Published:Updated:

ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மை... பெயர் சொல்லாத மோடி பெருந்தன்மை காட்டிய பாலேக்கர்

ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மை...
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மை...

நிகழ்ச்சி

"விவசாயத்தில் தவறுகளைக் களைய வேண்டிய நேரம் இது. நம் விவசாயிகள் இயற்கை வேளாண்மை முறைக்குத் திரும்ப வேண்டும். இதை வெற்றிகரமாகச் செய்யத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டாம். செலவு குறைந்த இயற்கை உரங்களை பயன் படுத்துங்கள்’’ என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நடைபெற்ற `ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ கருத்தரங்கில் காணொலி மூலமாகக் கலந்து கொண்டபோதுதான் பிரதமர், இப்படிப் பேசியுள்ளார்.

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இயற்கை விவசாயிகள் பல ஆண்டு களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். 2007-ம் ஆண்டு முதல் `பசுமை விகடன்’ இதழ் இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல துணை நின்றது.

நாட்டின் பல மாநிலங்களில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை விவசாயிகள் பின்பற்றி வருவதை அறிந்த மத்திய அரசு, `நிதி ஆயோக்’ மூலம் சுபாஷ் பாலேக்கருக்கு அழைப்பு விடுத்து அவரின் ஆலோசனை களைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய பட்ஜெட்டில், ``2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் துக்குத் திரும்பப்போகிறோம்” என்று 2019-20-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

 பிரதமர் மோடி உரையாடியபோது
பிரதமர் மோடி உரையாடியபோது

இத்தனை ஆண்டுகள் கிடப்பில் கிடந்த, இந்த அறிவிப்புக்கு இப்போது உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் என்பதால்கூட இருக்கலாம். இப்போதாவது கையில் எடுத்தார்களே என்று மகிழ்வோம். சரி, குஜராத்தில் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை குறித்த நிகழ்ச்சி பெரிய அளவில் நடக்கிறதே... இதை அறிமுகப்படுத்திய சுபாஷ் பாலேக்கரை அழைத்தார்களா? என்று அறிந்துகொள்ள அவரைத் தொலை பேசியில் அழைத்தால், மனிதர் பொங்கித் தீர்த்துவிட்டார்.

``எந்த விதமான கட்டணமும் பெறாமல், விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுப்பதை வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். இந்த இயற்கை விவசாயத் தொழில்நுட்ப முறையை உருவாக்க நான் 12 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்திருக்கிறேன். மகாராஷ்டிராவில் காட்டில் வாழும் ஆதிவாசிகளுடன் சேர்ந்து வாழ்ந்து இவ்வளவையும் கற்றுக்கொண்டேன். பிறகு, என் கிராமத்துக்குச் சென்று ஆராய்ச்சி களைத் தொடர்ந்து செய்தேன். இப்படித் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கண்டு பிடிக்கப்பட்டதுதான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம். தற்போது, இந்தத் தலைப்பைப் பலரும் விரும்பவில்லை. ஏனெனில், இந்த நுட்பத்தில் ஊடுபயிர்களால் கிடைக்கும் வருமானம் பிரதான பயிரின் சாகுபடி செலவை ஈடு செய்வதால், முன்பு `ஜீரோ பட்ஜெட்’ எனப் பெயர் வைத்திருந் தேன். ஆனால், நெல் சாகுபடி செய்யும்போது அதில் ஊடுபயிர்களைச் சாகுபடி செய்ய முடிவதில்லை. இதனால், பிரதானப் பயிருக்காகச் செய்யும் செலவை, செலவுக் கணக்காகவே கொள்ள வேண்டியுள்ளது. அதனால், இதை ஜீரோ பட்ஜெட் என்று சொல்ல இயலாது என்பது உண்மையே.

அதனால், 2018-ம் ஆண்டு முதல் என்னுடைய இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களுக்கு, `சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்’ என்று பெயர் மாற்றியுள்ளேன். இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களை உருவாக்க மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு அதிகப்படியான உழைப்பைக் கொடுத் துள்ளேன். ஆனால், நான் கண்டு பிடித்த இயற்கை விவசாயத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய பெயரைப் பயன்படுத்து வதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதனால்தான், என் பெயரையே இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்துக்கு வைக்க வேண்டியிருக்கிறது.

சுபாஷ் பாலேக்கர்
சுபாஷ் பாலேக்கர்

தற்போது சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் என்ற பெயரை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனி அனைவரும் இந்தப் பெயரையே பயன்படுத்துமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறேன். இமாசலப் பிரதேச அரசுகூட `சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண்மை’ என்று தான் பயன்படுத்தி வருகிறது. `நிதி ஆயோக்’ அமைப்புக்கும் பல முறை பெயர் மாற்றம் குறித்துக் கடிதம் அனுப்பினேன். அதன் பிறகும்கூட, `ஜீரோ பட்ஜெட்’ என்பதை `சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண்மை’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு முன்வரவில்லை.

அரசியல் லாபத்துக்காக என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மத்திய பி.ஜே.பி அரசுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கட்சிக்கு முன்பு ஜனசங்கம் என்று தான் பெயர். பின்னாளில்தான், பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப் பட்ட பிறகும், ஜனசங்கம் என்று பழைய பெயரையே ஊடகங்கள் பயன்படுத்தினால் விடுவீர்களா?

விவசாயிகளின் ஆதரவை மட்டும் பின்புலமாகக் கொண்ட என்னையும் என் தொழில்நுட்பத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இருட்டடிப்பு செய்துள்ளது.

எனவே, மேடைக்காகவும் அரசியலுக் காகவும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக வெற்றுக் கூச்சலும், போலி நாடகமும் வேண்டாம். கொஞ்சமாவது உண்மையாக விவசாயிகளுக்கு உதவுங்கள். என் பெயரைக் குறிப்பிடாமல் விட்டால் கூடப் பரவாயில்லை. விவசாயிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் சென்று சேர்ந்தால் போதும். இயற்கை வேளாண்மை மட்டுமே, எக்காலத்துக்கும் விவசாயிகளுக்கு உதவும். விவசாயிகள் கடன் பெறாமல் விவசாயம் செய்ய இதுவே சிறந்த வழி. இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக மட்டுமல்ல. பல மடங்காக மாற்ற முடியும். விவசாயிகளே, அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்; இயற்கை வேளாண்மையை நம்புங்கள்’’ என்று சொல்லி முடித்தார் சுபாஷ் பாலேக்கர்.

குஜராத் நிகழ்ச்சி அறிவிப்பு, நிகழ்ச்சி நிரல், ஊடங்களுக்கான செய்திக் குறிப்பில் ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ (Zero Budget Natural Farming) என்றுதான் குறிப்பிடப்பட்டன.

பழைய பெயரைப் பயன்படுத்தக் வேண்டாம். `சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண்மை’ என்று குறிப்பிடுங்கள் என்று நிகழ்ச்சிக்கு முதல் நாள் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பினார், சுபாஷ் பாலேக்கர். சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஓர் இடத்தில்கூட ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை என்ற பெயரையோ, சுபாஷ் பாலேக்கர் பெயரையோ பயன்படுத்தவில்லை. மாறாக, ‘இயற்கை வேளாண்மை’ என்பதை மட்டுமே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.