Published:Updated:

சூழலுக்குச் சூனியம் வெக்கிற இ.ஐ.ஏ வேண்டாம் ஜி! - சுற்றுச்சூழல் அமைச்சருக்குக் கோவணாண்டி கடிதம்!

கோவணாண்டி
பிரீமியம் ஸ்டோரி
கோவணாண்டி

கடிதம்

சூழலுக்குச் சூனியம் வெக்கிற இ.ஐ.ஏ வேண்டாம் ஜி! - சுற்றுச்சூழல் அமைச்சருக்குக் கோவணாண்டி கடிதம்!

கடிதம்

Published:Updated:
கோவணாண்டி
பிரீமியம் ஸ்டோரி
கோவணாண்டி
ரந்து விரிந்த பாரத தேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ‘பகுத் அச்சா’ மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஜி அவர்களுக்குக் கோவணாண்டியின் பணிவான வணக்கம். நீங்க பெரிய தேசத்தின் பெரிய மந்திரி. மெத்தப் படித்தவர். அறிவாளி. ‘இந்தக் கோவணாண்டி? பயலுவ எல்லாம் எனக்குக் கடிதம் எழுதக் கூடாது’ என்று ஒதுக்கிவிடாதீர்கள்.

உங்க பாஸ் அதுதான் பாரதப் பிரதமர் மோடிஜி பாணியில சொல்லணும்னா, திருவள்ளுவர் என்ன சொல்றாருன்னு கேளுங்க. ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’. யார் சொல்றதுங்கிறது முக்கியமில்ல... எந்த விஷயமா இருந்தாலும், அதைக் கண்கொண்டு பார்த்து, காது கொடுத்துக் கேட்டு அதுல இருக்குற நல்லது கெட்டதைத் தெரிஞ்சுக்கணும். இதுதான் அதுக்கு அர்த்தம்.

சூழலுக்குச் சூனியம் வெக்கிற இ.ஐ.ஏ வேண்டாம் ஜி! - சுற்றுச்சூழல் அமைச்சருக்குக் கோவணாண்டி கடிதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐயா, இந்தக் கொடிய நோய் கொரோனா தொற்று காலத்தில ரகசியமா பல சட்டம் கொண்டு வந்திருக்கீங்க. அதுல ஒரு சட்டமான இ.ஐ.ஏ சட்டத்தைப் பத்திதான் உங்ககிட்ட பேசணும். இ.ஐ.ஏ (Environmental Impact Assessment) சட்டம் மக்களுக்கு விரோதமானது மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் விரோதமானது. உங்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை-2020, பாரத தேசத்து விவசாயிகளோட மிச்ச சொச்ச கோவணத்தையும் உருவி எடுத்துடும். அதுல அத்தனை ஆபத்துகள் இருக்குன்னு சொல்றாங்க நாலு விஷயம் தெரிஞ்ச ஆளுங்க. அதானுங்க ஐயா இந்த அவசரக் கடிதம்.

இருக்குறது ஒரே ஒரு பூமி. அதைக் காப்பாத்த வேண்டியது நம்ம கடமை. கடுமையான சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் இருக்கும்போதே, சுற்றுச்சூழலுக்குச் சூனியம் வெச்சுட்டாங்க. மழை இல்லை, காத்துல மாசு, பருவநிலை மாற்றம், பூமி சூடாகிப்போச்சு. குடிக்கத் தண்ணி இல்லாம மனுசங்க அலைஞ்ச காலம் போயி, இப்ப வனவிலங்குகள் தண்ணியைத்தேடி ஊருக்குள்ள வருதுங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலைமையில, பன்னாட்டு கம்பெனிகளோட லாபத்துக்காக, நம்ம நாட்டு மக்களை அழிச்சு ஒழிக்கிறது என்னங்கய்யா நியாயம்? சூழலைக் கெடுக்குறவங்க மேல நீதிமன்றத்தில வழக்குப் போட்டா, நியாயம் கிடைக்கக் காலதாமதம் ஆகுதுன்னுதானே பசுமைத் தீர்ப்பாயங்கள் உருவாச்சு. ஆனா, இன்னிக்கு அந்தப் பசுமைத் தீர்ப்பாயங்கள் நீதிபதிகள், துறை வல்லுநர்கள் இல்லாம காலியா இருக்குதுன்னு உச்ச நீதிமன்றமே உங்க தலையில கொட்டு வெச்சுச்சு. ஆனாலும், உதறிவிட்டுட்டு உங்க வழியில போயிட்டே இருக்கீங்க. கொஞ்சம் மனசாட்சியோடு பசுமைத் தீர்ப்பாயங்கள்ல நல்லவங்கள நியமனம் செய்யுங்க, உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

கோவணாண்டி
கோவணாண்டி

சரி, நான் முக்கியமான விஷயத்துக்கு வர்றேன். ‘5 ஏக்கருக்கு குறைவான இடத்தில தொடங்குற தொழிற்சாலைகளுக்குச் சுற்றுச் சூழல் முன் அனுமதி தேவையில்லை’னு சொல்லுது உங்க இ.ஐ.ஏ சட்டம். திருப்பூர், ஈரோடு, கரூர்ல இருக்குற சாயப்பட்டறைகள் எதுவுமே ரெண்டு, மூணு ஏக்கருக்கு அதிகமில்ல. சிறு-குறு தொழிற்சாலைகளோட விஷக் கழிவுகள் ஒண்ணு சேர்ந்துதான் நோய்களைக் கொண்டு வந்திடுச்சு.

‘மற்ற சிவப்பு வளையம் தொழிற்சாலைகளும் தொழிலைத் தொடங்க சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்று தேவையில்லை. தொழில் தொடங்கிய பிறகு ,விண்ணப்பித்தால் போதும்’னு சொல்லுது உங்க புதுச் சட்டம். 20 வருஷம் ஆகியும் சுற்றுச்சூழல் அனுமதி வாங்காம இருந்த விசாகப்பட்டினம் கம்பெனி விஷவாயுதான 12 பேர் உயிரைக் காவு வாங்கிச்சு. அதுக்கு பிறகும், ஆரம்பிச்ச பிறகு அனுமதி வாங்குனா போதும்னு சொல்றதும் ஒண்ணுதான்... இந்தியர்களைக் காவு கொடுக்க நாங்க யோசிக்க மாட்டோம்னு வெளிப்படையா சொல்றதும் ஒண்ணுதாங்க ஐயா. அதுலேயும் மக்கள் கருத்துக்கேட்கத் தேவையில்லைனு சொல்லியிருக்கீங்க பாருங்க... அதுதான் உங்க சாணக்கியத்தனம். மக்கள் கருத்துக் கேட்புங்கிறது உலகளாவிய நடைமுறை. சர்வாதிகார நாட்டுலகூட மக்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறாங்க. உலகத்துலயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்க மக்கள் கருத்தை மதிக்க வேண்டாமா? எங்க மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலதான், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கிற திட்டத்தை நிறுத்தி வெச்சாங்க. ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்தப்ப மக்கள் கருத்துக்கு மதிப்புக்கொடுத்துதான் பி.டி கத்திரிக்காயைத் தடுத்து நிறுத்துனாரு. தயவுசெய்து வரலாற்றைப் புரட்டிப் பாருங்க ஐயா.

இதனால என்ன நடக்கும்னு சாமானியனுக்குத் தெரிஞ்சது கூடவா உங்களை மாதிரி மெத்த படிச்ச மேதாவிகளுக்குத் தெரியாமப் போயிடும்? புவி வெப்பம் 1 டிகிரி கூடிப்போனா விளைச்சல் 10-லிருந்து 25 சதவிகிதம் குறையும்னு விவசாய வல்லுநர்கள் சொல்றாங்க. நீங்க கொண்டு வரப்போற இயற்கை அழிப்புச் சட்டம் 2020 மூலமா, 2050-ம் வருஷம் 10 டிகிரி வெப்பம் அதிகரிக்கலாம்னு சுற்றுச்சூழல் அறிஞர்கள் அலறுறாங்க. உலகத்துல வேற எந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பு நம்ம நாட்டுக்கு இருக்கு. இங்கதான் பல்வேறு மாறுபட்ட விவசாயப் பருவநிலை சூழல்கள் இருக்கு. அதுக்கு ஆப்பு வெச்சிடும் போல இருக்குது உங்க புதுச்சட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்க சட்டத்தால இனி கரும்பு விளையுற பூமியெல்லாம் கள்ளிக் காடா மாறிடுமாம். அப்புறம் சீனாகாரங்க போல பாம்பு, பல்லிதான் நமக்குச் சாப்பாடு. அதைத் திங்கணும் இல்லாட்டி கள்ளிப்பால் குடிச்சுட்டு கைலாசத்துக்குப் போகணும். உங்க இ.ஐ.ஏ சட்டத்தைப் பத்தி எங்க ஊரு இங்கிலிபீசு வாத்தியாரு சொல்லிதான் எனக்கு இம்புட்டு தகவலும் தெரிஞ்சது.

ஐயா, உங்க இயற்கை அழிப்புச் சட்டம் 2020-க்கு முன்னாடி, இயற்கைப் பாதுகாப்புச் சட்டம் 1986 வந்த கதையையும் சொன்னாரு எங்க வாத்தியாரு. ‘1984-ல் போபால்ல ஒரு பன்னாட்டு கம்பெனியிலிருந்து கசிஞ்ச விஷவாயுனால 20,000-க்கும் அதிகமானவங்க செத்துப்போனாங்க. ஆனா, அந்த கம்பெனி முதலாளியை அலுங்காம குலுங்காம அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சிடுச்சு அன்னிக்கு இருந்த காங்கிரஸ் கவர்மென்ட். இருந்தாலும் மனசாட்சி உறுத்தவும், இயற்கைப் பாதுகாப்புச் சட்டம்-1986 கொண்டு வந்து புதுசா முளைக்குற கம்பெனிகளுக்குக் கடிவாளம் போட்டாங்க.

தொழிற்சாலை, நெடுஞ்சாலை, சுரங்கங்கள் தொடங்குறதுக்கு முன்னாடியே, அதனால ஏற்படுற சுற்றுச்சூழல் பிரச்னைகளைப் பற்றி ஆய்வு செஞ்சு, சுற்றுச்சூழல் மந்திரிகிட்ட அனுமதி வாங்கணும். ஆய்வு அறிக்கை தயாரிக்கிறதுக்கு முன்னாடி, அந்தப் பகுதி மக்கள்கிட்ட நேரடியாகக் கருத்து கேட்கணும்னு சொல்லுது அந்தச் சட்டம். ஆனா, சட்டம் கடுமையாக இருந்தாலும் செயல்படுத்துற அதிகாரிக, களவாணிகளா இருந்தா என்ன செய்றது?

மாசுபடுத்துற முதலாளிகளோட கள்ள உறவு வெச்சுகிட்டு காசு பார்க்குற அதிகாரிகளே நிறைஞ்சு இருக்கிறதால, சுற்றுச்சூழல் கெட்டுப் போய்க்கிட்டே இருக்குது. மழையைத் தாங்கிவர்ற மேகங்கள் மலைமுகட்டுல இருக்க மரக்கிளைகள்ல உக்கார்ந்து இளைப்பாறி மழையாகப் பொழிஞ்ச காலம் காணமாப் போயிடுச்சு. தொழிற்சாலைகளோட துருத்தி மூக்குக விடுற கருமேகங்கள், கார் மேகத்தை விரட்டிடுது. ஓடிப்போற மேகம் கடல்ல பெரு மழையா பெய்ஞ்சிட்டுப் போயிடுது’னு சொல்றாரு எங்க வாத்தியாரு.

சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலைகள்ல இருந்து வெளியேறுற கழிவுநீர் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கிடுச்சு. கங்கையைச் சுத்தப்படுத்துறோம்னு சொல்லி, மக்கள் வரிப் பணத்தைக் கோடிக்கணக்குல கொட்டு னீங்களே... அப்ப கங்கை சுத்தம் ஆச்சா? இல்லையே... ஆனா, ஆறே மாசத்துல கண்ணாடி மாதிரி தண்ணி சுத்தமாச்சே. அது எப்படின்னு யோசிச்சீங்களா? சுற்றுச்சூழலுக்கு இம்சை கொடுக்காம, சும்மா இருந்தாலே இயற்கை சுத்தப்படுத்திக்கும்னு புரிய வெச்சிருக்கு ஊரடங்கு. இப்பவாவது கொஞ்சம் அறிவுக்கண் திறந்து பாருங்க ஐயா...

களத்தில நிராயுதபாணிகளாக நின்னுகிட்டு இருக்கிற மக்களுக்கு எதிரா இ.ஐ.ஏ-ங்கிற துப்பாக்கியைத் தூக்கலாமா?

எதுக்கெடுத்தாலும் வளர்ச்சி... வளர்ச்சினு கூப்பாடு போடுறீங்களே... எதுங்கய்யா வளர்ச்சி? நாடு சுதந்திரம் வாங்கும்போது, 34 கோடி மக்கள் இருந்தாங்க. அப்ப இருந்த எல்லோரும் ஏழைகள்னே வெச்சுக்குவோம். நாடு வளர்ந்து இருந்தா, ஏழைகளோட எண்ணிக்கை 20 கோடி, 15 கோடினு குறைஞ்சு போயிருக்கணுமா இல்லையா? ஆனா, இன்னிக்கும் 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேதான வாழ்றாங்க? இதுதான் வளர்ச்சியா? பொருளாதாரம் 9% வளர்ந்துடுச்சுனு சொல்றீங்களே... இதுதான் அந்த வளர்ச்சியா? நீங்க சொல்றது யாருக்கான வளர்ச்சி? 10 பணக்காரங்களுக்கு வருமானம் கூடிக்கிட்டே போறது வளர்ச்சி இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கணும். அதே சமயம் வருங்காலச் சந்ததிகள் இந்தப் பூமியில வாழுறதுக்குத் தகுந்ததா பூமியை விட்டுட்டுப் போகணும். அதுதாங்க வளர்ச்சி.

ராமாயணத்துல ஆயுதங்களை இழந்து நின்ன ராவணனைப் பார்த்து, ‘இன்று போய் நாளை வா’ அதாவது ஆயுதத்தோடு நாளைக்கு வா. ‘நிராயுதபாணியான உன்கூட யுத்தம் செய்ய மாட்டேன்’னு சொன்ன ராமபிரான் பிறந்த மண்ணுல, ராமரை வெச்சு அரசியல் நடத்துற நீங்க, களத்தில நிராயுதபாணிகளாக நின்னுகிட்டு இருக்கிற மக்களுக்கு எதிரா இ.ஐ.ஏ-ங்கிற துப்பாக்கியைத் தூக்கலாமா? குடிகளை வாழ வைக்குறதுதான் அரசோட கடமையா இருக்கணும். சாக வெக்கிறது இல்லை.

இதைப் புரிஞ்சுகிட்டு இ.ஐ.ஏ சட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வராதீங்கனு கோவணாண்டிக சார்பா கேட்டுக்கிறேன். உங்க பிரதமர்ஜிகிட்ட சொல்லி, இதைச் செய்யுங்க ஜி. மந்திரி மனசு வெச்சா மார்க்கம் உண்டுனு சொல்லுவாங்க. அதை உண்மையாக்குங்க ஜி.

இப்படிக்கு,

கோவணாண்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism