Published:Updated:

மஞ்சளாறு அணையை ஆய்வு செய்ய வரும் மும்பை நிறுவனம்..!- என்ன காரணம்?

மஞ்சளாறு அணையில் அதிக அளவு மணல் சேர்ந்திருப்பதாகவும், அதைத் தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மஞ்சளாறு
மஞ்சளாறு

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. தேனி மாவட்டத்தின் தேவதானப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மஞ்சளாறு அணையை நம்பியே உள்ளன. இந்த நிலையில், மஞ்சளாறு அணையில் அதிக அளவு மணல் சேர்ந்திருப்பதாகவும், அதை தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கொடைக்கானல் மலை
கொடைக்கானல் மலை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி விஜயகுமார், ``கொடைக்கானல் மலையில் உள்ள தலை மஞ்சளாறு என்ற இடத்தில் மஞ்சளாறு உற்பத்தியாகி, வழியில் சிறுசிறு ஓடைகளை அதனுடன் இணைத்து மஞ்சளாறு அணைக்கு வந்து கலக்கிறது.

அணையின் மொத்த உயரம் 57 அடி. கொள்ளளவு 487.35 மில்லியன் கனஅடி. மலையடிவாரத்தில் அணை அமைந்துள்ளதால் அதிகமான அளவு மணல் சேர்ந்துள்ளது. சுமார் 20 அடி முதல் 25 அடிவரையில் மணல் இருக்கலாம். மஞ்சளாறு அணையை தூர்வாரும் பட்சத்தில், சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு வளமான மண் கிடைக்கும். அணையில் அதிக அளவு தண்ணீர் தேக்கி, தேனி திண்டுக்கல் மாவட்ட விவசாய நிலங்களுக்குப் போதிய அளவு தண்ணீர் கொடுக்க முடியும்” என்றார்.

மஞ்சளாறு அணை
மஞ்சளாறு அணை

இது தொடர்பாக மஞ்சளாறு அணை அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, ``பொதுவாக அணையில் மணல் சேருவது வழக்கம். அதே நேரத்தில், அணையைத் திறந்துவிடும்போது தண்ணீரோடு மணலும் வெளியே செல்லும். அந்தவகையில் மஞ்சளாறு அணையில் 25 அடி அளவு மணல் சேர்ந்திருப்பது சாத்தியம் இல்லை. மஞ்சளாறு அணையில் எவ்வளவு மணல் சேர்ந்திருக்கிறது என ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை முடிவு செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றை ஆய்வுசெய்ய அழைத்திருக்கிறோம். அவர்கள் ஆய்வுசெய்து, அணையில் எத்தனை அடிக்கு மணல் சேர்ந்திருக்கிறது எனக் கூறுவார்கள். குறைந்தது இரண்டு மாதத்துக்குள் ஆய்வு செய்யப்பட்டுவிடும். பின்னர், அணையைத் தூர்வாருவது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும்.!” என்றார்.

விலகிய நண்பர்கள்... விரக்தியில் கொலை செய்த மாணவர்... கொடைக்கானல் சோகம்!