Published:Updated:

உள்ளூர் எண்ணெய்க்கு தடை... உலக எண்ணெய்க்கு வரவேற்பு!

எண்ணெய் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
எண்ணெய் அரசியல்

வரலாறு

உள்ளூர் எண்ணெய்க்கு தடை... உலக எண்ணெய்க்கு வரவேற்பு!

வரலாறு

Published:Updated:
எண்ணெய் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
எண்ணெய் அரசியல்

தமிழாக்கம்: பாலசுப்பிரமணியம் முத்துசாமி

ந்தியாவில் எண்ணெய்வித்துச் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. அதேநேரம் வெளிநாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும் அளவும் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் எண்ணெய் வித்துச் சாகுபடியில் தன்னிறைவு பெற்றிருந்த இந்தியா, இப்போது வெளிநாடுகளையே எதிர்பார்த்துள்ளது. தன்னிறைவு மறைந்து தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம்? இந்தக் கேள்விக்குப் பின்னணியில் இருக்கிறது மிகப்பெரிய அரசியல். இந்தியாவின் எண்ணெய் அரசியலைப் பற்றி, பி.எம்.வியாஸ், மனு கௌஷிக் ஆகியோர் ஆங்கிலத்தில் ‘தி வயர்’ இணையதளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கடந்த இதழில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சி இங்கே இடம் பெறுகிறது.

ஜூலை 1998-ம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சியின்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், கடுகு எண்ணெயில் ஏற்பட்ட கலப்படத்தால் (Argemone Adulteration Dropsy) தொற்றுநோய் பரவியது. இதனால் டெல்லியில் 60 பேர் இறந்தனர். மேலும் சுமார் 3,000 பேர் நோய்வாய்ப்பட்டார்கள். இந்தக் கடும் நிகழ்வு நாட்டின் கவனத்தைக் கவர்ந்தது. கடுகு எண்ணெய் விற்பனை செய்யும் அனைத்து உள்நாட்டு பிராண்டுகளும் உடனடியாகப் புறக்கணிக்கப்பட்டன. கடுகு எண்ணெயை உதிரியாக விற்பதுகூட தடைசெய்யப்பட்டது. தேசியப் பால்வள வாரியம், தன்னுடைய நம்பகமான ‘தாரா’ கடுகு எண்ணெயை வாங்க வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்க விளம்பரங்களை வெளியிட வேண்டியிருந்தது. பயந்துபோன நுகர்வோர், ‘தூய்மையான’, நறுமணமற்ற, நிறமற்ற, சுவையற்ற, சுத்திகரிக்கப்பட்ட என்று அறியப்படும் எண்ணெய்களுக்கு மாறினார்கள். எதிர்பாராததும் கணிக்க முடியாததுமான இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு, நாட்டில் சமையல் எண்ணெயின் சமூக-கலாசார சமையல், நுகர்வு முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

எண்ணெய் அரசியல்
எண்ணெய் அரசியல்

சுதேசித் தொழிலை அழிக்கும் சதி?

தொழில்துறையைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், இது உள்நாட்டு எண்ணெய் வகைகளைத் திட்டமிட்டு இழிவுபடுத்தி, இறக்குமதியை ஊக்குவிப்பதற்கான சதி என்று கருதுகிறார்கள். ‘ஆர்ஜீமோனால்’ மாசுபடுத்தப்பட்ட கடுகு எண்ணெய் என்பது புதிதல்ல. ஆனால், அதில் கலப்படம் ஒருபோதும் ஒரு சதவிகிதத்துக்கு மேல் இருக்காது. மேற்படி நிகழ்வில் ஆர்கெமோன், டீசல், கழிவு எண்ணெய் ஆகியவை 30 சதவிகிதம் வரை கலந்திருந்தன. அதாவது, உயிரைக் கொல்லும் அளவுக்குக் கலப்படம் இருந்தது. கலப்படத்தின் தாக்கம் அப்பட்ட மாகவும் விரைவாகவும் நிகழ்ந்தது. எனவே, இந்தத் துயரம் சாதாரணமானதொரு கலப்படத்தின் விளைவாக இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.

அன்றைய டெல்லி மாநில சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதுபோல, ஒழுங்கமைக்கப்பட்ட சதி வேலை இல்லாமல் இது நடந்திருக்கச் சாத்தியமில்லை. எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதற்கான தேசிய பால்வள வாரியத்தின் முயற்சிகள் தொடக்கத்திலிருந்தே எண்ணெய் உற்பத்தித் துறையின் பெரும்புள்ளிகளிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்து வந்தன. அதன் பாவ்நகர் எண்ணெய் உற்பத்தி ஆலை 1977 முதல் 1982 வரையில் 8 முறை மர்மமான தீ விபத்துகளைச் சந்தித்தது. மேலும், மூத்த நிர்வாகிகள் ஏ.ஏ.சோட்டானி, ஜி.எம்.ஜாலா ஆகியோர் கடுமையான விபத்துகளைச் சந்தித்தனர். இப்போதும்கூட, தேசிய பால்வள வாரியம், ஜி.சி.எம்.எம்.எஃப். ஆகியவற்றின் அதிகாரிகள், இந்தக் கலப்பட வழக்குக்காக நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்கிறார்கள். மேற்படிச் சரக்கை விற்பனை செய்த ஆலையின் உரிமையாளர்தான் இந்த வழக்கில் பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்டவர். ஆனால், அவர் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 2006-ம் ஆண்டு விடுவிக்கப் பட்டது ஒரு நகைமுரண்.

எண்ணெய் அரசியல்
எண்ணெய் அரசியல்

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வாஜ்பாய் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிராகரிக்கப் பட்ட ஒரு மில்லியன் டன் சோயாபீன்ஸ் விதைகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இதனால் உள்நாட்டு எண்ணெய்களின் விலை சரிந்தது. விவசாயிகளின் எதிர்ப்புகளை அரசு காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. விவசாயிகள் எண்ணெய் வித்துகள் பயிரிடுவதைக் கைவிட்டதால் எண்ணெய் வித்துச் சாகுபடி செய்யும் பரப்பளவு வெகுவாகக் குறையத் தொடங்கியது. கடுகு சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பு 1997-98-ம் ஆண்டு 7.04 மில்லியன் ஹெக்டேராக இருந்தது, 2003-04-ம் ஆண்டு 4.5 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்தது. 1997-98-ம் ஆண்டு 2 மில்லியன் டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதி 1998-99-ம் ஆண்டு 4.5 மில்லியன் டன்னாகவும், 2002-03-ம் ஆண்டில் 5 மில்லியன் டன்னாகவும் அதிகரித்தது. கலப்படச் சாவுகள் நிகழ்ந்து 20 ஆண்டு களுக்குப் பிறகு, 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 70 சதவிகிதம் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் பிரதானமாகப் பாமாயிலும், சோயாபீன்ஸ் எண்ணெயும்தான் இருந்தன. இரண்டுமே நம் நாட்டின் சமையல் வகைகளுக்கும் மக்களுக்கும் பழக்க மானவை அல்ல. இந்தியாவில் மக்கள் நுகரும் எண்ணெயில் 50 சதவிகிதம் பாமாயில். இது உலகத்திலேயே மிகவும் ஆரோக்கியமற்ற எண்ணெய்களில் ஒன்று.

‘‘எண்ணெய் வித்துகள் துறை, மீண்டெழுந்து தன்னிறைவு காணும் திறன் படைத்தது. ஆனால், இந்த வளர்ச்சி நீடிக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.’’

இறக்குமதியே சரணம்

ஆக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாடுபட்டு உருவாக்கிய ஒட்டுமொத்த உள்ளூர் எண்ணெய்க் கூட்டுறவுக் கட்டமைப்பையும், பல நூற்றாண்டுகளாக உருவாகிவந்த நாட்டின் பயிர் வளர்ப்பு முறையையும் ஒழித்துக்கட்டியது, ஒற்றைக் கொள்கை முடிவு. அதனால் உள்நாட்டுச் சமையல் எண்ணெய் விலை தேக்கமடைந்தன. அனைத்து கூட்டுறவுக் கூட்டமைப்புகளும் சீட்டுக்கட்டுகள் போலக் கலைந்தன. பெரும்பாலான கூட்டுறவு எண்ணெய் ஆலைகளை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றும் சில செயல்படாமல் வெறிச்சோடியிருக்கின்றன.

எண்ணெய் அரசியல்
எண்ணெய் அரசியல்


தேசிய பால்வள வாரியமும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட்டும் பிரிந்து, 2003-ம் ஆண்டு தாராவின் விநியோகத்தைப் பால்வள வாரியம் எடுத்துக்கொண்டது. பத்தாண்டுகளில் (1986-96) எண்ணெய் வித்து உற்பத்தியை 108 லட்சம் டன்னிலிருந்து 221 லட்சம் டன்னாக இரட்டிப்பாக்கிய நாடு, திடீர் சரிவைச் சந்தித்தது. நிலம், வளங்கள், ஆர்வமுள்ள விவசாயிகள், ஆயத்த நிலையில் உள்ள சந்தை, தன்னிறைவை அடைவதற்கான திறன் பெற்றவர்கள் அனைத்தும் இருந்தும், இன்று அதே நாடு காய்கறி எண்ணெயில் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக மாறியுள்ளது.

எண்ணெய் அரசியல்
எண்ணெய் அரசியல்

இந்த வெற்றிடம் ஆர்ச்சர் டேனியல் மிட்லாண்ட்ஸ் (ஏ.டி.எம்.), புங்கே, கார்கில், லூயிஸ் ட்ரேஃபஸ் ஆகிய உலகின் பெரிய நான்கு வேளாண் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களும், பிற அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவுக்குள் நுழைய வழிவகுத்தது. கார்கில் 2004-ம் ஆண்டு, பராக் ஃபுட்ஸ் நிறுவனத்துடன் கூட்டுத் தொழிலில் இறங்கியது. 2003-ம் ஆண்டில் யுனிலீவர் நிறுவனத்திடமிருந்து டால்டா பிராண்டை புங்கே வாங்கியது. ஐ.டி.சி அக்ரோடெக் நிறுவனத்திடமிருந்து பெரும்பான்மை பங்குகளையும், 2000-ம் ஆண்டில் ‘ரத்’ பிராண்டையும் கொனாக்ரா என்னும் பன்னாட்டு நிறுவனம் வாங்கியது.

அதானி பார்ச்சூன் ஆயிலை அறிமுகப் படுத்த, 1999-ம் ஆண்டில் வில்மருடன் 50 - 50 கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டது. இன்று இந்தியாவில் இறக்குமதியாகும் சமையல் எண்ணெயின் மூன்றில் ஒரு பங்கு அதானி வில்மரிடமிருந்து வருகிறது.

பாலசுப்ரமணியம் முத்துசாமி
பாலசுப்ரமணியம் முத்துசாமி
எண்ணெய் அரசியல்
எண்ணெய் அரசியல்

மீள வழி உண்டா?

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலில் 40 சதவிகிதம் மலேசியாவிலிருந்து வருகிறது. 2020, ஜனவரி 8 அன்று இந்திய வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம், பனை எண்ணெயைச் சுதந்திர வர்த்தகப் பட்டியலிலிருந்து கட்டுப் படுத்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370-ஐ விலக்கிக்கொண்டதையும் மலேசியப் பிரதமர் விமர்சித்ததற்கான எதிர் வினையாகவே அது தோன்றியது. அரசின் இந்த நடவடிக்கை பாமாயில் விலையும் அதன் விளைவாக இதர சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் உயர வழிவகுத்துள்ளது. இதனால் இவற்றை உற்பத்தி செய்வதில் கூடுதல் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதல் ஆதரவு விலை வழங்கப் பட்டதும் இதற்கு உதவிகரமாக அமைந்தது. 2020, செப்டம்பர் 4 அன்று வெளியான வேளாண் அமைச்சகத்தின் பயிர், பருவநிலை கண்காணிப்புக் குழுவின் (CWWG) அறிக்கை அந்த ஆண்டின் சம்பா பருவத்தில் ஒட்டுமொத்தப் பயிர்களின் வளர்ச்சி 6 சதவிகிதம், எண்ணெய் வித்துப் பயிர்களின் வளர்ச்சி 12 சதவிகிதம் என்று தெரிவித்துள்ளது. எண்ணெய் வித்துகள் துறை, மீண்டெழுந்து தன்னிறைவு காணும் திறன் படைத்தது. ஆனால், இந்த வளர்ச்சி நீடிக்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

*கட்டுரையாளர்கள் பி.எம்.வியாஸ், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட்டின் முன்னாள் நிர்வாக இயக்குநர். தாரா எண்ணெய் உற்பத்தியைத் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். மனு கௌஷிக் நிர்வாகவியல் துறையைச் சேர்ந்தவர். GCMMF லிமிடெட்டுடன் தொடர்புகொண்டவர்.ஒரு மில்லியன் டன் சோயாபீன்ஸ் விதைகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இதனால் உள்நாட்டு எண்ணெய்களின் விலைகள் சரிந்தன. இன்று இந்தியாவில் இறக்குமதியாகும் சமையல் எண்ணெயின் மூன்றில் ஒரு பங்கு அதானி வில்மரிடமிருந்து வருகிறது.

தமிழாக்கம்: பாலசுப்பிரமணியம் முத்துசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism