Published:Updated:

நல்லதல்ல!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நல்லதல்ல!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.’

கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில்தான் இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்து பல நாள்கள் கடந்தும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இதற்காக உரக்கக் குரல் கொடுத்ததுபோல தெரியவில்லை. ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்’ என்பதுபோல்தான், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளது. முல்லை பெரியாறு அணை குறித்த எந்தத் தகவல் வந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்களை மூடிக்கொள்கிறார்கள். காவிரி ஆற்றில் பிரச்னை என்றால், காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகள் நெருப்புக்கோழிபோல தலையை மண்ணில் புகுத்திக் கொள்கின்றன. ஆனால், கர்நாடகாவிலும் கேரளாவிலும் தண்ணீர் பிரச்னை என்றால், அனைத்துக்கட்சிகளும் இணைந்து குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இங்குதான், அரசியல் கட்சியினர் நவகிரகங்கள்போல ஆளுக்கொரு திசையில் திரும்பி நிற்கிறார்கள். இதற்குக் காரணமில்லாமல் இல்லை.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான், மேக்கேதாட்டூவில் அணை கட்ட அச்சாரம் போடப்பட்டது. அதைச் செயல்படுத்தி பெயர் வாங்கத் துடிக்கிறது பி.ஜே.பி.

‘‘அணை கட்டுவதற்காகப் பாதயாத்திரை சென்றோம்; தேவைப்பட்டால் மீண்டும் செல்வேன்’’ என, அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா சொல்லியிருக்கிறார்.

சரி, இப்போது ஏன் அணை விஷயத்தில் கர்நாடக அரசு, அதிக அக்கறை காட்டுகிறது என்றால், எல்லாம் ஓட்டு அரசியல்தான். கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அப்போது, வாக்குகளை அறுவடை செய்யத்தான், ‘அணை கட்டுவோம்,’ ‘பாதயாத்திரை செல்வோம்...’ என வேஷம்கட்டி வருகிறது. இத்தனைக்கும் அணைப் பிரச்னை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

அணைகட்ட முடியாது என்று தெரிந்தும்கூட, அம்மாநிலக்கட்சிகள் அதை வைத்து அரசியல் செய்கின்றன. ஆனால், எதிர்ப்பு தெரிவித்துத் தன் உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழ்நாடு அமைதி காத்து வருவது, தமிழக விவசாயத்துக்கு நல்லதல்ல!

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism