Published:Updated:

ரத்து செய்யப்பட்ட மதுரை சிப்காட் திட்ட அறிவிப்பு... இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள்!

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கும், இதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசுக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி வட்டாரத்தில் 598.66 ஹெக்டேரில் அமையவிருந்த சிப்காட் தொழில் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளதை இப்பகுதி விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

இனிப்பு வழங்கும் விவசாயிகள்
இனிப்பு வழங்கும் விவசாயிகள்

இந்தத் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் விவசாயத்தை அழிப்பதாகவும் கூறி இப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களையும் நீதிமன்றங்களில் சட்ட போராட்டத்தையும் நடத்தினார்கள். இதை ஒடுக்க அப்போதைய தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்தார்கள். அதனாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது.

இதற்கிடையே அ.தி.மு.க அரசின் தொழில்துறையும் சிப்காட்டை அமைக்க முயற்சிகள் எடுத்தது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக அரசின் தொழில்துறை சிப்காட் திட்டத்தை ரத்து செய்து நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் கொண்டாட்டம்
விவசாயிகள் கொண்டாட்டம்

இதுபற்றி சிப்காட் திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த விவசாயப் போராளி சிவரக்கோட்டை ராமலிங்கத்திடம் பேசினோம்,

"அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியம் பகுதியைச் சேர்ந்த சிவரக்கோட்டை, கரிசல்காலம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழில்துறை பூங்காவை உருவாக்க 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 598.66 ஹேக்டேர் (1,478.71 ஏக்கர்) நிலத்தைக் கையப்படுத்த உத்தரவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மூன்று கிராமங்களில் தனித்துவமான கரிசல் மண் இருப்பதால், சிறு தானியங்கள் சோளம், ராகி, தினை, விளைச்சல் நன்றாக உள்ளதால் இப்பகுதி சிறுதானிய களஞ்சியமாகத் திகழ்கிறது.

சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தினால் விவசாயம் பாதிக்கும், இதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்பதால் அரசுக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். அப்போதைய அரசு காது கொடுத்துக் கேட்கவில்லை. பெரு முதலாளிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருந்தது.

சிவரக்கோட்டை ராமலிங்கம்
சிவரக்கோட்டை ராமலிங்கம்

ஏற்கெனவே இங்கிருந்து 10 கி.மீ தூரத்தில் திருமங்கலம் தாலுகா கப்பலூர் பகுதியில் சிட்கோ தொழில் பேட்டை செயல்பட்டு வருகிறது.

இதைச் சுட்டிக்காட்டி நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 3 கிராம ஊராட்சிகளில் பல கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிராம மக்களின் நலனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், ஆட்சியாளர்களிடம் மனு அளித்தோம்.

உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தாக்கல் செய்தோம்.

தி.மு.க உருவாக்கிய இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக தொழில்துறை அமைச்சரும் ஆர்வம் காட்டினார்.

விவசாயிகள் கொண்டாட்டம்
விவசாயிகள் கொண்டாட்டம்

இந்த நிலையில் இதைப்பற்றி இப்பகுதி சட்ட மன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரிடம் பலமுறை எடுத்துச் சொன்னோம். அவர் இதைத் தமிழக முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

அதன் விளைவாகத் தற்போது சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசாணை எண் 268 /20-ன் படி, ரத்து செய்து தமிழக தொழில் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கும் எங்களுக்கு உறுதுணையாக நின்ற ஊடகங்களுக்கும் நன்றி சொல்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு