Published:Updated:

பசுமைப் புரட்சியின் அடுத்த அவதாரமா அக்ரிஸ்டேக்? - கம்பெனிகளைக் கங்காணியாக்கும் மத்திய அரசு!

விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயம்

எச்சரிக்கை

பசுமைப் புரட்சியின் அடுத்த அவதாரமா அக்ரிஸ்டேக்? - கம்பெனிகளைக் கங்காணியாக்கும் மத்திய அரசு!

எச்சரிக்கை

Published:Updated:
விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயம்

ந்தியக் கொள்கை வகுப்போர் மத்தியிலும், பல பெரு நிறுவனங்களின் மத்தியிலும் சமீபகாலமாக அடிக்கடி ஒலிக்கும் சொல் ‘அக்ரிஸ்டேக்’ (Agristack) தமிழில் சொல்வதென்றால் ‘விவசாயிகளின் விவரத் தொகுப்பு.’ இது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கும் இந்திய விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் உதவியாக இருக்கும் என்பது அவர்கள் வாதம்.

மத்திய அல்லது ஒன்றிய அரசு விவசாயிகள் நலனைவிட, பெரு வணிக நிறுவனங்களின் வளமே முக்கியம் எனக் கருதுகிறது. அதனால் பெருவணிகம் இப்போது கணினித் துறை உருவாக்கியுள்ள பல்வேறு நுட்பங்களைக் கொண்டு விவசாயத்தை ஒட்டு மொத்தமாகக் குத்தகை எடுக்க முயல்கிறது.இதன் தொடக்கம்தான் அக்ரிஸ்டேக்.

அது என்ன அக்ரிஸ்டேக்?

ஸ்டேக் என்பதற்கு ‘அடுக்கி வைத்தல்’ என்று பொருள். விவசாயி குறித்து விவரங்களை அடுக்கி வைப்பதால் அக்ரிஸ்டேக். அதாவது ‘விவசாயிகள் விவரத் தொகுப்பு.’ இந்திய விவசாயம் பச்சைப் புரட்சிக்குள் போனபோதே விவசாயிகள் வாழ்க்கை சூதாட்டமாக மாற்றப்பட்டது. இப்போது இன்னுமொரு சூதாட்டத்தில் இறக்கப் போகிறது ‘விவசாயிகள் விவரத் தொகுப்பு.’ டிஜிட்டல் விவசாயம் என்ற அடைமொழியோடு வருகிறது.

இந்த விவசாயச் சூதாட்டத்தில் ஒவ்வொரு விவசாயியின் விவரங்களைத்தான் அவர்கள் பயன்படுத்த போகிறார்கள். நிலம், அந்நிலத்தில் உள்ள நீர்வளம், மண்ணின் தன்மை, அதில் உள்ள ஊட்டச்சத்துகள், அந்த நிலமுள்ள வட்டாரத்தின் மழை நிலவரம், விவசாயியுடைய கடன், குடும்ப விவரம் உள்ளிட்ட பலவும் சேகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீடு, பிரதமரின் ஆண்டுக்கு ரூ.6,000 திட்டம், வங்கிக் கடன் எனப் பல வழிகளில் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு இந்த விவரங்களை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. மாறாக வணிகர்களுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இப்படி நமக்குத் தெரியாமலேயே சேகரித்த விவரங்களைத் தொகுத்து வணிகத்திற்குத் தேவையான வடிவத்தில் அமைக்க மத்திய அரசு ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு விவசாயியின் விவரங்களையும் பல்வேறு விதத் தொகுப்புகளாக மாற்றி வணிக நிறுவனங்களுக்கு விற்கும்.

பசுமைப் புரட்சியின் அடுத்த அவதாரமா அக்ரிஸ்டேக்? - கம்பெனிகளைக் கங்காணியாக்கும் மத்திய அரசு!

கங்காணியாகும் கம்பெனிகள்

உதாரணமாக, ஒரு வங்கி, விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதற்கு உரிய விவரத் தொகுப்புகளை ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும். கடன் கேட்கும் விவசாயி நிலத்தின் தண்ணீர் அளவு, அந்தப் பகுதியின் மழையளவு, அந்தப் பகுதியின் சராசரி விளைச்சல் போன்ற விவரங்களைக் கணினியில் பார்த்துவிட்டு, அதன் அடிப்படையில்தான் கடன் கொடுக்கலாமா, வேண்டாமா? என வங்கி மேலாளர் முடிவு செய்வார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒடிசாவின் கியான்ஞ்கர் ஆகிய இரு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் பயமுறுத்துகிறது. அங்கு கடன் கேட்ட 1,871 விவசாயிகளில் 7 பேருக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது என்கிறது ‘அக்ரி பின்டெக் இந்தியா’வின் (Agri Fintech India) புள்ளி விவரம்.

டிஜிட்டல் விவசாய விரிவாக்கம்

இனி பெரும் வணிக நிறுவனங்கள் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்திடம் நம்மைப் பற்றிய விவரங்களை வாங்கிக்கொள்ளும். அவை நாம் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கும். ‘என்னிடம் விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும்’ என்று சொல்லும். இதை டிஜிட்டல் விவசாய விரிவாக்கம் என்கின்றன அரசுகளும் பெரு வணிக நிறுவனங்களும்.

டிஜிட்டல் விவசாய விரிவாக்கம் என்பது சென்சார்கள், ரோபோக்கள் மூலம் நடக்கும் வேலை. ஆகாயத்தில் பறக்கும் விண்கலங்களில் உள்ள பல்வேறு சென்சார்கள் மூலம் நிலத்தின் ஈரப்பதத்தைக் கணக்கிடுவது, அந்த நிலத்திற்குரிய வானிலை நிலையைத் தொடர்ந்து கணித்துக் கொண்டேயிருப்பது, மண்ணின் ஊட்டச் சத்துகளைத் தொடர்ந்து அளவிட்டுக் கொண்டேயிருப்பது, நிலத்தில் உள்ள ஒவ்வொரு பயிரின் தேவை, ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றையும் கவனித்துக் கொண்டேயிருக்கும்.

‘‘அதிக விளைச்சல், அதிக வருவாய் என்ற மாயையைப் பரப்பிய ரசாயன விவசாயம் இப்போது கணினி அறிவு, செயற்கை அறிவு, ரோபோக்கள் உதவியுடன் புதிய சாகுபடி முறை, அதிக விளைச்சல் என பற்பல முகமூடிகளுடன் வருகிறது.’’

விவசாயிகளின் விவரங்களே

நிறுவனங்களின் மூலதனம்

இந்த டிஜிட்டல் விவசாய அறிவு, நம் ஒவ்வொருவருடைய கைப்பேசி வழியாகப் பில்கேட்ஸிடம் விவரங்களை வாங்கிய கம்பெனிகள்மூலம் நம் நிலத்திற்கு வரும். இப்படி வந்து சேரும் அறிவு சாதாரணமானதல்ல. ஒவ்வொரு விவசாயியின் புள்ளிவிவரத்தைக் கொண்டு அவர்களது விவசாயத்தைத் தங்கள் வசம் ஆக்கும் அறிவு. விவசாயிகள் பற்றிய விவரங்கள்தான் அவர்களின் மூலம்.

இதுமட்டுமல்ல, பில்கேட்ஸ், மனைவி மெலிண்டா பில்கேட்ஸ் (இவர்கள் விவாகரத்து அறிவித்து உள்ளார்கள்) இணைந்து நடத்தும் ‘பில்-மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ மூலம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழை விவசாயிகளின் வாழ்வை உயர்த்தும் ஆபத்பாந்தவனாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். அதே சமயம் அதன் மூலம் காசு பார்க்கவும் முயல்கிறார்கள். கேட்ஸ் தம்பதியினரின் பவுண்டேஷன் பல்வேறு வகைகளில் கைகோர்த்துள்ள சில நிறுவனங்கள் மான்சான்டோ, பேயர், சின்ஜென்டா, டூபான்ட்… சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது கூட்டாளிகள் பட்டியல்.

‘பில்-மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ 2006-ம் ஆண்டே ‘டிஜிட்டல் கிரீன்’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனமொன்றை இந்தியாவில் தொடங்கிவிட்டது. ‘டிஜிட்டல் கிரீன்’ பல்வேறு அதிநவீனத் தொழில் நுட்பங்களின் கூட்டு சக்தி, அடித்தட்டு அளவிலான அமைப்புகளின் கூட்டுறவுடன் இந்தியாவின் சிறு-குறு விவசாயிகளை வறுமையிலிருந்து விடுவிக்கும் என்று பறைசாற்றிக் கொள்கிறது. விவசாயிகளின் பிரச்னைகளைச் சிறு சிறு வீடியோக்களாகப் பதிவு செய்து அதற்கான தீர்வுகளையும் வீடியோக்களாகக் காட்டும் என்கிறது டிஜிட்டல் கிரீன்.

அறச்சலூர் ரா.செல்வம்
அறச்சலூர் ரா.செல்வம்

பசுமைப் புரட்சியின்

அடுத்த முகம் அக்ரி ஒன்!

1960-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பச்சைப் புரட்சி, வெற்றிக் கொடி நாட்டிவிட்டதாக இன்றளவிலும் பெருமதிப்படுகிறார்கள். இன்றைய பி.ஜே.பி அரசும் அதையே முன்மொழிகிறது. உண்மைதான்... அது வெற்றி பெற்றிருக்கிறதுதான். அதை வைத்து லாபமடைந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. ஆனால், இந்திய விவசாயமும், விவசாயிகளும் தோற்றுப்போய்விட்டனர். அந்தப் பச்சைப் புரட்சியின் கோரமுகம்... கொடூரமானது. இப்போது, பில் கேட்ஸுடன் கைகோத்து, ‘அக்ரி ஒன்’ என்கிற டிஜிட்டல் முகமூடி போட்டு அதே பச்சைபுரட்சியை இந்தியாவில் நடமாடவிடும் வேலையை ஆரம்பித்துள்ளார் திருவாளர் மோடி. அதிக விளைச்சல், அதிக வருவாய் என்ற மாயையைப் பரப்பிய ரசாயன விவசாயம் இப்போது கணினி அறிவு, செயற்கை அறிவு, ரோபோக்கள் உதவியுடன் புதிய சாகுபடி முறை, அதிக விளைச்சல் என பற்பல முகமூடிகளுடன் வருகிறது ‘அக்ரி ஒன்’.

இந்திய விவசாயிகளைக் குறி வைக்கிறார் பில்கேட்ஸ். இதிலிருந்து விவசாயிகள் வாழ்வு காக்கப்பட விவசாயிகள் மட்டுமின்றி மாநில அரசுகள், உள்ளாட்சி அரசுகளும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

அறச்சலூர் ரா.செல்வம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism