Published:Updated:

தென்பெண்ணை ஆற்றில் 162 அடி உயர அணை, அத்துமீறிய கர்நாடகா; அதிர்ச்சியில் தமிழகம்!

யார்கோள் அணை
யார்கோள் அணை

தென்பெண்ணை ஆற்றில், கர்நாடக அரசு அத்துமீறி கட்டியிருக்கும் பெரிய அணையால், தமிழகத்துக்கு சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம், நந்தி மலையில் உற்பத்தியாகும் `பெண்ணையாறு’ தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில், `தென்பெண்ணையாறு’ என்று அழைக்கப்படும் இந்த ஆற்றை நம்பி, சுமார் 40,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கர்நாடக மாநிலத்துக்குள் 112 கிலோ மீட்டர் மட்டுமே ஓடும் தென்பெண்ணை ஆறு தமிழகத்துக்குள் சுமார் 320 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பாய்கிறது.

இந்நிலையில், காவிரி நீரை அபகரிப்பதைப்போல், தென்பெண்ணையாற்று நீரையும் கர்நாடகப் பகுதிகளுக்குள்ளேயே திருப்பிவிட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக, தென்பெண்ணையாற்றின் துணை ஆறாக உள்ள மார்கண்டேய நதியில் பெரிய அணையைக் கட்டி முடித்திருக்கிறது, கர்நாடக அரசு.

அணைக்குச் செல்லும் வனப்பகுதி
அணைக்குச் செல்லும் வனப்பகுதி
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்... வெறும் பூச்சாண்டி காட்டுகிறதா கர்நாடகா? - விளக்கும் பொறியாளர்

இந்த மார்கண்டேய நதி, கர்நாடக எல்லைப் பகுதியான, முத்தியால் மடுகு மலைப்பகுதியிலுள்ள ஓடைகளில் உருவாகிறது. அங்கிருந்து, கே.ஜி.எஃப், பங்காருபேட்டை வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தீர்த்தம் பாலனப்பள்ளி, சிக்கரிப்பள்ளி வழியாக மாரசந்திரம் தடுப்பணைக்கு வருகிறது. இங்கிருந்து செல்லும் தண்ணீர், எண்ணெகொல்புதூர் என்னும் பகுதியில், தென்பெண்ணை ஆற்றுடன் கலக்கிறது.

வேப்பனஹள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாச்சிக்குப்பம் கிராமத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மேல் காட்டுப்பகுதி வழியாகச் சென்றால் கர்நாடக மாநில வனப்பகுதியான `யார்கோள்’ என்ற இடம் வருகிறது. மார்கண்டேய நதியில் பாயும் தண்ணீரை மொத்தமாக சேமித்து வைக்க, யார்கோள் பகுதியிலுள்ள பள்ள முகட்டில்தான்தான் புதிய பாதை அமைத்து 430 மீட்டர் நீளம் 162 அடி உயரத்தில் பெரிய அணை கட்டப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில், தமிழக அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத வகையில், மதகுகளின்றி நீர் தேக்கும் வகையில், பெரிய தடுப்பணை வடிவில் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த அணையிலிருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டுச்செல்ல குழாய்கள் பதிக்கும் பணியும் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த அணையால், தென்பெண்ணை ஆற்றிலிருந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கும் நீர்வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை நீரை நம்பியுள்ள ஆறு மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த அணை கட்டும் விவகாரத்தில், முந்தைய அ.தி.மு.க அரசு மெத்தனமாக செயல்பட்டதாக விவசாய சங்கங்கள் கொதிக்கின்றன. விவசாய சங்கங்களின் தொடர் போராட்டத்தையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2012, 2013-ம் ஆண்டுகளில் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

யார்கோள் அணை
யார்கோள் அணை

``தென்பெண்ணை ஆற்றில் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல், கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உட்பட எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்திலும், தென்பெண்ணை ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில், தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’’ என்று கர்நாடக அரசுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள், யார்கோள் அணை விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. சரியான வழக்கறிஞரையும் நியமனம் செய்யவில்லை. தமிழக அரசு முன்வைத்த வாதமும் எடுபடவில்லை. இதனால், 2019-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதியன்று, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், ``தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டவும் தடையில்லை’’ என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல் முறையீடும் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், அணை கட்டுமானப் பணியை கர்நாடகா விரைவுப்படுத்தியது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்பாட்டில், 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், தமிழகம் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் யார்கோள் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய, கர்நாடக அரசு அதிகாரிகள், கர்நாடக மாநிலத்திலுள்ள கோலார், பங்காருபேட்டை, மாலூர் உட்பட 45-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்க இந்த அணை கட்டப்படுவதாகத் தெரிவித்தனர்.

யார்கோள் அணை
யார்கோள் அணை
தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை... முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா? - எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

அதன்பிறகு, கொரோனா பொதுமுடக்கம் நிலவியதால், யார்கோள் அணை தொடர்பான விவாதமும் முடங்கியது. தொடர்ந்து, தமிழக சட்டசபைத் தேர்தல் வந்ததாலும், இந்த விவகாரம் பேசப்படவில்லை. இந்த விவகாரத்தில், அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி என்னவென்றால், கர்நாடக அரசு கட்டியுள்ள யார்கோள் அணையின் கட்டுமான பணிக்குத் தேவையான எம்-சாண்ட், சிமென்ட், கம்பி ஆகிய கட்டுமானப் பொருள்கள் தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் நடத்தும் ஆலையிலிருந்துதான் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. கர்நாடக அரசின் இந்த அத்துமீறலால், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டமும் கேள்விக்குறியாகியிருக்கிறது. தற்போது, ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க அரசு, மேக்கேதாட்டூ அணை விவகாரம் போன்றே தென்பெண்ணை விவகாரமும் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு