Published:Updated:

`நிறங்கள் வேறு... ஆனால் சேதமோ அதிகம்...!’ -வெட்டுக்கிளிகளால் கலங்கும் குமரி விவசாயிகள்

குமரி மாவட்டத்தில் வாழைகளில் காணப்படும் வெட்டுகிளிகள்
குமரி மாவட்டத்தில் வாழைகளில் காணப்படும் வெட்டுகிளிகள்

இந்தப் பூச்சிகள் பச்சை நிறத்தில் உள்ளன. வடமாநிலங்களில் வந்துள்ள லிசிபெரா பிரவுண் நிறத்தில் உள்ளவை. இங்கு பார்த்த வெட்டுக்கிளிகளுக்கு சிறிய இறக்கைகள் உள்ளன. வடமாநிலங்களில் வந்தவைகளுக்கு இறக்கை பெரியதாக இருக்கும்.

கொரோனாவைப் போன்று நம் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது வெட்டுக்கிளிகள். வட இந்தியாவில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகள், மெல்ல தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளி படையெடுத்து சந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்த வெட்டுக்கிளிகளால் பாதிப்பு இல்லை என்று கூறி உள்ளனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி முளவிளை பகுதியில் வாழை மரங்கள், தேக்கு, அன்னாசி மற்றும் ரப்பர் மரங்களில் வெட்டுகிளிகள் காணப்படுகின்றன. அந்த வெட்டுக்கிளிகள், வாழை மற்றும் தேக்கு மரங்களில் இலைகளை வெட்டி சேதபடுத்திவருகின்றன. மேலும், ஆபிரகாம் என்பவரின் தோட்டத்துக்கு அருகில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த வெட்டுகிளிகள் பரவி உள்ளன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

வெட்டுகிளிகள்
வெட்டுகிளிகள்

வெட்டுக்கிளிகள் பரவியது குறித்து வேளாண் துறை அதிகாரிக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், தி.மு.க எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் அங்கு சென்று பார்வையிட்டார். இதுகுறித்து பூச்சியியல் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுசெய்ய வேண்டும் என்றும், வெட்டுக்கிளிகள் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதிசாரம் வேளாண் ஆய்வுமைய அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதற்கு முன்பும் இதுபோன்ற வெட்டுக்கிளிகளை இங்கு பார்த்துள்ளோம். சீசன் சமயத்தில் இந்த பூச்சிகள் வருவது வழக்கம். இந்த பூச்சிகள் பச்சை நிறத்தில் உள்ளன. வடமாநிலங்களில் வந்ததுள்ள லிசிபெரா பிரவுண் நிறத்தில் உள்ளன. இங்கு பார்த்த வெட்டுகிளிகளுக்கு சிறிய இறக்கைகள் உள்ளன. வடமாநிலங்களில் வந்தவைகளுக்கு இறக்கை பெரியதாக இருக்கும்.

வெட்டுகிளிகள்
வெட்டுகிளிகள்

இந்த வெட்டுக்கிளிகள் வாழை, அன்னாசி, தேக்கு மரங்களை அதிகமாக சேதப்படுத்தியுள்ளன. எனவேதான், எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் ஆய்வு மைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் நேரில் வந்து ஆய்வுசெய்ய உள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு