Published:Updated:

முதல்முறையாக `சுகர் ஃப்ரீ' நெல் சாகுபடி... மயிலாடுதுறை விவசாயிகளின் அசத்தல் முயற்சி!

நெல் சாகுபடி
நெல் சாகுபடி

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டுபிடித்து, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இவ்வகை நெல் ரகம் விளைவிக்கப்பட்டு அரிசி விற்பனையில் உள்ளது.

அரிசியிலுள்ள அதிக அளவு குளுக்கோஸ் ரத்தத்தில் சேர்ந்துவிடும் என்பதால் அரிசி உணவை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர். அவர்களைக் குறிவைத்து 'லோ ஜி.ஐ.' எனப்படும் லோ கிளைசெமிக் உணவுக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஆர்.என்.ஆர் எனப்படும் தெலங்கானா நெல் ரகம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டுபிடித்து, தெலங்கானா மற்றும் ஆந்திராவில்  இவ்வகை நெல் ரகம் விளைவிக்கப்பட்டு அரிசி விற்பனையில் உள்ளது.

இந்த அரிசியைச் சமைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸ் சேமிக்கும் விகிதம் வெகுவாகக் குறைகிறது என்பதால் இந்த நெல்லுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

நெல் சாகுபடி
நெல் சாகுபடி

தமிழகத்தில் இந்த நெல் ரகத்தை திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு நல்ல லாபம் அடைந்து வருகின்றனர். தற்போது முதன்முறையாக இந்த நெல் ரகத்தை மயிலாடுதுறை பகுதியில் பயிரிட்டுள்ளனர். குறுவையில் 120 நாள்களும் சம்பாவில் 140 நாள்களும் என்ற கணக்கில் இதைப் பயிரிட பரிந்துரை செய்யப்பட்டாலும் குறுவைக்கு இது உகந்ததாக இருக்காது என்பதால் சம்பா மற்றும் தாளடி விவசாயத்தில் இதைப் பயிரிட முடிவெடுத்து குத்தாலம், அஞ்சலாறு பகுதியில் செல்வம் என்பவர் தனது 25 ஏக்கரில் பயிரிட்டுள்ளார்.

விவசாயி செல்வத்திடம் இதுகுறித்துப் பேசினோம்.

"25 கி.கி எடை கொண்ட விதை நெல் ரூ.1,000 விலை கொடுத்து  வாங்கினேன். முதன்முறையாக மயிலாடுதுறை குத்தாலம் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் இந்தப் புதிய நெல் ரகத்தை சம்பா  பருவத்தில் நடவு செய்துள்ளோம். இது நல்ல விளைச்சலைத் தரும் என்றும் அதிக பூச்சித்தொல்லை இல்லாதது என்றும் கூறுகிறார்கள். 155 நாள் பயிர் வகையான இந்த ஆர்.என்.ஆர் ரகத்தை நட்டதால் 100 நாள்களுக்குள் கதிர் வெளிவந்து முற்றும் நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது பெய்த நிவர் புயலால் இந்தப் பயிர்கள் பல இடங்களில் சாய்ந்துவிட்டது.

இது பறவைகளுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. பச்சைக்கிளிகள் கதிர்மணிகளை அலகால் கொத்தி எடுத்துச் செல்கின்றன, சிட்டுக்குருவிகள் நெல்மணிகளாகக் கொத்துகின்றன.

இந்த மழையால் ஆர்.என்.ஆர் ரகப் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளதால் எதிர்பார்த்த மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

நெல் சாகுபடி
நெல் சாகுபடி

காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்தப் புதிய ரக நெல் எவ்வளவு ஈரப்பதம் இருந்தாலும் கிலோ ரூ.21 என்ற விலைக்கு அறுவடை செய்த வயலுக்கே தனியார் வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றுவிடுவார்கள். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இயற்கை முறையில் விவசாயம் செய்து அதை சுகர்ஃபிரீ அரிசி எனக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலும் ஒரு சில அரிசிக்கடைகளில் கிலோ இந்த ரக அரிசி ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்தில் லாபம் ஈட்ட முயற்சி எடுத்துள்ளோம். அறுவடைக்குப் பின்புதான் நிலவரம் தெரியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு