ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

மலைப்பூண்டு... கொடைக்கானலின் தனித்துவ அடையாளமும் விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பும்..!

மலைப்பூண்டு...
பிரீமியம் ஸ்டோரி
News
மலைப்பூண்டு...

கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள... மன்னவனூர், பூம்பாறை, குண்டுப்பட்டி, கவுஞ்சி, பூண்டி, கூக்கால் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங் களில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பில் மலைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது. கொடைக்கானல் மலையின் சீதோஷ்ண நிலை மற்றும் மண் வளத்தின் காரணமாக இங்கு விளைவிக்கப்படும் மலைப்பூண்டு தனித்துவத்துடன் திகழ்வதால், இதற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், மலைப் பூண்டு சாகுபடி செய்யும் இப்பகுதி விவசாயிகளை, சமீபகாலமாக கமிஷன் மண்டிக்காரர்கள் தங்களுடைய பிடியில் வைத்துக் கொண்டு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால், இனிவரும் காலங்களில் கொடைக்கானலில் மலைப்பூண்டு உற்பத்தி என்பதே இல்லாமல் போய்விடும் என விவசாயிகள் மத்தியில் ஆதங்கம் நிலவுகிறது.

மலைப்பூண்டு...
மலைப்பூண்டு...

இப்பகுதியில் மலைப்பூண்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி சந்தைக்குக் கொண்டு வந்து அங்குள்ள கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்வது வழக்கம். அங்கிருந்துதான் பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் முதல் பூண்டு சந்தை என்ற பெருமை கொண்ட வடுகபட்டி சந்தையில் பூண்டு ஏலம், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகிறது. அங்குள்ள கமிஷன் மண்டிக் காரர்கள், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு நியாயமான விலை கொடுக்காததோடு வேறு சில நெருக்கடிகளையும் ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி செல்லையா, ‘‘மலைப் பூண்டு சாகுபடி செய்ய, ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ விதைப் பூண்டு தேவைப்படுது. ஒரு கிலோ விதைப்பூண்டு விலை 120 - 200 ரூபாய். இதுக்கு விவசாயிங்க மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியதிருக்கு. பெரும்பாலான விவசாயிங்க, வடுகபட்டி கமிஷன் மண்டிக்காரங்ககிட்டதான் விதைப் பூண்டு கடனுக்கு வாங்குறாங்க. அதைப் பயிர் பண்ணி, விளைவிச்ச பூண்டை, விவசாயிங்க, வடுகபட்டி கமிஷன் மண்டிக்காரங்க கிட்டதான் விற்பனை செஞ்சாகணும். அதைப் பயன்படுத்திக்கிட்டு. ரொம்பக் குறைவான விலையை நிர்ணயம் செஞ்சு விவசாயிங்க வயித்துல அடிக்குறாங்க. இது ஒருபக்கம்னா, கமிஷன் மண்டிக் காரங்ககிட்ட, விதைப்பூண்டு கடனுக்கு வாங்காத விவசாயி களுக்கும்கூட நியாயமான விலை கிடைக்குறதில்லை. வேற எங்கயும் கொண்டு போயி விற்பனை செய்ய விவசாயிங்களுக்கு வழியில்லை. கமிஷன் மண்டிக்காரங்ககிட்ட கடனுக்கோ, காசு கொடுத்தோ... விவசாயிங்க விதைப் பூண்டு வாங்கினாதான், அவங்க விளைவிக்குற பூண்டை கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்ய முடியும்.

செல்லையா
செல்லையா

கொடைக்கானல் மலைக்கிராமங்கள்ல உள்ள 90 சதவிகித விவசாயிகள் இப்படிதான் நெருக்கடிகளைச் சந்திச்சுக்கிட்டு இருக்காங்க. அதுவும் இந்தப் பகுதிகள்ல ஒரே நேரத்துல நிறைய விவசாயிங்க மலைப்பூண்டு அறுவடை செய்ற சமயத்துல. ஒரு கிலோவுக்கு 50 ரூபாய்க்கும் கீழ விலையைக் குறைச்சிடுறாங்க. வடுகபட்டி சந்தையில 60 - 100 கடைகள் செயல்படுது. எல்லாருமே பேசி வச்சுக்கிட்டு, எந்தளவுக்கு முடியுமோ, அந்தளவுக்கு விலையைக் குறைச்சு நிர்ணயம் செய்றாங்க.

நிலத்தை உழவு செஞ்சு, அடியுரம் போட்டு, விதை நடவு செய்றதுல ஆரம்பிச்சு... மேலுரம், பூச்சி, நோய்த்தடுப்பு, களையெடுப்பு, பாசனம், அறுவடை, ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி உட்பட ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கு. இயற்கை இடர்ப்பாடுகள், பூச்சி, நோய்த் தாக்குதல்... இதுல இருந்தெல்லாம் தப்பிச்சு வந்து, ஏக்கருக்கு 500 கிலோவுக்கு மகசூல் கிடைச்சாகணும்... அதேசமயம், தரமான பூண்டுக்கு கிலோவுக்கு 400 ரூபாய் விலை கிடைச்சாதான், விவசாயிங்களுக்கு நஷ்டம் ஏற்படாம இருக்கும். ஆனா, இந்த விலை கிடைக்கிறதுங்கறது அரிதுதான். விளைச்சல் ரொம்ப குறைவாக இருக்குறப்ப மட்டுமே 400 ரூபாய் கிடைக்கும்.

மலைப்பூண்டு வயல்
மலைப்பூண்டு வயல்

வடுகபட்டி சந்தைக்கு மாற்றா, வேறொரு சந்தை தொடங்கணும்னு விவசாயிங்க வலியுறுத்தினதால, சில வருஷங்களுக்கு முன்னாடி, தமிழக அரசு சார்புல, பட்டி வீரன்பட்டியில பூண்டு சந்தை தொடங்கப் பட்டது. சரியான திட்டமிடல் இல்லாத துனாலயும், நிர்வாகச் சீர்கேடுகளாலயும் அந்தச் சந்தையை அடுத்த கொஞ்ச நாள்லயே மூடிட்டாங்க. கொடைக்கானல்ல மலைப் பூண்டு உற்பத்தி செய்ற விவசாயிங்க, வடுக பட்டி சந்தையை மட்டுமே முழுமையா நம்பி இருக்க வேண்டிய அவல நிலை தொடர்ந்து கிட்டே இருக்கு. இதனாலதான் அங்கவுள்ள கமிஷன் மண்டிக்காரங்க, விவசாயிங்களைத் திட்டமிட்டு வஞ்சிக்குறாங்க. தமிழக அரசு உடனடியா இந்தப் பிரச்னையில தலையிட்டுத் தீர்வு காணனும்.

கொடைக்கானல் மலைப்பூண்டு விற்பனை செய்றதுக்கான பிரத்யேக சந்தையை எங்க பகுதியிலேயே ஏற்படுத்திக் கொடுக்கணும். அங்க விவசாயிகளே கடை அமைச்சு, பொது மக்கள்கிட்ட நேரடியா மலைப்பூண்டு விற்பனை செய்றதுக்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கணும். இந்தக் கோரிக்கையை நீண்டகாலமாகவே இந்தப் பகுதி விவசாயிங்க வலியுறுத்திக்கிட்டு வர்றோம். வடுகபட்டி சந்தையில உள்ள கமிஷன் மண்டிக்காரங்களும், அவங்களோடு மறைமுகக் கூட்டு வச்சுக்கிட்டு குறுக்கு வழியில பயன் அடையுற அரசு அதிகாரிகளும் தான் எங்களோட கோரிக்கையை நிறைவேற விடாம தடுக்குறாங்க. கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு நியாயமான விலை கிடைக்கவும், கமிஷன் மண்டிக்காரங்களோட பிடியிலிருந்து விவசாயிகளை மீட்குறதுக்கும், தமிழக அரசாங்கம் கொடைக்கானல் மலையிலேயே நேரடி கொள்முதல் நிலையம் அமைச்சு, இங்கவுள்ள விவசாயிகள்கிட்ட இருந்து மலைப்பூண்டு கொள்முதல் செய்யணும்’’ என வலியுறுத்தினார்.

மலைப்பூண்டு
மலைப்பூண்டு

திண்டுக்கல் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இணை இயக்குநர் ராஜாவிடம் பேசினோம். ‘‘ஆண்டாண்டு காலமா, மலைப்பூண்டு விவசாயிங்க வடுக பட்டி சந்தையிலதான் வணிகம் செஞ்சுகிட்டு வர்றாங்க. பூண்டு விளைவிக்க உரம், விதை மட்டுமல்லாம... கடனும்கூட கமிஷன் மண்டிக்காரங்ககிட்ட விவசாயிங்க வாங்கு றாங்க. இதனாலதான் பெரும்பாலான விவசாயிகள் வடுகபட்டி கமிஷன் மண்டிகள்ல மட்டுமே பூண்டை விற்பனை செய்றாங்க.

வத்தலக்குண்டு பக்கத்துல உள்ள பட்டி வீரன்பட்டியில பூண்டுக்கான விற்பனை நிலையம் தொடங்கினோம். ஆனா, விவசாயி கள் அதற்கு ஆதரவு தரலை. வடுகபட்டி சந்தைக்கே தொடர்ந்து போனதால, அதை நடத்த முடியலை. கொடைக்கானல்ல தனிச் சந்தை அமைக்க இடவசதியும் நிதியும் இல்லை. இந்த பிரச்னையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்’’ என்றார்.

மலைப்பூண்டு
மலைப்பூண்டு

ஆன்லைன் விற்பனை!

‘‘பூண்டுக்குப் புகைமூட்டம் போடுறதுக்காக... கொடைக்கானல்ல உள்ள பூண்டி பகுதியில 8 கோடி ரூபாய் மதிப்பீட்டுல ஒரு கட்டடமும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் அரசு சார்புல கட்டினாங்க. அதுல ஏகப்பட்ட குளறுபடிகள். அதனால ஒரு வருஷத்துக்கு மேலாகியும்கூட, அதெல்லாம் பயன்பாட்டுக்கு வராமலே இருக்கு. இந்த நிலையிலதான், இங்கவுள்ள பூண்டு விவசாயிகள் ஒன்றிணைஞ்சு பூண்டு விற்பனை நிறுவனத்தைத் தொடங்கியிருக்கோம். இதுல இப்போதைக்கு 750 விவசாயிங்க உறுப்பினர்களா இருக்காங்க. சட்ட பூர்வமான அனுமதி பெற்று ஆன்லைன் மூலம் கலப்படம் இல்லாத மலைப் பூண்டுகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செஞ்சுகிட்டு இருக்கோம்’’ எனத் தெரிவித்தார் விவசாயி செல்லையா.

புவிசார் குறியீடு

கொடைக்கானல் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. எனவே, இதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மானிய விலையில் விதை, உரம், மின்சாரம், கடனுதவி, நீர்பாசனத் துக்கான கருவிகள் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும் என்பதும் இப்பகுதி விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

கொடைக்கானல் மலைப்பூண்டின் தனித்துவம்

கொடைக்கானால் மலைப்பூண்டு பிற பகுதிகளில் விளையும் பூண்டின் அளவைவிட சிறியதாக இருந்தாலும் காரத்தன்மை அதிகமாகவே இருக்கும். பூண்டு முழுவதும் வெண்மையாக இல்லாமல் தோலில் அடர் பழுப்பு மற்றும் நீல நிறம் கலந்திருக்கும். மேலும் பிறவகைப் பூண்டுகளைப் போல் அல்லாமல் மலைப்பூண்டை பாரம்பர்ய முறையில் பதப்படுத்த புகைமூட்டம் கொடுப்பதால் பூண்டின் தோலில் கருப்பு நிறமும் தெரியும். இந்தப் பூண்டை பதப்படுத்துவதன் மூலம் 8 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும். இதனால்தான் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், பிற பகுதிகளில் விளையும் பூண்டுகளைக் கொடைக்கானல் மலைப்பூண்டு எனக் கூறி பெரிய அளவில் வர்த்தகம் நடக்கிறது. பாரம்பர்யமாகப் பூண்டு விளைவிக்கக்கூடிய விவசாயிகள் உரிய விலையின்றித் தவிக்கின்றனர். ஏமாற்றி வியாபாரம் செய்வோர் அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.எல்லாருமே பேசி வச்சுக்கிட்டு, எந்தளவுக்கு முடியுமோ, அந்தளவுக்கு விலையைக் குறைச்சு நிர்ணயம் செய்றாங்க.

மலைப்பூண்டு
மலைப்பூண்டு

கைமேல் பணம்!

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து வடுகபட்டி கமிஷன் மண்டிக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை அறிய கமிஷன் மண்டி கடை நடத்திவரும் பாண்டியிடம் பேசினோம். ‘‘மலைப்பூண்டு விளை விச்சு கொடுக்குற விவசாயிங்க எந்தளவுக்கு முக்கியமானவங்கனு எங்களுக்கு நல்லாவே தெரியும். எந்த ஒரு உள்நோக்கத்தோடயும் நாங்க நடந்துகிட்டது கிடையாது. பூண்டோட தரத்துக்கு ஏற்பதான் இங்க விலை நிர்ணயம் செய்யப்படுது. நியாயமான லாபம் கிடைக்குறதுனாலதான், இங்க தொடர்ச்சியா வந்துகிட்டு இருக்காங்க. விவசாயிங்க கேக்குறதுனாலதான் விதைப் பூண்டும், சாகுபடி செலவுக்கான பணமும் கொடுத்து உதவி பண்றோம். அதுக்கு நாங்க வட்டிகூட வாங்குறது இல்லை. பொருளை கொடுத்தா விவசாயிகளுக்குக் கைமேல பணம் கிடைச்சிடுது. விவசாயிங்க மனமுவந்து இங்க வர்றதுனாலதான், நாங்க பல வருஷமா வியாபாரம் செய்ய முடியுது’’ என்றார்.