Published:Updated:

`விவசாயப் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது?' - மதுரை உயர்நீதிமன்றக் கிளை

Madras High Court Bench at Madurai
Madras High Court Bench at Madurai ( Photo: Vikatan / Manikandan.N.G )

``தனியார்களின் விவசாயப் பணிக்கு 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களைக் கேரள அரசு பயன்படுத்துவது போல் தமிழகத்திலும் அரசு ஏன் பயன்படுத்தக் கூடாது" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

``கிராமங்களில் வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு உதவும் வகையிலும், வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் சேடப்பட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியற்றவர்களுக்கு 100 நாள் வேலை செய்வதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று சீனிவாசகம் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. ``இத்திட்டத்தில் தவறு நடக்கவில்லை. 2006-லிருந்து இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது'' என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Farmer
Farmer
AP Photo / Rajesh Kumar Singh

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``தொலை நோக்குடன் கிராமப்புற ஏழை மக்கள் பயனடைய தொடங்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில், பயனாளிகள் ஒழுங்காக வேலை செய்யாமல் மரத்தடியில் தூங்குகின்றனர். ஒழுங்காக வேலை செய்பவர்களையும் சிலர் தடுக்கின்றனர். இத்திட்டத்தால் மக்கள் சோம்பேறிகளாகிவிட்டனர். மக்கள் மனநிலையும் மாறிவிட்டது. வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதனால் தனியார் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை" என்று கவலையைத் தெரிவித்தவர்கள்,

``இதுவரை 100 நாள் வேலைத் திட்டத்தில் எந்தெந்த வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, முறையாக ஆய்வு செய்த பின் சம்பளம் வழங்கப்படுகிறதா, முறைகேடுகள் ஏதும் நடந்துள்ளதா?'' என்றவர்கள்,

Farmers
Farmers

``கேரளாவில் தனியார் விவசாய நிலங்களில் 100 நாள் திட்டப் பயனாளிகளை ஈடுபடுத்துகின்றனர். இதில் அரசு 50 சதவிகிதமும், தனியார் 50 சதவிகிதமும் கூலி வழங்குகின்றனர். அதுபோல் தமிழகத்தில் ஏன் செயல்படுத்தக் கூடாது. இதுபற்றி தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நவம்பர் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு