Published:Updated:

காரைக்கால்: `விவசாய மானியங்களில் தலைவிரித்தாடும் ஊழல்!’ - துணைநிலை ஆளுநருக்குப் பறந்த புகார்

ஊழல்
ஊழல்

காரைக்கால் : விவசாய மானியங்கள் பெறுவதில் ஊழல் - நடவடிக்கை எடுக்க இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் துணைநிலை ஆளுநருக்குப் புகார் அனுப்பியுள்ளது.

விவசாய மானியங்கள் பெறும் செயல்முறையில் ஊழல் மற்றும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் துணைநிலை ஆளுநருக்குப் புகார் அனுப்பியுள்ளது.

காரைக்கால்: `விவசாய மானியங்களில் தலைவிரித்தாடும் ஊழல்!’ - துணைநிலை ஆளுநருக்குப் பறந்த புகார்

இது பற்றி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க மாநிலத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமாரிடம் பேசினோம். ``நெல் அறுவடைக்குப் பிறகு அந்தத் தரிசு நிலத்தில் காய்கறி மற்றும் எள் பயிர்கள்  சாகுபடி  செய்ய விவசாயிகளுக்குப் புதுச்சேரி அரசின் வேளாண்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த மானியம் பெறுவதற்குச் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் மட்டும் கிராம நிர்வாக அலுவலர் சான்று கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆனால், காய்கறி பயிர் செய்துள்ள  விவசாயிகளிடம் வருவாய்த்துறையின் கிராம நிர்வாக அலுவலர் சான்று கேட்கப்படவில்லை. அரசியல் பின்னணி காரணமாக இந்தப் பாரபட்சம் என்று கருதப்படுகிறது.

அண்மையில் வீரியம் அடைந்த கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்ட கடுமையான தடைகளை  அமல்படுத்தும் பணியில் தற்போது வருவாய்த்துறையினர்  ஈடுபட்டுவருவதால், எள் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழை எளிதாகப் பெற இயலவில்லை. அதைப் பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதாகவும், மேலும் லஞ்சம் கொடுத்தால்தான் அந்தச் சான்று விரைவில்  கிடைக்கும் நிலை உள்ளதாகவும்  விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

ஊழல்
ஊழல்

மானிய விண்ணப்பப்  படிவத்தில் நில ஆவணச் சான்று அல்லது  வருவாய்த்துறையின் சாகுபடி சான்று அல்லது அடங்கல் ஆகியவற்றின் சுயசான்று ஒப்பமிட்ட நகல்களைப் பூர்த்தி செய்து  விண்ணப்பத்துடன் இணைத்துத் தரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வருவாய்த்துறையின் சாகுபடிச் சான்றை மட்டும் கட்டாயப்படுத்துவது தவறான உள்நோக்கத்தையே காட்டுகிறது.

மேலும், விவசாயத்துறையின் விரிவாக்கப் பணியாளரும்  நிலத்தைப் பார்வையிட்டு எள் சாகுபடி செய்ததை உறுதி செய்திருக்கிறார். பிறகு எதற்கு வருவாய்த்துறையின் சாகுபடிச் சான்று? விவசாயத்துறையின் விரிவாக்கப் பணியாளர்களின் நன்னடத்தைமீது அந்தத்துறையின் அதிகாரிகளுக்கே சந்தேகமா?

எனவே, ஒரு ஏக்கருக்கு 6,500 ரூபாய் மானியம் பெறும் காய்கறி விவசாயிக்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று தேவையில்லை என்றும், ஏக்கருக்கு ரூ.2,000 மட்டுமே  மானியமாகப் பெறும் எள் விவசாயிக்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று கட்டாயம் என்றும், அதை விவசாயிகள் பெற  வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை வேளாண்துறை அதிகாரிகள் மறைமுகமாக ஊக்குவிப்பது ஒரு ஊழல்.

வேளாண் விரிவாக்கப் பணியாளர் ஆய்வு செய்து கொடுத்த  அறிக்கையை வேளாண் அலுவலர்  பார்வையிட்டு சாகுபடி சான்று கொடுத்தாலே போதும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஒரு மானியம் பெற இரு துறைகளுக்கு அலைக்கழிக்கக் கூடாது என்பது நியாயமானதே. தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றிவிட்டு, தவறு செய்யாத விவசாயிகளை தண்டிப்பது கொடுமை. இந்தநிலை மாற வேண்டும்.

எண்ணெய் வித்துகள் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக சமையல் எண்ணெயின் விலை கிடுகிடு என்று உயர்ந்துவருகிறது. இந்தநிலையில், நல்லெண்ணெய் தயாரிக்கத் தேவைப்படும் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளை வேளாண்துறை மானியம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். மாறாக, முட்டுக்கட்டை போடுகிறது. எனவே, துணைநிலை ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உடனே தீர்வுகாண வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் புகார் கொடுத்துள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு