`புகைப்படத்துடன் ஏன் வெளியிட மறுக்குறீர்கள்?' - குடிமராமத்து திட்டம் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி

குடிமராமத்துப் பணிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் அன்புநிதியிடம் பேசினோம். ``தமிழகத்தில் ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்தவும், கரைகளை மேம்படுத்தவும் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஊரகப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த 1,250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து குடிமராமத்து திட்டத்தை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் கடந்த 2019-ல் அறிவித்தார். ஆனால், தற்போது போதுமான அளவு மழை பெய்தும், தமிழகத்திலுள்ள நீர் நிலைகள் போதுமான அளவு நிரம்பவில்லை. இதற்குக் காரணம், இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படாததே.
அதனால் தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளில் நடத்தப்படும் குடிமராமத்துப் பணிகளின் விவரம், அவற்றின் சர்வே எண், நிதி ஒதுக்கீடு பற்றி மக்கள் அறியும் வகையில் அனைத்தையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை விசாரித்த நீதிபதிகள், குடிமராமத்துப் பணியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்" என்றார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், ``குடிமராமத்துப் பணி விவரங்களை அதிகாரிகள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பார்க்க வழி இல்லை" என்று கூறப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், ``தூர்வாரும் பணிக்கு முன் மற்றும் பின் உள்ள புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட ஏன் மறுக்கிறீர்கள்? குடிமராமத்துப் பணிகளில் எந்தெந்த வேலைகள் நிறைவடைந்துள்ளன என்பதை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" என்று கூறியவர்கள், ``இதுபற்றி உரிய விளக்கத்தை அரசிடம் பெற்று தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.