Published:Updated:

1,250 டன் ஊட்டி டீ தூள்.. கேரளாவின் மெகா ஆர்டர்! -50% தொழிலாளர்களுடன் செயல்படுத்திய இண்ட்கோ சர்வ்

indcoserve tea
indcoserve tea

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் 20 நாள்களில் 1,250 டன் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் ‘மவுண்டன் டீ’ என்ற பெயரில் தலா 250 கிராம் கொண்ட 50 லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இவை, 125 லாரிகளில் கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தேயிலையை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில், சிறு, குறு விவசாயிகளைப் பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த 1965ம் ஆண்டு இண்ட்கோ சர்வ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தேயிலைக் கூட்டுறவு நிறுவனமாக இது விளங்கி வருகிறது. இதன் கீழ் 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

indcoserve tea
indcoserve tea

இந்தத் தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் கிலோவுக்கும் அதிகமாக தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இண்ட்கோ சர்வ் நிறுவனத்தில் தற்போது 25 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு இண்ட்கோ சர்வ் மூலம் ஆண்டுக்கு 3 ஆயிரம் டன் ‘ஊட்டி டீ’ விநியோகம் செய்யப்படுகிறது.

indcoserve tea
indcoserve tea

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேரளா மாநில அரசு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேயிலைத் தூள் விநியோகம் செய்ய முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து 50 லட்சம் டீ தூள் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யுமாறு இண்ட்கோ சர்வ் நிறுவனத்திடம் கேரளா அரசு ஒப்பந்தம் செய்தது.

இதைத் தொடர்ந்து இண்ட்கோ சர்வ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 கூட்டுறவுத் தொழிற்சாலைகள் 20 நாள்கள் முழுமையாகச் செயல்பட்டு 1,250 டன் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டது. இவை தலா 250 கிராம் கொண்ட 50 லட்சம் பாக்கெட்டுகளாக தயாரிக்கப்பட்டன. பின்னர் லாரிகள் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இண்ட்கோ சர்வ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

tea estate
tea estate

இதுகுறித்து அரசு முதன்மைச் செயலர் மற்றும் இண்ட்கோ சர்வ் மேலாண்மை இயக்குநர் சுப்ரியா சாஹூ கூறுகையில், ``கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தேயிலைத் தூள் விநியோகம் செய்வதற்காக கேரளா அரசு 50 லட்சம் தேயிலைத் தூள் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் 20 நாள்களில் 1,250 டன் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் ‘மவுண்டன் டீ’ என்ற பெயரில் தலா 250 கிராம் கொண்ட 50 லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இவை, 125 லாரிகளில் கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படும் போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக இடைவெளி பின்பற்றுதல், கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் முகக் கவசம், கை கழுவ கிருமி நாசினிகள் வழங்கப்பட்டன. 50 சதவிகித தொழிலாளர்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

supriya sahu ias
supriya sahu ias

மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் ஒத்துழைப்புடன் தேயிலைத் தூள் பாக்கெட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறு தேயிலை விவசாயிகளும் இதற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இதன் மூலம் இண்ட்கோ சர்வ் வருவாய் ஈட்டியுள்ளதுடன், ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு உதவ வழி ஏற்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு