Published:Updated:

`புதிய மாவட்டத்தின் முதல் விவசாயிகள் கூட்டம்!’ - அரசுக்கு மயிலாடுதுறை விவசாயிகள் வைக்கும் கோரிக்கை

தெலங்கான மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் `ரயத்துபந்து' திட்டம் போல ஒரு ஏக்கருக்கு ஒரு பருவத்துக்கு ரூபாய் 5,000 என இரண்டு பருவத்துக்கு 10,000 ரூபாய் ஏக்கர் உச்சவரம்பின்றி வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டுகிறோம்.

புதிய மயிலாடுதுறை மாவட்டம் அரசாணை வெளியிடப்பட்ட பின்னர் நடக்கும் முதல் விவசாயிகள் கூட்டம் சிறப்புமிக்கதாக அமைய வேண்டும் என்றும், அதில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

`கூகுள் மேப் தகவலால் சந்தேகப்படும் மனைவி!’ - மயிலாடுதுறை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த கணவர்

இதுபற்றி தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசியச் செயலாளரும், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆறுபாதி. கல்யாணத்திடம் பேசினோம்.

``புதிய மயிலாடுதுறை மாவட்டத்துக்குச் செயல் அலுவலராகத் தமிழக அரசு நியமிக்க உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியை நிர்வாக வசதி கருதி உடனே நியமிக்க வேண்டும். நடப்பு குறுவை சாகுபடிக்கு வரும் ஜூன் 12-ம் தேதி காவிரி நீர் திறப்பதை வரவேற்கிறோம். நீர்ப்பாசனத்தை சிறப்பாக ஒழுங்குபடுத்த வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, விவசாய பிரதிநிதிகள் கொண்ட குழு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக அரசு, சென்ற ஆண்டு நிறுத்தப்பட்ட சிறப்பு குறுவை, சம்பா தொகுப்பு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதில் அண்டை தெலங்கான மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் `ரயத்துபந்து' திட்டம்போல ஒரு ஏக்கருக்கு ஒரு பருவத்துக்கு ரூபாய் 5,000 என இரண்டு பருவத்துக்கு 10,000 ரூபாய் ஏக்கர் உச்சவரம்பின்றி வழங்கப்படுவதுபோல் தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டுகிறோம்.

ஆறுபாதி. கல்யாணம்
ஆறுபாதி. கல்யாணம்

குடிமராமத்து பணிகளில் பயன்பெறும் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குழு பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 15 தினங்களுக்கு ஒருமுறை நடத்துவது மிகவும் அவசியமானது. இதில், அனைத்து துறை அலுவலர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வகை செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர்ப் பாசனத்தை நம்பி சாகுபடி அதிகம் நடைபெறுவதால் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்குவது பெரிதும் விவசாயிகளைப் பாதுகாக்கும். இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் திட்டங்கள் முக்கியப்படுத்த வேண்டுகிறோம். விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் வங்கிக் கடன் பெறுவதில் நிறைய பிரச்னைகள் இருப்பதால் மாவட்ட ஆட்சியர், விவசாய பிரதிநிதிகள் வங்கியாளர்கள் இணைந்த சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும். இந்த முக்கிய கோரிக்கைகளையும், கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளையும், அரசு தரப்பில் நிறைவேற்றித் தர வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு