Election bannerElection banner
Published:Updated:

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்... வெறும் பூச்சாண்டி காட்டுகிறதா கர்நாடகா? - விளக்கும் பொறியாளர்

காவிரி ஆறு
காவிரி ஆறு

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்துவதற்காக கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்திருக்கிறது.

100 ஆண்டு கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 14,000 கோடி ரூபாய் செலவில் காவிரி உபரி நீரை புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், தென்மாவட்ட மக்களும் காவிரி நீரைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ள உதவியாக இருக்கும். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் கர்நாடகத்தில் இத்திட்டத்திற்க எதிர்ப்பு கிளம்பி வருகிறது. முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் முதல்வர் எடியூரப்பாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். "காவிரியின் உபரி நீரை தமிழகம் பயன்படுத்த உரிமையில்லை. இதற்காக சட்டப் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருத்திருந்தார்.

காவிரி குண்டாறு திட்ட தொடக்க விழா
காவிரி குண்டாறு திட்ட தொடக்க விழா

இதற்கடுத்து கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரைச் சந்தித்தப் பின் அளித்துள்ள பேட்டியில், "காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தடை கோருவோம். தமிழக அரசு வருகிற தேர்தலுக்காக இதை செய்திருக்கிறது. காவிரியின் உபரி நீரைப் பயன்படுத்த மேகதாதுஅணையை கட்டும் முயற்சியில் இருக்கிறோம். இந்த அணையை கட்டியே தீருவோம். அதனால், தமிழகம் காவிரியின் உபரி நீரைப் பயன்படுத்தும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விட மாட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக மூத்த பொறியாளர் அ.வீரப்பனிடம் பேசியபோது, "கர்நாடகா பயம் காட்டுகிறது. இதற்குத் தமிழகம் பணிந்து போய்விடக் கூடாது. காவிரியின் குறுக்கே எந்த மாநிலமும் அணை கட்டக்கூடாது என்பதுதான் சட்டமே ஒழிய, காவிரி ஆற்றிலிருந்து உபரியாக கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு செல்ல எந்தத் தடையும் இல்லை. நாம் மேகதாது அணையை எதிர்க்கிறோம் என்றால், அது காவிரியின் குறுக்கே கட்டப்படுகிறது என்பதால்தான். ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கும், ஆற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு செல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கர்நாடகம் சும்மா பூச்சாண்டி காட்டுகிறது.

வீரப்பன்
வீரப்பன்

சட்ட விதிகள் தெரியாமல் கர்நாடக அரசியல்வாதிகள் வீர வசனம் பேசுகிறார்கள். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் தமிழகத்தில் நீண்டகாலமாக செயல்படுத்த இருந்த திட்டம். இது தேர்தல் காரணங்களுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருந்தாலும் திட்டத்தின் தேவை மிகவும் முக்கியமானது. இதை தடுத்து நிறுத்துவதற்கு கர்நாடகாவுக்கு உரிமையில்லை. கர்நாடகாவின் சட்ட முயற்சியை எதிர்கொள்ள தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு