Published:Updated:

நிலம் எங்கள் உரிமையென உரத்துச் சொன்ன விவசாயப் போராளி –சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள் |பகுதி 14

சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்
News
சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்

``சிவரக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் உணவுப்பொருள்கள் யாவும் அவ்விடங்களிலேயே விளைகின்றன. அப்படியிருக்கும்போதும் அரசாங்கம் அந்நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்வது ஏன் என்பது புரியவில்லை” என்கிறார் அவர்.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.

நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை

நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்?

எப்படி விற்க முடியும்? நல்ல வேடிக்கை.

காற்றின் தூய்மையும், தண்ணீரின் ஒளியும்,

எங்களுடைய தனிச்சொத்துகளல்ல

பிறகு அவற்றை எப்படி நீ வாங்க முடியும்..?

பூமியின் ஒவ்வொரு துகளும் எங்களின் மக்களுக்குப் புனிதமானது.

மனிதன் பூமிக்குச் சொந்தமானவன்

பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல..."

- செவ்விந்தியர்களின் தளபதி 'சியாட்டில்' உரை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனிதன் பூமிக்குச் சொந்தமானவன். இந்த ஒற்றைக் கருத்தை வலியுறுத்தி உலகம் முழுதும் போராட்டங்களும் பேரணிகளும் வெவ்வேறு வகையில், வெவ்வேறு மனிதர்களால் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இயற்கையுடன் இயைந்து வாழ்ந்துவந்த மனிதன் அதன் கொடைகளைத் தனது உரிமையாக எண்ணி இயற்கை வளங்களைச் சுரண்டத் தொடங்கினான்.

மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் அதிகார மையங்களாக உருவெடுத்து, நகர் சீரமைப்பு, வேலைவாய்ப்பு, அந்நிய முதலீட்டுக் கொள்கை, சிறப்புப் பொருளாதார மேம்பாட்டுக் கொள்கை என வசீகரமான பெயர்கள் சூட்டி விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வணிகம் செய்வதற்கு வசதியாக, நிலங்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு விவசாயிகளையும் நெசவாளர்களையும் கூலித் தொழிலாளர்களாக மாற்றும் அவலமும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்
சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்

தமிழகமெங்கும் உள்ள தரிசு நிலங்களில் SIPCOT மற்றும் SEZ (சிறப்புப் பொருளாதார மையம்) அமைத்து அந்நிய முதலீட்டைப் பெருக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அரசு முடிவு செய்தது வரவேற்புக்குரிய நடவடிக்கைதான் என்றாலும் களத்தில் பெரும்பாலும் அவ்வாறு நிகழ்வதில்லை. விவசாய நிலங்களை கையகப்படுத்தி தனியார் கல்லூரிகள் பள்ளிகள் கட்டவும், அவற்றினருகே வணிக நிறுவனங்கள் அமைத்து லாபமீட்டுவதுமே இந்தத் திட்டங்களின் மறைமுக நோக்கமாக இருக்கின்றன.

மாநிலத்தின் விவசாய நிலங்களை பயணங்களின்போது கடக்க நேரிடும்போதெல்லாம் ஒரு காட்சி என்னைப் பெரும் வியப்புக்குள்ளாக்குவதுண்டு.

கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை வயல்களும், குளங்களும் இருக்க நடுவே ஆங்காங்கே பிரமாண்ட கட்டடங்களைக் காண முடிகிறது. ஏதேனும் ஒரு தனியார் ரெசிடென்ஷியல் பள்ளியோ அல்லது பொறியியல், நர்ஸிங் கல்லூரி என்றோ பெயரிடப்பட்டிருக்கும். அக்கம் பக்க கிராமங்களிலிருந்து யாரும் இந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ வந்து படிக்கப்போவதில்லை. அப்படியிருக்க, யாருக்காக இத்தனை பெரிய கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன என்ற கேள்விக்கு அனைவருக்கும் பதில் தெரிந்திருந்தாலும் மெளன சாட்சிகளாகவே இருந்துவிடுகின்றனர்.

எனது சொந்த ஊரான திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அரசாங்கம் சிப்காட் மற்றும் சிறப்பு பொருளாதார மையம் அமைப்பதை எதிர்த்துத் தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் கண்டவர் சிவரக்கோட்டை இராமலிங்கம் அவர்கள். ஐயா நம்மாழ்வரின் வழித்தோன்றல்களில் ஒருவரான இராமலிங்கம் நீண்டகாலமாக விவசாயிகளுக்கான பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர்.

சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்
சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்

பாண்டிய மன்னன் தன் நோய் தீரும் பொருட்டு சிவரக்கோட்டையில் வந்து வாழ்ந்ததாகவும், நோய் விலகியதும் சிவரக்கோட்டைக்குப் பல கொடைகள் வழங்கி சிறப்பித்ததாகவும் வரலாறு சுட்டுகிறது. அடிப்படையில் சாதாரண விவசாயியான ராமலிங்கம், சூழலியல் சார்ந்த போராட்டங்களில் தன்னை நீண்டகாலமாக ஈடுபடுத்திவருகிறார்.

மேதா பட்கர் உட்பட இந்தியாவின் முக்கியமான களப்போராளிகளுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவரைப் பார்க்கும் எவருக்கும் இவர்தானா இத்தனை போராட்டங்களை நடத்தியவர் என ஆச்சர்யமாக இருக்கும்.

சிவரக்கோட்டை கரிசல்கலாம்பட்டி சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் தொழிற்துறை பூங்காவை அமைக்க 1,478 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உத்தரவிட்டது. தனித்துவமான கரிசல் மண்கொண்ட இந்நிலத்தில் சிறுதானியங்கள் செழித்து வளரும். அதுமட்டுமின்றி மான்கள், காட்டுப் பன்றிகள் உட்பட வனவிலங்குகளும் அதிகமிருக்கும் பகுதி. தொழிற்துறை பூங்கா உருவாகும்பட்சத்தில் இந்தப் பகுதியின் சூழலியல் இயக்கத்தில் பெரும் மாற்றம் நிகழும்.

இன்னொருபுறம் திருமங்கலத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலேயே கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை இருக்கிறது. திருமங்கலம் சுற்றுவட்டார கிராமப் பகுதி மக்கள் பெரும்பாலும் இந்த தொழிற்பேட்டைக்குத்தான் வேலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலையில் விவசாய நிலங்களை அழித்து உருவாகப்போகும் சிப்காட் யாருக்கானது என்பதுதான் இராமலிங்கம் மற்றும் அவரோடு இணைந்து போராடிய விவசாயிகளின் கேள்வி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கண்ணுக்கெட்டும் தூரம் வரை நன்செய் பயிர்களும், அதேயளவு புன்செய் தாவரங்களும் வருடம் முழுவதும் சிறப்பான முறையில் இங்கு விவசாயம் தழைத்தோங்கியிருக்கும்போதும் இந்த நிலங்களைத் தரிசு நிலமாக அறிவித்து நிலங்களைக் கையகப்படுத்தும் அரசாணை அப்பகுதி மக்களுக்குப் பேரதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது.

சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்
சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்
நிலங்களில் பத்து சதவிகிதம் விவசாயம் நடந்தாலே அந்நிலத்தை விவசாய நிலமாகக் கருத வேண்டும் என்ற சட்டம் இருக்கும்போது,

நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமான நிலம் விவசாயத்துக்கு பயன்படும்போது சிவரக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை தரிசு நிலமாக அறிவித்ததன் பின்னணியில் இருக்கும் பெருமுதலாளிகள் ஈட்டப்போகும் லாபத்தையும், அதற்கு அரசு துணை போகும் அவலத்தையும் பகிரங்கமாக எதிர்த்து போராடிய திரு.சிவரக்கோட்டை இராமலிங்கம் அவர்களின் பேச்சின் தெளிவும் சிந்தனையின் ஆழமும்கொண்ட கொள்கையில் அவர் காட்டும் தீவிரமும் அவரை அப்பகுதி விவசாயப் பெருமக்களின் தலைவராகவே காட்டுகிறது.

``சிவரக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் உணவுப் பொருள்கள் யாவும் அவ்விடங்களிலேயே விளைகின்றன. அப்படியிருக்கும்போதும் அரசாங்கம் அந்நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்வது ஏன் என்பது புரியவில்லை” என்கிறார் அவர். விவசாயம் மட்டுமல்லாமல் பல வனவிலங்குகள் வாழும் இடமாகவும் அப்பகுதி இருப்பதால் இத்தகைய திட்டங்களை அமல்படுத்துவது முற்றிலுமாக சூழலியல் இயக்கத்தையே பாதிக்கும் அளவுக்கு பாதகமான செயலாகும்.

வேலைவாய்ப்பு வழங்குதல், வாழ்வியல் சூழ்நிலைகளை மேம்படுத்துதல் போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளால் ஏழை, எளிய விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்று அந்நிறுவனங்களில்

அவர்களைத் தொழிலாளர்களாக பணியமர்த்தி வேடிக்கை பார்க்கும் அதிகார வர்க்கத்தின் கயமையை எவ்வித சமரசமுமின்றி தொடர்ந்து வெளிச்சமிட்டுக் காட்டியவர் இராமலிங்கம் அவர்கள்.

2009 -ம் வருடத்தின் தொடக்கத்தில் சிவரக்கோட்டை ஆற்றை ஒட்டி புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி கட்டப்பட்டது. ஒரு பெரிய அரசியல் தலைவருக்குச் சொந்தமான அந்தக் கல்லூரி ஆற்றை ஒட்டிய கோயிலின் நிலத்தையும் ஆக்ரமித்திருந்தது. இதை எதிர்த்து போராட்டங்களைத் தொடங்கியதோடு இராமலிங்கம் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். அன்றைய காலத்தில் அவர் எதிர்கொண்ட மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் ஏராளம். எந்த நொடியிலும் கொல்லப்படலாம் என்னும் சூழ்நிலையிலும் அவர் தனது போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. அதே காலகட்டத்தில்தான் சிப்காட்டுக்கு எதிரான போராட்டங்களையும் அவர் தொடர்ந்து நடத்திவந்தார். பல சமயங்களில் எளிய மனிதர்களின் போராட்டங்கள் போராட்டங்களாகவே முடிந்துபோகின்றன. ஆனால் இராமலிங்கத்தின் போராட்டம் வெற்றியில் முடிந்தது. முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட அந்தக் கல்லூரியைத் திறக்கக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்
சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்

இதற்காக உச்ச நீதிமன்றம் வரை போராடினார் அவர். இந்த வழக்கில் மட்டுமின்றி சிப்காட்டுக்கு எதிரான போராட்டத்திலும் அவருக்கே வெற்றி கிட்டியது. இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் வென்றதற்கு முக்கியக் காரணம் அவருக்குத் துணையாக நின்ற அந்தப் பகுதி விவசாய மக்கள்தான். அவரை ஒழித்துக்கட்ட அவர்மீது ஏராளமான அவதூறுகளும் பொய்வழக்குகளும் போடப்பட்ட நிலையில் அவர் எதற்கும் அடிபணியவில்லை. வழக்கில் வென்றாலும் அவருக்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறைந்திருக்கவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் அவரை அழைத்து துப்பாக்கிப் பயிற்சி அளித்து, பாதுகாப்புக்குத் துப்பாக்கியும் வழங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஒன்றிய அரசை எதிர்த்து நடந்த இந்திய விவசாயிகளின் பெரும் போராட்டத்தை இவ்விடத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியோடு இருந்த அரசின் மனவுறுதியைக் கலைக்க விவாசயிகளுக்கு ஓராண்டுக்கும் மேல் தேவைப்பட்டிருக்கிறது.

சூழலியலைப் பேசாமல் இனிவரும் காலத்தின் அரசியலுக்குச் சாத்தியமில்லை என்னும் சூழலில் விவசாய நிலங்களின் மீதும், விவசாயிகளின் மீதும் தொடரும் தாக்குதல்கள் ஓய்வதாகயில்லை.

போராட்டங்களும் வெற்றிகளும் தற்காலிகமானவையே என்கிற அச்சத்தை மட்டுமே நமக்குத் தருகிறது. டெல்டா பகுதி முழுக்க இயற்கை வாயு எடுப்பதற்கான கிணறுகள் தோண்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இரண்டு நாள்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்திலும் பத்து இடங்களில் இயற்கை வாயு எடுப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. விவசாய நிலங்களை அபகரித்து, அவற்றின்மேல் தொழிற்சாலைகளை அமைப்பதென்பது நமது வாழ்க்கை முறையை நாமே முற்றாக அழிப்பதற்குச் சமம்.

சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்
சிவரக்கோட்டை மு.இராமலிங்கம்| இவர்கள்

2005 -ம் வருடத்தில் சிவரக்கோட்டையிலுள்ள கண்மாய் மரங்களைச் சிலர் வெட்ட முயன்றனர். மான்கள் அதிகமுள்ள பகுதியென்பதால் மரங்களை வெட்டக் கூடாதென உள்ளூர் மக்களை இணைத்துப் போராடியவர், அதற்காக வழக்கு தொடர்ந்து வெற்றியும்பெற்றார். இன்று வரையிலும் வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து போராடிவருகிறார். இந்தப் பகுதியில் தொடர்ந்து மான்கள் சாலையைக் கடக்க முயலும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்துபோகும் துயரம் நடப்பதால் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டுமென்பது இவரின் கோரிக்கை. இதற்காகவும் நீண்டகாலமாக போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.

தன் சொந்த ஊர் விவசாயிகளுக்காகவும், விவசாய நிலங்களுக்காகவும் மட்டுமல்லாமல், எங்கெல்லாம் விவசாயிகளுக்கு இடர்ப்பாடுகள் வருகின்றனவோ அங்கெல்லாம் தனது ஊர் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராடச் செல்கிறார். தேனி மாவட்டத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும், டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களிலும் தீவிரமாகக் கலந்துகொண்டவர் திரு இராமலிங்கம். `மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் வகுத்து மேம்படுத்த வேண்டுமேயன்றி, விவசாயிகளை வாட்ச்மேன்களாகவும், பல்பொருள் அங்காடிகளின் பணியாளர்களாகவும் மாற்றுவது எவ்விதத்தில் நியாயம்?’ என்ற அவரின் கேள்விக்கு நம் யாரிடமும் பதில் இல்லை.

(இவர்கள்... வருவார்கள்)