Published:Updated:

யார் இந்த `இடைத்தரகர்கள்’... மோடிக்கு இவர்கள் மீது ஏன் அவ்வளவு கோபம்?

Koyambedu Market
Koyambedu Market

ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையைச் செய்கிறோம். ஆனால், அந்த அரசாங்கமே நம்மை `இடைத்தரகர்' என்று சித்திரிக்கிறதே என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் வியாபாரிகள்.

`இடைத்தரகர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் விவசாயிகளிடமிருந்து காய்கறிகள், தானியங்கள், பழங்கள், பயறு வகைகள் உள்ளிட்டவற்றை வாங்கும் பெரிய மற்றும் சிறிய வியாபாரிகள்தாம். மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து வாங்கும் விவசாயப் பொருள்களை நுகர்வோரிடையே கொண்டுபோய் சேர்ப்பவர்கள்தாம் இவர்கள். இவர்கள் இல்லாமல், விவசாயிகளின் விளைபொருள்கள் விலைபோக வாய்ப்பே இல்லை என்பதுதான் நிஜம். ஆனால், பிரதமர் மோடி முதல் வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் எந்தத் தலைவர் பேசினாலும், ``இது இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை மீட்பதற்கான நடவடிக்கை" என்றே தொடர்ந்து பேசிவருகின்றனர்.

அரசாங்கமே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்தி பொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாங்கத்திடமிருந்து வியாபாரிகள் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து விற்க வேண்டும் என்பதுதான் காலகாலமாக விவசாயிகளின் எதிர்பார்ப்பு. ஆனால், உள்ளூர் வியாபாரிகளுக்குப் பதிலாக உலக வியாபாரிகளைக் களத்தில் இறக்கிவிடுவதற்கான முஸ்தீபுகள்தான் இந்த வேளாண் சட்டங்களின் நோக்கமே எனும்போது, வியாபாரிகள் மட்டுமல்ல, விவசாயிகளும் குமுறவே செய்கின்றனர். `இந்த வியாபாரிகளிடமாவது பேசி சமாளிக்கலாம். ஆனால், கார்ப்பரேட் வியாபாரிகள் வைத்ததே சட்டம் என்றாகிவிடும்’ என்பதுதான் அவர்களின் கவலையெல்லாம்.

காய்கறிச் சந்தை
காய்கறிச் சந்தை

அதேபோல, ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையைச் செய்கிறோம். ஆனால், அந்த அரசாங்கமே நம்மை இடைத்தரகர் என்று சித்திரிக்கிறதே என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் வியாபாரிகளும்.

விவசாயிகள் எளிதில் அணுகக்கூடிய இடத்திலும் அல்லது விவசாயிகளின் நிலம்தேடிச் சென்று வாங்கக்கூடிய வகையிலும் இருக்கும் வியாபாரிகள் தமிழகம் முழுவதுமே இருக்கிறார்கள். அதில் சிலரிடம் பேசினோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளி மொத்த காய்கறிகள் வியாபாரிகள் சங்க இயக்குநர் சாமிநாதனிடம் பேசியபோது, ``இன்றைய சூழ்நிலையில் சந்தை விவரங்கள் தெரியாத விவசாயிகளே இல்லை. சென்னையில் தக்காளி என்ன விலைக்கு விற்பனையாகிறது, மதுரை மார்க்கெட்டில் என்ன விலைக்கு காய்கறிகள் விற்பனையாகின்றன போன்ற விவரங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் தெரிகிறது. ஒரு நியாயமான விலையைச் சொல்லித்தான் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறோம். இந்த மார்க்கெட்டில் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் போன்ற பொருள்கள் விற்பனையாகின்றன. இதைக் கொண்டு வரும் விவசாயிகள் உடனடியாகப் பணம் கேட்கிறார்கள். நாங்கள் பொருளை அனுப்பி பணம் வருகிறதோ, இல்லையோ ஆனால், விவசாயிகளுக்கு பணம் கொடுத்துவிடுகிறோம். இடைத்தரர்கள் இல்லையென்றால் காய்கறிகள் எங்கேயும் செல்லாது. இதுவொரு டீம் வொர்க்.

சாமிநாதன்
சாமிநாதன்

விவசாயிகள் நிலத்திலிருந்து இங்கே கொண்டு வந்து கொடுக்கிறார்கள். நாங்கள் இங்கிருந்து சென்னைக்கு அனுப்புறோம். கோயம்பேட்டிலிருந்து அந்தந்தப் பகுதி வியாபாரிகளுக்குச் சென்று பிறகே நுகர்வோருக்குச் செல்கிறது. இதுவொரு தொடர் சங்கிலி வேலை. சந்தையைப் பொறுத்து ஒரேவொரு விஷயத்தைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். `விளைச்சல் அதிகரிக்கிறது என்றால் விலை குறையும். விலை அதிகரிக்கிறது என்றால் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது’ என்று அர்த்தம்.

ஒரு காய்கறிப் பயிர் வைப்பதற்கு முன்பே விவசாயிகள் ஒரு அட்வான்ஸ் தொகையை வாங்கிச் செல்கிறார். அந்த முறை விளைச்சல் நன்றாக இருந்தால் விளைபொருள் விலையிலிருந்து எடுத்துக்கொள்வோம். விளைச்சல் இல்லையென்றால் ஒன்றும் கேட்க முடியாது. இதுவொரு பரஸ்பர புரிதல்தான். இதே இடத்தில் ஒரு கார்ப்பரேட் வியாபாரி இந்த முறையை ஏற்றுக்கொள்வாரா?

இன்னொன்று எல்லா விவசாய பொருள்களுக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால், வேளாண் அதிகாரிகளை வைத்து உற்பத்தியைச் சரிபடுத்துங்கள். சந்தையில் ஒரு பொருளுக்கு நல்ல விலை விற்பனையாகிக்கொண்டிருந்தால், அதையே விளைவித்தால் உற்பத்தி பெருகி விலை குறைந்துவிடுகிறது. ஒவ்வொரு விவசாயியும் விதவிதமான காய்கறிகளைப் பயிர் செய்தால்தான் நல்ல விலை அனைத்துக் காய்கறிகளுக்கும் கிடைக்கும். இதை ஒழுங்குபடுத்த வேண்டிய வேலை வேளாண் அதிகாரிகளுடையுது. இந்தியாவில் 130 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்றால் ஓர் ஆண்டுக்கு எவ்வவவு கோதுமை விளைவிக்கணும், நெல் விளைவிக்கணும் என்று அரசுக்கு ஒரு புரிதல் இருக்கணும். அதற்கேற்ப சாகுபடிக்கு அனுமதிக்க வேண்டும். அதைவிடுத்து எல்லோரும் கோதுமை, நெல் மட்டுமே போடுவதால்தான் கோதுமை, நெல்லின் விலை மிகவும் குறைவாக விற்பனையாகிறது. இந்த நஷ்டம் விவசாயிக்குத்தான் போய் சேரும். இதனால் விவசாயியுடைய வாழ்வாதாரம் பறிபோய்விடுகிறது.

இரவு நேர சந்தை
இரவு நேர சந்தை

நாங்கள் கமிஷன் ஏஜென்ட்தான். இங்கே வாங்கும் விலைக்கு விவசாயிகளுக்கு உடனடியாகவோ, ஓரிரு நாளிலோ காய்கறி விற்பனைக்கான தொகையைக் கொடுத்துடணும். இல்லைனா, அடுத்த முறை வேறொரு கமிஷன் ஏஜென்ட்டை நோக்கிச் சென்றுவிடுவார். அதனால் கடன் வாங்கியாவது விவசாயிகளுக்குக் கொடுத்துவிடுகிறோம். எங்களுக்கு வித்த இடத்திலிருந்து பணம் வரும்போது அதைச் சரிசெய்கிறோம். இதைத்தவிர்த்து இடத்துக்கான வாடகை, கூலியாட்கள், லாரி வாடகை, இப்படி நிறைய இருக்கின்றன. இவையெல்லாம் போய் மிஞ்சுவதுதான் எங்களுக்கு வருமானம். இதற்கிடையிலும் இதைத் தொடர்கிறோம் என்றால் விவசாயிகளுக்கு எப்படி விளைவிப்பது தொழிலோ, அதுபோன்று எங்களுக்கு வாங்கி விற்பது ஒரு தொழில். அதை விடக்கூடாது என்பதாலேயே தொடர்கிறோம். எங்கள் வேலை விவசாயிகளைவிட அதிக சிரமங்கள் நிறைந்தது. அதைக் கூட இருந்து பார்க்கும்போதுதான் தெரியும். எங்களைப் போன்ற இடைத்தரகர்ளை ஒழித்தால், நடுத்தெருவில் நிற்பது நாங்கள் மட்டுமல்ல... விவசாயிகளும்தான். இதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஊரகப் பகுதிகளில் விவசாயிகளிடம் தானியங்கள், பயறு வகைகள் வாங்கும் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத வியாபாரியிடம் பேசியபோது, ``பெரும்பாலும் நாங்கள் வாங்குவது சிறு, குறு விவசாயிகளிடம்தான். அவர்கள் கால் ஏக்கர், அரை ஏக்கரில் விதைக்கும் கொள்ளு, அவரை, துவரை, எள், நிலக்கடலை, நெல்லை வாங்குகிறோம். விவசாயியிடம் ஒரு கிலோ தானியம் 20 ரூபாய்க்கு வாங்குவோம். எல்லா தானியங்களையும் வாங்கி, ஒரு டன் சேர்ந்த பிறகு அருகிலுள்ள சந்தைக்கு எடுத்து செல்வோம். சந்தையில் 25 ரூபாய்க்கு விற்போம். ஒரு டன் வித்தா 5,000 ரூபாய் கிடைக்கும். அதுல கேட் பாஸ், ஏத்துக் கூலி, இறக்குக்கூலி, வண்டி வாடகை, போக்குவரத்து செலவுனு 3,500 ரூபாய் செலவாகும். எங்களுக்கு 1,500 ரூபாய் கையில் நிக்கும்.

லோடு வண்டிகள்
லோடு வண்டிகள்
`கார்ப்பரேட்களின் கை ஓங்கும்!' - 3 மசோதாக்கள் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

இந்த வேலை நடக்கிறதுக்கே ஒரு வாரம் ஆகும். விளைச்சல் நல்லபடியா இருந்தா வருமானம் கூடும். மத்தபடி விவசாயிகளுக்கும் வியாபாரிகளோட கஷ்ட நஷ்டங்கள் தெரியுறதாலதான் யாரும் அதட்டி எங்களுக்கு இவ்வளவு கொடுனு கேக்கிறதில்ல. எங்ககிட்ட வாங்கிக்கிற வியாபாரி இருப்பு வெச்சு நல்ல விலை வரும்போது விற்பார். இல்லைனா கிடைக்கிற விலைக்கு வித்துட்டு போயிடுவார். எந்த வியாபாரியும் கொள்ளை லாபம் சம்பாதிச்சத நான் பார்க்கல. விவசாயி உழைப்பை முதலீடா போடுறார், வியாபாரி பணத்தை முதலீடா போடுறார் அவ்வளவுதான் வித்தியாசம்” என்றார்.

கோயம்பேடு மொத்த உருளைக்கிழக்கு வியாபாரிகள் சங்கத் தலைவரும், கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க ஆலோசகருமான சௌந்தரராஜன் பேசியபோது, ``வியாபாரிகள் விஷயத்தில் அரசு மேலோட்டமாகவே பார்க்கிறது. சென்னையில் 40 லட்சம் மக்களுக்கு காய்கறி, பழங்களை சப்ளை செய்கிறோம். அரசு கூட்டுறவு சொசைட்டிகள், தனியார் சூப்பர் மார்க்கெட்களால் முடியாததைக் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு தோராயமாக 10,000 டன் காய்கறிகள் வருகின்றன. பகலில் மார்க்கெட்டைத் திறந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று இரவு 3 மணியிலிருந்து காலை 10 மணி வரை சந்தை இயங்குகிறது.

சௌந்தரராஜன்
சௌந்தரராஜன்

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் இரவு நேரங்களில்தான் சந்தை நடைபெறுகிறது. இந்தத் தொழிலை நம்பி சுமார் 7 லட்சம் வியாபாரிகள் இருக்கின்றனர். இடைத்தரகர் என்று ஒற்றைச் சொல்லால் எங்கள் தொழிலை கேவலப்படுத்துகிறார்கள். எளிதில் அழுகிவிடும் காய்கறிகள், பழங்களை உரிய நேரத்தில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறோம். ஒரு அரசே நினைத்தாலும் இப்படியோர் அமைப்பை உருவாக்க முடியாது. மிகவும் குறுகிய இடத்தில் துர்நாற்றத்திலும் சகிக்காமல் வியாபாரம் செய்து வருகிறோம்.

அரசு சார்பாக உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஒன்றிரண்டு தவிர, தமிழ்நாட்டில் எதுவும் வெற்றியடையவில்லை. ஏனென்றால் விவசாயிகள் வேலையில் பிரதானமானது விளைபொருள் உற்பத்திதான். எங்களைப் போன்ற வியாபாரிகள்தாம் பொருள்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றனர். எங்களை இடைத்தரகர்கள் என்று முத்திரை குத்தி மக்களிடத்தில் ஒரு மோசமான பார்வையைக் கொண்டு வந்துவிட்டனர். நாங்கள் விவசாயிகளுக்கு எதிரி இல்லை. பிரதமரோ, முதல்வரோ இதுபோன்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திருமழிசை சந்தை
திருமழிசை சந்தை
பா.காளிமுத்து

இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். விலை உயர்வு என்பது தனிப்பட்ட ஒரு வியாபாரியிடத்தில் இல்லை. ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கும் டிமாண்டைப் பொறுத்தது. டீசல் விலை உயர்வு, சுங்க வரி, லாரி வாடகை என்று பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் தினம்தோறும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்று காய்கறிகளைக் கொண்டு வருகிறோம். மக்களின் உணவுத்தேவை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இங்கே காய்கறிகள் விற்று கமிஷன் ஏஜென்டுகளுக்குப் பணம் போனால் மட்டுமே அங்கே விவசாயிகளிடத்தில் எளிதில் பொருள்களை வாங்குவார்கள். இப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வியாபார அமைப்புகளைக் கொச்சைப்படுத்தி அழித்துவிட்டு என்ன புதிய முறையை மோடி கொண்டு வரப் போகிறார் என்று தெரியவில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு