திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் அருகே உள்ள காட்டுமலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். அவருடைய தந்தையின் பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2-ம் தேதி, தன்னுடைய நிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 119 நெல் மூட்டைகளை (40 கிலோ வீதம்) ராஜாந்தாங்கல் நேரடி கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு, குவிண்டால் ஒன்றுக்கு 2,015 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, 94,915 ரூபாய்க்கு ரசீது கொடுத்துள்ளார் பட்டியல் எழுத்தர் ஏழுமலை. மேலும், இறக்குக் கூலி மற்றும் ஏற்றுக் கூலியாக மூட்டைக்கு 40 ரூபாய் வீதம், 119 மூட்டைக்கும் கமிஷன் தர வேண்டும் என்றும் கேட்டாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெருமாள், வீட்டுக்கு அமைதியாகத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், `தன்னுடைய நெல்லுக்கான தொகை எப்போது கிடைக்கும்' என்று கேட்பதற்காகக் கடந்த 4-ம் தேதி பெருமாள் நேரடி கொள்முதல் நிலையத்துக்குச் சென்றபோது, எழுத்தர் ஏழுமலையோ... ``ஒரு மூட்டைக்கு 40 ரூபாய்க்குப் பதிலாக 30 ரூபாய் என 119 மூட்டைகளுக்கு 3,570 ரூபாயைக் கட்டாயம் தந்துதான் ஆக வேண்டும்" என்று நிர்ப்பந்தம் செய்தாராம். இதனால் இன்னலுக்கு உள்ளான பெருமாள், லஞ்சம் கொடுக்க விரும்பாமல், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வேல்முருகனிடம் புகார் அளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்படி வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், 6.4.2022 அன்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பெருமாளிடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, லஞ்சம் கேட்ட பட்டியல் எழுத்தர் ஏழுமலையிடம் அந்தத் தொகையைக் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஏழுமலையைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கீழ்ப்பென்னாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.