Election bannerElection banner
Published:Updated:

கிருஷ்ணகிரி: ரூ.778 கோடியில் வாணி ஒட்டு திட்டம்... தேர்தலுக்கு முன் தொடங்கப்படுமா?

தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள்
தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

தேர்தலுக்கு முன்னர் வாணி ஒட்டு திட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையிலான நிர்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், ``கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு அல்லது கொலுசுமடுவு என்னும் இடத்தில் மன்னர் ஆட்சியில் ஓர் தடுப்பணைக் கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணையிலிருந்து பாசனத்துக்காகத் தர்மபுரி மாவட்டம், தகடூர் வரை நீர்வரத்துக் கால்வாய் அமைத்து பயிர்ச் சாகுபடி செய்யப்பட்டுவந்தது.

டி.ஆர்.ஓ-விடம் மனு அளித்தபோது...
டி.ஆர்.ஓ-விடம் மனு அளித்தபோது...

போதிய பராமரிப்பு இல்லாததால், காலப்போக்கில் தடுப்பணை அழிந்துவிட்டது. தற்போது, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி இந்த இடத்தில் 100 அடி உயரத்துக்கு அணை கட்டி விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், 250 ஏரிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், ரூ.778 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான அரசாணையைத் தேர்தலுக்கு முன்னரே வெளியிட்டுப் பணிகளை தொடங்கி வைக்க வேண்டும்.

ராமகவுண்டர்
ராமகவுண்டர்

அதேபோல், ஏலகிரி மலையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் சிங்காரப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இங்கு ஒரு அணையைக் கட்டி பாம்பாற்றுடன் இணைத்து புதிய கால்வாய்கள் அமைப்பதற்காக ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும்’’ என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு