Published:Updated:

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குப் பலன் தருமா?

நெல் வயல்
நெல் வயல்

மத்திய அரசு நெல், பருத்தி உள்ளிட்ட விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நேற்று உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளது, மத்திய அரசு. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நடப்புப் பயிர் ஆண்டுக்கான (2020-21) நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டால் ஒன்றுக்கு 53 ரூபாய் அதிகரித்து, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,868 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களுக்கான விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.

நரேந்திரசிங் தோமர்
நரேந்திரசிங் தோமர்

''விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (சிஏசிபி) பரிந்துரையின் அடிப்படையில், 14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, இந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.1,868 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லின் ஆதரவு விலை அதிகரிப்பு விவசாயிகளுக்கு ஏற்படும் செலவைவிட 50 சதவிகிதம் வருமானத்தை உறுதி செய்யும். கடந்த ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு 1,835 ரூபாயாக இருந்தது. அது தற்போது 1,868 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.260 அதிகரித்து, 2020-21-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .5,515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 342 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு எதிராக, இந்த ஆண்டு 360 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் விஷயத்தில், கடந்த ஆண்டு 90 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு எதிராக 95 லட்சம் மெட்ரிக் டன்னாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது'' என்று விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், இது விவசாயிகளிடம் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

தூரன் நம்பி
தூரன் நம்பி

இது தொடர்பாகப் பேசிய விவசாய சங்க பிரதிநிதி தூரன் நம்பி, ''குறைந்தபட்ச ஆதரவு விலையில் இரட்டை வேடம் போடுகிறது மத்திய அரசு. 2004-ம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு 9000 பக்கத்தில் அறிக்கைகளைச் சமர்ப்பித்தது. சராசரி உற்பத்திச் செலவைவிட 50 சதவிகிதம் கூடுதல் விலையைக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றது அந்த அறிக்கை. ஆனால், இன்று வரை அந்த அறிக்கை செயல்பாட்டுக்கு வரவில்லை. 2009-ம் ஆண்டு இதைச் செயல்படுத்தக்கோரி, டெல்லியில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க-வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின்போது எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையைச் செயல்படுத்துவோம் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது பா.ஜ.க. ஆனால், கடந்த ஆட்சியிலும் அதைச் செயல்படுத்தவில்லை. இந்த ஆட்சியிலும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. ஆனால், விவசாயிகளுக்காக மாபெரும் சேவை செய்தது போல, வரலாற்றுச் சாதனை செய்தது போல வெற்று அறிக்கைகளில் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

பருத்தி
பருத்தி

விவசாய விளைபொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம் என்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், விவசாயி சொல்லும் விலையைக் கொடுத்து வாங்க வியாபாரிகள்தான் இல்லை. இதை மத்திய அரசு புரிந்துகொள்ள மறுக்கிறது. தற்போதும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது வெறும் கண்துடைப்புதான். நெல்லுக்கு 3000 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுபடியாகும். ஆனால் இன்னும் 2000 ரூபாயைக் கூட தொடவில்லை அரசின் அறிவிப்பு. இது போலத்தான் இருக்கிறது அனைத்து அறிவிப்புகளும். குளிர்பதன கிடங்கு, சேமிப்புக் கிடங்கு இவை அனைத்தும் வியாபாரிகளுக்குத்தான் பயன்படுகிறதே தவிர விவசாயிகள் யாருக்கும் பயன்படவில்லை.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகளுக்கு சாதகமாகவே உருவாக்கப்படுகின்றன. இது, முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரான செயல்.
தூரன் நம்பி

மாநிலங்கள் முழுக்க எங்கு வேண்டுமானாலும் விளைபொருள்களை விற்பனை செய்யலாம் என்கிறார்கள். உள்ளூர் சந்தையிலேயே விற்பனை செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள் விவசாயிகள். இதில், மாநிலம் விட்டு மாநிலம் எவ்வகையில் சாத்தியம்? ஆக, மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகளுக்குச் சாதகமாகவே உருவாக்கப்படுகின்றன. இது, முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரான செயல். விவசாயிகளின் அடிப்படை கோரிக்கைகளைச் சிறிதும் நிறைவேற்றாமல், மாபெரும் சாதனை செய்ததாக விளம்பரங்களை ஏற்படுத்த நினைக்கிறது மத்திய அரசு. இது, விவசாயிகளை மேலும் வேதனைப்படுத்துகிறது'' என்றார்.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

இது தொடர்பாகப் பேசிய தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர், சுந்தர விமலநாதன், ''குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இதுவரை விவசாயிகளுக்கு நியாயமானதாக இல்லை. நேற்று அறிவித்த அறிவிப்பும் பெரிய அளவில் பயன்படும் என்று சொல்ல முடியாது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். அதை ஏன் இந்த அரசு செய்ய மறுக்கிறது என்பது மாபெரும் கேள்வியாக இருக்கிறது. 20 லட்சம் கோடியில் செய்த அறிவிப்புகள் அனைத்துமே வெற்று அறிவிப்புகள்தான். அதனால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அதைப் போன்ற ஒரு அறிவிப்பாகத்தான் நேற்றைய அறிவிப்பையும் பார்க்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு