Published:Updated:

மா விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஆந்திர அரசு... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

மாம்பழங்கள்
News
மாம்பழங்கள்

இந்த ஆண்டு விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை என்று கவலைப்படுகிறார்கள் விவசாயிகள். இதனால் அரசு ஏதாவது உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயம் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. விளைச்சல் இருந்தால் விலை இருப்பதில்லை. விலை இருந்தால் விளைச்சல் இருப்பதில்லை. இந்த ஆண்டு விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை என்று கவலைப்படுகிறார்கள் விவசாயிகள். இதனால் அரசு ஏதாவது உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குமரன் பேசியபோது, ``ஒவ்வோர் ஆண்டும் மா சீஸன் கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆனால், இதைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அது கோலாகலமாக இல்லை. தற்போது கிடைத்து வரும் விலை மா சாகுபடி விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாது. ஆந்திர மாநிலத்தில் மா விவசாயிகளுக்கு அம்மாநில அரசு கிலோவுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 வழங்குகிறது. அதைப் போலவே தமிழகத்திலும் மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். புதிதாகப் பதவியேற்றிருக்கும் அரசு இதை உடனே செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

மாமரம்
மாமரம்

இதுசம்பந்தமாக ஆந்திர மாநில விவசாயிகளிடம் பேசியபோது, ``தென்னிந்தியாவில் மா விவசாயம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. அதுவும் சித்தூர் மாவட்டம் மாம்பழம் மற்றும் பழக்கூழ் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. 2019-ம் ஆண்டு மாம்பழத்தின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதாவது, ஒரு கிலோ மாம்பழம் 6 ரூபாய்க்குத்தான் விற்பனையானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உடனே விவசாயிகள் மாங்காய்க்கு கூடுதல் விலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை உடனே கவனத்தில் கொண்ட ஆந்திர மாநில அரசு கிலோவுக்கு 5 ரூபாயை ஊக்கத்தொகையாக அறிவித்தது. அதன்படி ஒரு கிலோ மாங்காய் 11 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது லாபகரமான விலை இல்லையென்றாலும் மா விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியது.

இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு ஜூஸ் பேக்டரிக்கு மாம்பழங்களை அனுப்பும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால், உற்பத்தியான அதிக அளவிலான மாம்பழங்கள் பழக்கூழாக மாற்றி சேகரிக்கப்பட்டது. இக்கட்டான நேரத்தில் வழங்கப்பட்ட இந்த உதவித்தொகை எங்களை மாதிரி மா விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்றனர். கடந்த கொரோனா ஊரடங்கின்போதும் ரூ.2 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மா அறுவடை
மா அறுவடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மா விவசாயி சாந்தகுமாரிடம் பேசியபோது, ``இந்தாண்டு மாமரங்களில் ஆரம்பத்தில் நன்றாகப் பூக்கள் பூத்தது. இந்த முறை விளைச்சலும் நன்றாக இருக்கும் என்று கணித்திருந்தோம். ஆனால், எதிர்பாராமல் பிப்ரவரியில் பெய்த மழை, மார்ச் மாதத்திலும் தொடர்ந்த பனிப் பொழிவு காரணமாக பூக்கள் கொட்டி இந்த ஆண்டு விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது செந்தூரா, பெங்களூரா (தோத்தாபுரி) அறுவடை நேரம். ஆனால், விலையென்று பார்த்தால் ஒரு கிலோ பெங்களூரா ரூ.14-க்கும், ஒரு கிலோ செந்தூரா ரூ.13 - 17-க்கும், இமாம் பசந்த், அல்போன்சா (காதர்) ரூ.27 - 30-க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த விலை லாபகரமான விலை இல்லை. இந்த விலையில் விற்பனையானால் விவசாயிகள் நஷ்டத்தைத்தான் சந்திக்க முடியும். அதனால் அரசு மா விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.10 ஊக்கத்தொகை வழங்கினால் மட்டுமே ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்க முடியும். மா விவசாயமும் காப்பாற்றப்படும்.

உற்பத்தியாகும் பெரும்பான்மையான மாம்பழங்களை ஜூஸ் பேக்டரிகள்தான் அதிகம் வாங்குகின்றன. அதனால் மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அண்டை மாநிலங்கள் விவசாயிகள் கஷ்டப்படும்போது ஊக்கத்தொகையை அறிவித்து அவர்களைக் காப்பாற்றுகிறது. அதேபோன்று தமிழக அரசும் மா விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயிகளின் கோரிக்கைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சசர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர் பேசியபோது, ``கடந்த வாரம்தான் பதவியேற்று வேளாண்மைக்கு கீழ் வரும் ஒவ்வொரு துறையினருடன் ஆலோசனை செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை அறிந்து, அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன். மா விவசாயி களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்த ஒரு விரிவான அறிக்கையாக அளித்தால், அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.