‘‘பசுமை விகடன், விகடன் குழுமத்தால் நடத்தப்படும் பத்திரிகை. அதன் சந்தாதாரர் நான், ஏறத்தாழ 10 ஆண்டுக்காலமாக அந்தப் பத்திரிகையை நான் வாங்கிப் படித்து வருகிறேன். சாதாரண விவசாயியைக்கூட ஊக்குவிக்கிற அளவுக்கு அந்தப் பசுமை விகடன் பிரமாதமாக இருக்கிறது. அனைத்து நூலகங் களிலும், ஊர் ஊராக ஊராட்சி நூலகங்களிலும் அதை அளிப்பதற்கும் அனைத்து மக்களும் அதைப் பார்க்கும் விதத்தில் அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அண்மையில் சட்டமன்றத்தில் பேசி, கவனத்தை ஈர்த்துள்ளார், சென்னை அருகில் உள்ள மாதவரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ (தி.மு.க) சுதர்சனம்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போதுதான், இப்படிப் பேசியுள்ளார். இது குறித்து, கூடுதல் விவரம் அறிய. சுதர்சனம் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
“விவசாயிகளின் முன்னேற்றத் துக்காக அவர்களுடைய வாழ்வாதாரத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக் கிற ஓர் இதழ் பசுமை விகடன். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர் களுக்கு மட்டுமல்லாமல் 10 சென்ட் வைத்திருக்கிற விவசாயிகளுக்கும் அவர்கள் நிலத்தில் என்ன விதைக்கலாம்; எப்படி இயற்கை விவசாயம் செய்யலாம்; எப்படி லாபம் ஈட்டலாம் என்று நுட்பமாகக் கற்றுத்தந்து வருகிறது பசுமை விகடன். இதன் காரணமாகவே எனக்குப் பசுமை விகடன் மீது மிகப் பெரிய மரியாதை வந்தது. நான் சட்டமன்றத்தில் பேசிய என் கருத்துகள் அத்தனையும் உண்மை. நான் எதையும் மிகைப்படுத்திப் பேசவில்லை. அதனால் தான் அனைத்து ஊராட்சிகளுக்கும் பசுமை விகடன் இதழ் இருக்க வேண்டும்; தமிழ் நாட்டின் அத்தனை நூலகங்களிலும் பசுமை விகடனை வாசிக்க வைக்க வேண்டும் என்று சட்ட மன்றத்தில் பேசினேன்.

அன்றைய தினம், பசுமை விகடன் குறித்து சட்டசபையில் பேசி முடித்தவுடன், அருகிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எனக்குக் கை கொடுத்தது பாராட்டியதோடு நான் பேசியதை வழிமொழிந்து என்னிடம் உரையாடினார்கள். அவர்களும் பசுமை விகடனை வாசித்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டனர். தவிர, வேளாண்துறை அமைச்சருக்கும் பசுமை விகடன் குறித்து நன்கு தெரிகிறது” என்றவர், பசுமை விகடனில் தனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார் சுதர்சனம்.

“சிறு, குறு விவசாயிகளுக்கு நீங்கள் தொடர்ந்து உங்கள் இதழில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள். ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்கிற பெரிய விவசாயிகள் எப்படியும் வாழ்ந்துவிடுவார்கள். ஆனால், அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்திருக்கிற சிறு, குறு விவசாயிகளின் நிலைமைதான் கடினமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏற்றபடி மலர் சாகுபடி, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு... என்று அவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வண்ணம் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறீர்கள். இது போன்ற செய்திகளையும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களையும் விரும்பி படித்து வருகிறேன்.
‘‘என் குடும்பமே விவசாயக் குடும்பம்தான். நானும் ஒரு பெரிய விவசாயிதான். எத்தனை பெரிய பிரச்னை வந்தாலும், மன உளைச்சல் இருந்தாலும் என் தோட்டத்துக்குச் சென்றால், அத்தனை மனபாரமும் இறங்கிவிடும். இதே போலப் பசுமை விகடனை வாசிக்கையில் புதிய சிந்தனைகள் உருவாகி மன நிம்மதி கிடைத்து விடுகிறது.’’
அடுத்ததாகப் பசுமை விகடனின் தலைப்புகள் எனக்குப் பிடித்தமான ஒன்று. ‘ஒரு ஏக்கரில், ஒரு லட்சம் லாபம்!’ என்று நீங்கள் சொல்லும் தகவலை விவசாயம் தெரியாதவர்கள் வேண்டுமானால், மறுக்கலாம். என்னைப் போன்ற விவசாயிகளுக்குத் திட்டமிட்டு சாகுபடி செய்தால், நல்ல லாபம் எடுக்க முடியும் என்பது நன்றாகவே தெரியும். அதோடு சிறு துண்டு நிலம் இருந்தாலும் அதில் விவசாயம் செய்தும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற உந்துசக்தியைப் பசுமை விகடன் தலைப்புகள் தொடர்ந்து தந்துகொண்டிருக்கின்றன.

மண்ணை வளப்படுத்துவதில் ஆரம்பித்து அறுவடை வரைக்கும் ஒரு விவசாயிக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சொல்லித் தந்துவிடுகிறீர்கள். சமீபத்தில் வறண்டு போயிருந்த ஒரு கிராமம் நீர் மேலாண்மையில் தன்னைத் தானே வலுப்படுத்தித் தற்போது எப்படிச் செழிப்பாக இருக்கிறது என்பது பற்றி எழுதியிருந்தீர்கள். இப்படிப்பட்ட கட்டுரைகள் நல்ல சமுதாயப் புரட்சிகளையும் ஏற்படுத்தக்கூடியவை. விளைபொருள்களை விற்பனை செய்ய ‘பசுமை சந்தை’ பகுதி விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது. நீங்கள் கேட்டவை கேள்வி-பதில் பகுதியில், வரும் பதில்கள் ஒவ்வொன்றும் வழிகாட்டியாக உள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், முதல் பக்கம் தொடங்கிக் கடைசிப் பக்கம் வரைக்கும் பசுமை விகடன் பயனுள்ள தகவல்களை மட்டுமே தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
மா சாகுபடி பற்றி, விஞ்ஞானிகள் சொல்வதைக்காட்டிலும் விவசாயிகள் அது குறித்துப் பேசினால்தான், சக விவசாயி களுக்குப் புரியும். இந்த விஷயத்தைப் பசுமை விகடன் தெளிவாகச் செய்து வருகிறது. இதனால்தான், விவசாயிகளிடம் நல்மதிப்பை பெற்று வருகிறது.

ஓர் உண்மையைச் சொல்கிறேன். என் மனைவி உடல்நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைக் கவனித்துக்கொள்வதற்காக நானும் சென்றிருந்தேன். அப்போது 40 பசுமை விகடன் இதழ்களை என்னுடன் எடுத்துச் சென்றுவிட்டேன். ஏற்கெனவே படித்த இதழ்தான். என்றாலும், மறுபடியும் வாசிக்கக் கொண்டு சென்றிருந்தேன்.
என் குடும்பமே விவசாயக் குடும்பம்தான். நானும் ஒரு பெரிய விவசாயிதான். எத்தனை பெரிய பிரச்னை வந்தாலும், மன உளைச்சல் இருந்தாலும் என் தோட்டத்துக்குச் சென்றால், அத்தனை மனபாரமும் இறங்கிவிடும். இதே போல பசுமை விகடனை வாசிக்கையில் புதிய சிந்தனைகள் உருவாகி மன நிம்மதி கிடைத்துவிடுகிறது.
இவ்வளவு ஏன், என் நிலத்தில் தர்பூசணி விதைத்து நல்ல லாபம் எடுத்தற்கு அடிப்படைக் காரணம் பசுமை விகடன்தான். இதனால், விவசாயிகளைச் சந்திக்கும்போது பசுமை விகடன் இதழைப் படியுங்கள் என்று பரிந்துரை செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாகத்தான், மாண்புமிக்க சட்டமன்றத்தில், வேளாண்மைத்துறை மானியக்கோரிக்கையின்போது பசுமை விகடன் இதழ் குறித்துப் பேசினேன்.

தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் ஓர் இதழின் அருமை, பெருமைகளைப் பற்றி, சட்டமன்ற உறுப்பினர் பேசியது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். பசுமை விகடன் இதழின் வாசகர் என்ற முறையில் என் மனதில் தோன்றியதை அரசின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளேன்.
ஊராட்சி நூலகங்களில் பசுமை விகடன் இதழ் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும், இதழ் குறித்துப் பேசிய அந்த உரை எனக்கு மன நிறைவாக அமைந்தது” என்று மகிழ்ச்சியும் திருப்தியும் கலந்த குரலில் சொல்லி முடித்தார் சுதர்சனம் எம்.எல்.ஏ.
சட்டமன்றத்தில் சுதர்சனம் எம்.எல்.ஏ பேசிய வீடியோவைக் காண பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.
https://www.facebook.com/PasumaiVikatan/videos/578510673266409/