Published:Updated:

சொந்த பிரச்னையால் விவசாயிகளை வஞ்சிக்கிறாரா நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ?

கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள்

2014-ல் ஆற்றிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் இருந்து போர் போட்டு தண்ணீர் எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஜி.ஓ உள்ளது. அதனடிப்படையில்தான் குழாய் அமைத்துள்ளோம் என்றோம். அவரோ ஒரே முடிவாக நீதிமன்றத்தை நாடுங்கள் எனக் கூறிவிட்டார்.

சொந்த பிரச்னையால் விவசாயிகளை வஞ்சிக்கிறாரா நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ?

2014-ல் ஆற்றிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் இருந்து போர் போட்டு தண்ணீர் எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஜி.ஓ உள்ளது. அதனடிப்படையில்தான் குழாய் அமைத்துள்ளோம் என்றோம். அவரோ ஒரே முடிவாக நீதிமன்றத்தை நாடுங்கள் எனக் கூறிவிட்டார்.

Published:Updated:
கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள்

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் மதுரையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனுமதி இல்லாமல் ஆற்றில் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது எனக் குற்றம்சாட்டி, விவசாயிகளைத் திருடர்கள் எனக் கூறியது பெரும் சர்ச்சையானது. தற்போது அதே விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுப்பது அமைச்சரின் ஈகோ பிரச்னைதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை முல்லை பெரியாறு ஆற்றில் இருந்தும், ஆற்றின் கரையோரங்களில் போர் அமைத்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு ஆயக்கட்டு இல்லாத பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகத் தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழாய்களை அகற்றும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 

குழாய்கள் அகற்றும் பணி
குழாய்கள் அகற்றும் பணி

இந்நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ``குழாய்கள் அகற்றப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்" என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். 

இதுகுறித்து விவசாயிகளிடம் பேசினோம். ''உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளின் மேடான தெற்கு பகுதிகளுக்கு போர் அமைத்து குழாய் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக பைப் லைன் பதித்து தண்ணீர் கொண்டு செல்ல முடியாது என்பதற்காக 5 முதல் 10 பேர் சேர்ந்து குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்கிறோம். 

விவசாயிகள்
விவசாயிகள்

விவசாயிகள் தனித்தனியாக இதைச் செய்ய முடியாது என்பதால் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிச்சைகனி என்பவர் பைப் லைன் அமைத்துக் கொடுத்தார். இந்த பைப் லைன் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்துக்குச் சொந்தமான கருங்கட்டான் குளத்தில உள்ள நிலம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டது. இதைப் பழனிவேல் தியாகராஜனின் அண்ணன் விஜயராஜன் எதிர்த்தார். இதற்காகப் போடப்பட்ட கூட்டத்தில் பிச்சைகனி தரப்பினர் விஜயராஜனை கடுமையாக விமர்சித்தனர். 

இதையடுத்து விஜயராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பைப் லைன்களை அகற்ற உத்தரவு பெற்றார். உத்தரவின் அடிப்படையில் குழாய்களை அகற்றாத மாவட்ட நிர்வாகம் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனால் தற்போது முதற்கட்டமாக 47 பைப் லைன்கள் அகற்றப்பட்டுள்ளன.

குழாய் அகற்றும் பணி
குழாய் அகற்றும் பணி

அனைத்து பைப் லைன்களும் அகற்றப்படாமல் இருக்க அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகனை சந்தித்து பேசினோம். அவர்கள் நிதியமைச்சரிடம் பேசி பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டனர். இதையடுத்து நிதியமைச்சரைப் பார்க்க நடையாய் நடந்து ஒருவழியாக அப்பாயின்ட்மென்ட் வாங்கி பார்க்கச் சென்றால், 'இது தொடர்பாக என்னிடம் பேசுவதும் ஒன்று, இந்தச் சுவரைப் பார்த்து பேசுவதும் ஒன்று' எனக் கூறி எழுந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் முறையிட்டோம். அவரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதல்வரிடம் முறையிடுங்கள் எனக் கூறிச் சென்றதால் விவசாயிகள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், எவ்வளவோ முயன்றும் முதல்வரை சந்திக்க முடியவில்லை'' என்றனர்.

தேனி மாவட்ட கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி, ``முல்லை பெரியாறு ஆற்றில் தண்ணீர் திருடி அதை வணிகநோக்கில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் பி.டி.ஆர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிடிஆரின் அண்ணன் விஜயராஜன் வந்திருந்தார். அவரிடம்  யார் தவறாகப் பேசியிருந்தாலும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தவறாகப் பேசியவர்களையும் மன்னிப்பு கேட்க வைக்கிறோம் என்றோம். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

நாராயணசாமி
நாராயணசாமி

2014-ல் ஆற்றிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் இருந்து போர் போட்டு தண்ணீர் எடுத்து விவசாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஜி.ஓ உள்ளது. அதனடிப்படையில்தான் குழாய் அமைத்துள்ளோம் என்றோம். அவரோ ஒரே முடிவாக நீதிமன்றத்தை நாடுங்கள் எனக் கூறிவிட்டார். நீதிமன்றத்தை நாடினால் ஆண்டுகள் பல ஆகும். இப்போதே 47 பைப் லைன்களை உடைத்துவிட்டார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான ஏக்கர் கருகிவிட்டது. அனைத்து பைப் லைன்களை உடைத்து விட்டால் 5,000 ஏக்கர் கருகிவிடும். தீர்ப்பு வரும் வரையாவது பைப் லைன்களை அகற்றுவதை நிறுத்துங்கள் எனக் கெஞ்சினோம் அதையும் அவர்கள் ஏற்கவில்லை'' என்றார். 

விஜயராஜனிடம் பேசினோம். ``பிச்சைகனி என்னை அவமதித்துவிட்டார். அதனால் ஏற்பட்ட ஈகோவால் தான் பிரச்னை என்பதெல்லாம் இவ்விவகாரத்தை திசை திருப்புவதற்கான வேலை. முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் திருடப்படுவது உண்மை. அதற்கான ஆதராங்களை சமர்ப்பித்துவிட்டேன். அதேபோல போர் போட்டு தண்ணீர் எடுத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள். அதுவும் சட்டவிரோதமாகத்தான் நடக்கிறது. குறிப்பாக, மின் இணைப்பு பெறுவதற்காக அதிக நிலத்தை வாங்கி, இணைப்பு பெற்றவுடன் ஒன்றிரண்டு சென்ட் நிலத்தை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள நிலத்தை விற்றுவிடுகின்றனர். 

லோயர்கேம்ப் முல்லை பெரியாறு
லோயர்கேம்ப் முல்லை பெரியாறு

குடிநீர் இணைப்பு என 2 குழாய்களுக்கு அனுமதி பெற்று கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஏராளமான குழாய்களை சாலையோரங்களில் பதித்துள்ளனர். இதன்மூலம் மணிக்கு 50,000 வரை நீர் விற்கப்படுகிறது என்பதற்தான ஆதாரங்களும் உண்டு. தொடர்ந்து 24 மணி நேரமும் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கருங்கட்டான்குளம் பகுதியில் உள்ள விவசாயம் பாதிக்கிறது. இதனால் சிறுவிவசாயிகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதையெல்லாம் குறிப்பிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில் தவறான தகவல் எதுவும் கொடுக்கவில்லை. தவறு செய்துவிட்டோம் என்பதற்காக, சம்பந்தப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள முடியாமல் பேச்சுவார்த்தைகாக அமைச்சர்களை அணுகி வருகின்றனர்'' என்றார். 

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை

நிதியமைச்சரிடம் விளக்கம் பெற முயன்றோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. 

கூடலூர் அருகே தொண்டமான்துறை பகுதியில் முல்லை பெரியாறு ஆற்றில் தடுப்பணை கட்டி சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட மேடான பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கடந்த அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில் தி.மு.க ஆட்சி வந்ததும் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்குரிய நிதியை ஒதுக்கி அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.