்களை மிகுந்த நேசத்துடன் வளர்த்து வருபவர் களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்தவித பராமரிப்பும் இல்லாமலே நாட்டின நாய்கள் ஆரோக்கியமாக வளரக்கூடியவை. இவற்றுக்குச் சுறுசுறுப்பு, கவனிப்பு மற்றும் எச்சரிக்கை உணர்வு அதிகம். வெளிநாட்டின நாய்களின் மீதான மோகத்தினால், நாட்டின நாய் வளர்ப்புக் கைவிடப்பட்டிருந்தாலும், சமீபகாலமாக இயற்கை விவசாயம், சித்த மருத்துவம், நாட்டின கால்நடைகள் வளர்ப்பு என மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் நீட்சியாக நாட்டின நாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் பரவலாக அதிகரித்து வருகிறது.

ராஜபாளையம்
ராஜபாளையம்

தேசிய அளவிலான நாட்டின நாய்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியைத் தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். கால்நடை பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

கட்டைக்கால்
கட்டைக்கால்

இந்தியாவிலேயே முதன்முறையாக நாட்டின நாய்களுக்காக நடைபெற்ற இக்கண்காட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 270 நாய்கள் பங்குபெற்றன. இவைகளின் விதவிதமான தோற்றமும், சுறுசுறுப்பும், துள்ளலான விளையாட்டுகளும் பார்வை யாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. இவற்றின் பிரத்யேக குணாதியங்கள் குறித்த தகவல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

ராப்ரின்(இடதுபுறம் முதலில் அமர்ந்திருப்பவர்)
ராப்ரின்(இடதுபுறம் முதலில் அமர்ந்திருப்பவர்)

இக்கண்காட்சியில் பங்கேற்ற சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், கட்டக் கால் உள்ளிட்ட நாய்களுக்கு... குட்டி, இளம் பருவம், வளர்ந்த நாய்கள் எனத் தனித் தனிப் பிரிவுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் கலந்து கொண்ட நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்நாய்களை அழைத்து வந்திருந்த உரிமை யாளர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்தோம்.

காரைக்காலைச் சேர்ந்த ராப்ரின், “நான் வளர்த்துக்கிட்டு இருக்குற கட்டைக்கால் இன ஆண் நாயை இங்க அழைச்சுட்டு வந்தேன். இதுக்கு அஞ்சு வயசாகுது. காவேரி டெல்டா பகுதியைச் சேர்ந்த கட்டைக்கால் இனம் மிகப் பழைமையானது. இது 15-ல யிருந்து 16 இன்ச் உயரம் வரைதான் வளரும். இதுல பெண் நாய்கள் இதைவிட 2 இன்ச் கம்மியா இருக்கும். சிறுசா இருந்தாலும் ரொம்ப பவர் ஃபுல்லா இருக்கும். பெரிய பெரிய விலங்குகள்கிட்ட கூட பயப்படாம மோதும்.

கண்காட்சியில்
கண்காட்சியில்

எங்க ஊர் பக்கம் விவசாய நிலத்துல இருக்கக்கூடிய பாம்பு, எலிகளைத் தேடிப் புடிச்சு அழிக்கக்கூடிய தன்மை இந்தக் கட்டைக்கால் இனத்துக்கு இயற்கையாகவே இருக்கு. விவசாயிகளுக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும். நம்ம மண் சார்ந்த இந்த இனம், இப்போ அழிஞ்சுகிட்டு வருது. என்னை மாதிரி ஒரு சிலர்தான் இதை வளர்த்துக்கிட்டு இருக்காங்க. நாம என்ன சாப்பிடுறோமோ, அதைக் கொடுத்தாலே போதும். இதுக்குனு தனிக் கவனிப்பு எதுவும் தேவையில்லை. கட்டைக்கால் இன நாய்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்குறதால, எந்த நோய்களும் அண்டாது. இதன் வாழ்நாள் 20 ஆண்டுகள்.

விவசாயத்துக்கு உதவி செய்யக்கூடிய கட்டைக்கால் இன நாய்களைத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பா, விவசாயிகள் கண்டிப்பா வளர்க்கணும். இதைப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தணும்ங்கற நோக்கத்துனாலதான் இந்தக் கண்காட்சிக்கு என்னோட நாயை அழைச்சுக்கிட்டு வந்தேன்” என்றார்.

தேவி
தேவி

திருச்சியைச் சேர்ந்த தேவி, “என் செல்லத்தோட பேரு வீரா. கன்னி இனத்தைச் சேர்ந்த இதுக்கு ஒரு வயசு ஆகுது. முன்னாடி வெளிநாட்டு இன நாய்களை வளர்த்திருக்கேன். அதுங்களை அதிக கவனம் எடுத்து பார்த்துக் கணும். நாம சாப்பிடும் உணவுகளைக் கொடுத்தால் வெளிநாட்டின நாய்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஏற்படும். அந்த நாய்களுக்கு ரொம்ப சீக்கிரத்துல நோய் தொற்று ஏற்படும். அதை வளர்க்க ரொம்பவே சிரமப்பட்டேன். நிறைய செலவு செய்ய வேண்டியதாவும் இருந்துச்சு.

அதனாலதான், எந்தப் பிரச்னையும் இல்லாத நம்ம நாட்டு நாய்களை வளர்க்குறது தான் நமக்கு நல்லதுனு முடிவு பண்ணி கன்னி வீராவை வளர்த்துக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டாலே போதும். இதைப் பராமரிக்குறது ரொம்ப சுலபம். 27 இன்ச் உயரம் வரைக்கும் வளரும். பதினாறு வயசு வரைக்கும் உயிர் வாழும்’’ என்றார்.

கண்காட்சியில்
கண்காட்சியில்

மதுரையைச் சேர்ந்த உமாமணி, “வெண்பா பவுண்டேஷன்ங்கற பேர்ல நாட்டு நாய்கள் பண்ணை நடத்திக்கிட்டு இருக்கோம். சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி போன்ற ஏராளமான நாட்டின நாய்களை வளர்க்குறோம். கட்டைக்கால் இனம் 1,700 வருஷத்துக்கு முன்பே நம்ம மண்ல இருந்ததா வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க. வேட்டைக்குப் போறவங்க இந்த நாய்களை வெச்சிருந்திருக்காங்க. ரொம்ப குட்டையா இருக்கறதால, இதை வளர்க்க பெரிய இடம் தேவையில்லை. வீட்டுல அப்பார்ட்மென்ட்ல யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வளர்க்கலாம். கட்டைக்கால் இனத்தை அழிய விடக் கூடாதுன்னு பல கிராமங் களுக்குச் சென்று குட்டிகளை வாங்கி வளர்க்குறோம். நிறைய பேர் இந்த இன நாய்களை விரும்பி கேக்குறாங்க. தனியாக ஒரு குழு உருவாக்கி நாட்டின நாய் இனங் களைப் பெருக்கும் முயற்சியில தொடர்ந்து ஈடுபட்டுக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.

கண்ணன்(இடதுபுறம்)
கண்ணன்(இடதுபுறம்)

ராஜபாளையத்தைச் சேர்ந்த கண்ணன், ‘‘நான் எங்க பகுதியைச் சேர்ந்த ராஜபாளையம் நாய்களை வளர்த்துக்கிட்டு இருக்கேன். வெளிநாட்டு இன நாய்களா இருந்தா ரொம்ப கவனமா பார்த்துக்கணும். ஆனா, இது அப்படி இல்லை. எங்க குடும்பத்துல ஒரு ஆள் போல அதுபாட்டுக்கு தானா இருக்கும். மோப்ப சக்தி அதிகமா இருக்குறதால, காவல் காக்க சிறப்பா இருக்கும். ராஜபாளையம் நாய்கள், தமிழ்நாடு முழுக்கப் பரவால எல்லா மக்களும் வளர்க்கணுங்கறது தான் என்னோட ஆசை” என்றார்.

செல்வக்குமார்
செல்வக்குமார்

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத் துணைவேந்தர் செல்வக்குமார், ‘‘முதல்முறையாக அரசு சார்பிலான நாட்டின நாய்கள் கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும், இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தேசிய மரபுசார் பல்கலைக்கழகத்தில் இந்திய அளவில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கர்நாடகாவைச் சேர்ந்த முதொல்ஹன்ட் ரக நாட்டினங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின நாய்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கண்காட்சியில்
கண்காட்சியில்
கண்காட்சியில்
கண்காட்சியில்
கண்காட்சியில்
கண்காட்சியில்

திப்பு சுல்தான் தன் படையில் ஆயிரக்கணக் கான சிப்பிப்பாறை நாய்களை வைத்திருந்தார். அந்த அளவுக்குப் பெருமை வாய்ந்த பாரம் பர்யமான நாட்டின நாய்கள் தமிழகத்தில் இருந்துள்ளன’’ என்றார்.

நாட்டின நாய்களை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு மதுரையில் தொடங்கி யுள்ள இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது. இதோடு நின்றுவிடாமல் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.