Published:Updated:

விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல்; உடனடிப் பணம்! -அரசின் காய்கறித் திட்டத்தால் அசத்தும் கோத்தகிரி

vegetable
vegetable

ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனைத்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்தாலும், கோத்தகிரியில் இந்தத் துறையின் செயல்பாடுகள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது முடக்கத்திலிருந்து தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிரித்த வண்ணம் உள்ளது.

வேளாண் விற்பனைத்துறை
வேளாண் விற்பனைத்துறை

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருபுறம் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் பெரும்பாலானவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தளர்வுகள் அளிக்கப்பட்ட இந்தச் சூழலிலும் பல தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மலைக் காய்கறிகளை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் பலர் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை சாலைகளில் கொட்டிவிட்டுச் செல்லும் அவலம் ஏற்பட்டது.

இதனைப் போக்கும் வகையில் மாவட்டம் முழுக்க அரசு சார்பில் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை நேரடிக் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்து, அதற்கான தொடர்பு எண்ணும் அறிவிக்கப்பட்டது.

வேளாண் விற்பனைத்துறை
வேளாண் விற்பனைத்துறை

ஆனால், அந்த எண்களை விவசாயிகள் தொடர்பு கொண்டால் எந்தப் பயனுமில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனை வணிகத்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்தாலும், கோத்தகிரியில் இந்தத் துறையின் செயல்பாடுகள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இந்த லாக்டெளன் காலத்தில் மட்டும் 450 டன் காய்கறிகளை கொள்முதல் செய்து ஒரு கோடி ரூபாய் வர்த்தகத்தை நெருங்கியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த வேளாண் விற்பனை வணிகத்துறை அலுவலர், " வேளாண் விற்பனை வணிகத்துறையின்கீழ் விவசாயிகளின் நல அமைப்பு ஒன்றை உருவாக்கினோம். இதில் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி முதல் தெங்குமரஹாடா வரையில் விவசாயிகள் உள்ளனர். இவர்களின் விளைநிலங்களுக்கே சென்று காய்கறிகளை கொள்முதல் செய்கிறோம்.

வேளாண் விற்பனைத்துறை.
வேளாண் விற்பனைத்துறை.

அன்றைய சந்தை விலையை உடனே வழங்குகிறோம். வாகனச்செலவையும் நாங்களே ஏற்கிறோம். தற்போதுவரை கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் என 450 டன் வரை கொள்முதல் செய்து சுமார் 90 லட்ச ரூபாய் வரை வர்த்தகம் செய்துள்ளோம். விவசாயிகளும் நல்ல பலன் பெற்று வருகின்றனர்" என்றார்.

வேளாண் அதிகாரிகளின் முயற்சி குறித்து கோத்தகிரி பகுதி விவசாயி ஒருவரிடம் பேசினோம். " இப்படி ஒரு துறை இருப்பதே எங்களுக்குத் தெரியாது. உற்பத்தி செய்த பீன்ஸை விற்க முடியாமல் தவித்து வந்தோம்.

வேளாண் விற்பனைத்துறை
வேளாண் விற்பனைத்துறை

தோட்டத்துக்கே வந்து கையில் பணத்தைக் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் இந்தத் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினால் இடைத்தரகர்களின் தலையீடு குறைந்து விவசாயிகள் பயன்பெறுவோம்" என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு