கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக கைவிடப்பட்டுள்ள நிலையில் நிகழாண்டு மே 24 -ம் தேதி முதல் கோடைக்கால மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. மே 29-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறும் கோடை விழாவில் பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், படகு அலங்காரப் போட்டி, மீன்பிடி போட்டி, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், நாய் கண்காட்சி நடத்தப்படவுள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொடைக்கானலில் ஆண்டுதோறும் சுற்றுலா துறையால் கோடைகால திருவிழா நடத்தப்படும். இவ்விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும் மலர் கண்காட்சி மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியில் கலந்துகொண்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா நடைபெறுவதால் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சிக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர் வகை மலர்கள், கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா வகை மலர்கள், ரோஸ் வகைகள், ஊட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட பேன்சி வகைகள், பேட்டுனியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ்,செல்லோசியா வகை மலர்கள் பூத்துள்ளன.

புதுவரவாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள லில்லியம் வகையான ஏசியாடிக், ஓரியண்டல் ரக மலர்கள் பார்வையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. மொத்தம் 3 லட்சம் செடிகளில் பல வண்ணங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சுமார் 21 ஏக்கர் பரப்பில் பிரையண்ட் பூங்காவில் 5 ஏக்கர் பரப்பு கொண்ட புல்வெளி மைதானப் பகுதியில் மலர்களை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்.

இதுமிட்டுமில்லாது பாரம்பரிய கலைகளை வளர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் பல பகுதிகளில் இருந்து அரிய வகை நாய் இனங்கள் வரவழைக்கப்பட்டு நாய் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. மீன்பிடி போட்டி, படகு அலங்காரப் போட்டி, அழகு பூங்கா அமைக்கும் போட்டி போன்றவை நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.