Published:Updated:

அறுவடை செய்த ராணுவம்.. கொண்டு சேர்த்த ரயில்வே.. கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்! #VikatanExclusive

பஞ்சாப் கோதுமை அறுவடை
பஞ்சாப் கோதுமை அறுவடை

ஊரடங்கு காலத்தில் மாநிலத்தில் விளைந்த கோதுமையை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்து சாதனை படைத்துள்ளது பஞ்சாப் அரசு. மத்திய, மாநில அரசின் கூட்டு முயற்சியில் இந்தச் சாதனை அரங்கேறியிருக்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாகக் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின. பல இடங்களில் அறுவடைக்கு ஆள் இல்லாமல், இயந்திரம் இல்லாமல் கஷ்டப்பட்டு அறுவடையை முடித்தார்கள். இன்னும் பல இடங்களில் வாழை, மலர்கள், வெங்காயம் அறுவடை செய்ய முடியாமல், விற்பனை வாய்ப்பு இல்லாமல் மிகப்பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள். இந்த நிலையில், இந்தக் கொரோனா காலத்திலும், அறுவடைக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல், ஒரு குண்டுமணி தானியத்தைக்கூட வீணாக்காமல் தங்கள் மாநிலத்தில் விளைந்த கோதுமையை முழுமையாக அறுவடை செய்துள்ளது பஞ்சாப்.

இந்த ஊரடங்கு காலத்தில் சத்தம் இல்லாமல் இமாலய சாதனையைப் படைத்துள்ளது பஞ்சாப். அதிலும் வழக்கத்தைவிட அதிக அளவில், இந்த ஆண்டு கோதுமையை அறுவடை செய்துள்ளது. நாட்டின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றிணைந்து செய்த பணியால் 10 மாநிலங்களுக்கு உணவுப் பொருள் கிடைத்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தாலும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட மத்திய அரசின் செயல்பாடு, ஒத்துழைப்பு மற்ற மாநிலங்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

`அத்தியாவசியப் பொருள்களை டெலிவரி செய்ய ஸ்விக்கி, ஜொமோட்டோ!’ - பஞ்சாப் அரசின் `செம' ஐடியா
அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்

கைகோத்த மத்திய, மாநில அரசுகள்!

நமக்குத் தை அறுவடை மாதம்போல், பஞ்சாப் மாநிலத்துக்கு ஏப்ரல்தான் அறுவடை மாதம். ஆண்டுதோறும் ஏப்ரல் 13-ம் தேதியை அறுவடை திருநாளாகக் கொண்டாடுவார்கள். இந்த நிலையில், மார்ச் மாதக்கடைசியில் ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய அரசு. விளைந்து அறுவடைக்கு நிற்கும் கோதுமையைச் சிந்தாமல், சிதறாமல் சேமிப்பு கிடங்குக்குக் கொண்டு வர நினைத்தது மாநில அரசு. இதற்காகப் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இதற்கெனச் சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் மற்றும் மாநில முதலமைச்சரின் ஆலோசகருமான டி.எஸ்.ஷெர்கில் திட்டங்களை ஒருங்கிணைத்தார். மாநில அரசின் அனைத்துத் துறையினரும் இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அரசுச் செயலாளர், கலெக்டர், காவல்துறை உயரதிகாரிகள், வருவாய்த்துறை, வேளாண்மைதுறை, ராணுவம் என அனைத்துத் துறையினரும் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்ட அமரீந்தர் சிங், அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநில நலனுக்காக, விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அறுவடை செய்த ராணுவம்.. கொண்டு சேர்த்த ரயில்வே.. கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்! #VikatanExclusive

விவசாயப் பணியில் ராணுவம்

மத்திய அரசும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியது. அதன் விளைவாக, ராணுவம், ரயில்வே, மத்திய, மாநில அரசுத் துறைகள் அனைத்தும் களத்தில் இறக்கி விடப்பட்டன. சட்டம் - ஒழுங்கு பணிகளில் இருந்தவர்கள் முதன்முதலாக விவசாயப் பணிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அதன் விளைவாகத் தனது விளைச்சலை வீடு (சேமிப்பு கிடங்கு) சேர்த்துள்ளது பஞ்சாப்.

`சேலம் ரயில்வே கோட்டத்தின் சிறப்பு சரக்கு வேகன் வசதி!’ - யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
துணை ராணுவப்படை, காவல்துறை வயலுக்குள் இறக்கிவிடப்பட்டன. லாரிகள், டிராக்டர்களை துணை ராணுவப்படையினர், போலீஸார் இயக்கினர். கோதுமை வயல்களில் 24 மணி நேரமும் அறுவடை பணி தொய்வில்லாமல் நடைபெற்றது.

2000 கூடுதல் மண்டிகள்

அறுவடை செய்யப்பட்ட கோதுமைகள், ஆயிரக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு வரப்பட்டன. லாரிகளை இயக்கியது, ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீஸார். சந்தையிலும் (மண்டிகள்) சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக 2000 மண்டிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. `கையில காசு வாயில தோசை’ என்பதுபோல, மண்டிகளில் உடனுக்குடன் விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. விளைச்சல் அதிகமானதால் சேமிப்பு கிடங்குகளில் வைக்க இடமில்லை. இதனால் மத்திய அரசின் உதவியோடு நாடு முழுவதும் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்குக் கோதுமை கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக இந்திய ரயில்வே, `அன்னபூர்ணா’ என்ற பெயரில் சிறப்புச் சரக்கு ரயில்களை இயக்குகிறது.

Wheat harvesting
Wheat harvesting
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில், கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டு நலனை முன்னிறுத்தி மத்திய அரசு முன்னெடுத்த செயல்பாடு, கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவராலும் பாரட்டப்படுகிறது. இது இந்திய அரசியலில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

மத்திய, மாநில அரசின் சாதனை

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில், கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டு நலனை முன்னிறுத்தி மத்திய அரசு முன்னெடுத்த செயல்பாடு, கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவராலும் பாரட்டப்படுகிறது. இது இந்திய அரசியலில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. மாநில அரசு, இக்கட்டான நேரத்தில் விவசாயிகளின் துயர் துடைப்பதற்காகக் காவல்துறை முதல் அனைத்து துறைகளையும் வேளாண் பணியில் ஈடுபடுத்தியதும் பாராட்டைப் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளது, பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள கோதுமை அறுவடை.

கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை 88 பெட்டிகள் கொண்ட அன்னபூர்ணா என்ற ரயில்மூலம், சுமார் 5,200 மெட்ரிக் டன் தானியம் பஞ்சாபிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் நடந்ததுபோல இங்கு எந்த இடத்திலும் நெல், கோதுமை வீணாகவில்லை.
உமேந்திரா தத், நிர்வாக இயக்குநர், கிரிஷி விர்ஷாத் மிஷன்
உமேந்திரா தத்
உமேந்திரா தத்

உதவியாக இருந்த மத்திய உணவுத்துறை

இதுகுறித்து பேசிய பஞ்சாப்பில் உள்ள கிரிஷி விர்ஷாத் மிஷன் அமைப்பின் நிர்வாக இயக்குநர் உமேந்திரா தத், ``பஞ்சாப்பில் எப்போதும் ஏப்ரல் மாதம் கோதுமை அறுவடை மாதம். மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்ததால் ஏப்ரல் மாதத்தில் எப்படி அறுவடை செய்யப்போகிறோம் என்ற நிலை இருந்தது. அதையும் மீறி லாரிகள், டிராக்டர்களைப் பயன்படுத்தி அரசின் மண்டிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை 88 பெட்டிகள் கொண்ட அன்னபூர்ணா என்ற ரயில்மூலம், சுமார் 5,200 மெட்ரிக் டன் தானியம் பஞ்சாபிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் நடந்ததுபோல இங்கு எந்த இடத்திலும் நெல், கோதுமை வீணாகவில்லை. தானியங்களை ரயில்மூலம் கொண்டு செல்ல மத்திய உணவுத் துறை உதவியாக இருந்தது. கோதுமை, அரிசி சரியான முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது” என்றார்.

சிவா
சிவா

எல்லாத்தையும் அரசாங்கமே பார்த்துகிடுச்சு!

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் வசித்து வரும் சிவா என்பவரிடம் பேசியபோது, ``இங்கே யாரும் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வதில்லை. காலை 7 மணி முதல் 11 மணிவரை அரை மணி நேரத்துக்கு ஒரு காய்கறி வண்டி வருகிறது. அதில் வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழங்களை வாங்கிக் கொள்கிறோம். அதனால் கொரோனா வைரஸின் தாக்கம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவாகத்தான் இருக்கிறது. கிராமங்களில் அவ்வளவாகக் கொரோனா பாதிப்பு இல்லை. நகர்ப் பகுதிகளில்தான் இருக்கிறது. இருந்தும் மக்கள் பாதுகாப்பான முறையிலிருந்துகொண்டே, வீட்டுக்குத் தேவையான பொருள்களைத் தள்ளுவண்டிகள் மூலம் வாங்கிக் கொள்கிறோம். விவசாயிகளும் டிராக்டர்கள் மூலமாகக் கொண்டு வந்து விடுகின்றனர். இங்கே காய்கறி, பழங்களைத் தோட்டத்தில் விவசாயிகள் அழித்ததாகச் செய்திகள் இல்லை. கொள்முதல் செய்ய அரசு சரியாக ஒத்துழைக்கிறது” என்றார்.

மத்திய அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கும் தமிழக அரசு, கொரோனா காலத்தில் விவசாய விளைபொருள்களைச் சேதாரம் இல்லாமல் பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லை.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், முறையான திட்டத்துடன், மத்திய அரசின் உதவியைப் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது பஞ்சாப் அரசு. அதே நேரத்தில், மத்திய அரசின் செல்லப்பிள்ளையாக இருக்கும் தமிழக அரசு, கொரோனா காலத்தில் விவசாய விளைபொருள்களைச் சேதாரம் இல்லாமல் சேர்க்க முயற்சி எடுக்கத் தவறிவிட்டது. திட்டமிட்டுச் செயல்படுத்தி இருந்தால் பஞ்சாப் விவசாயிகளைப் போல் தமிழக விவசாயிகளும் கொரோனா காலத்திலும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் அறுவடையான கோதுமையை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளது அன்னபூர்ணா சரக்கு ரயில். 88 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், 2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
Rail
Rail

புதிய வரலாறு படைத்த அன்னபூர்ணா ரயில்

பஞ்சாப் மாநிலத்தில் அறுவடையான கோதுமையை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளது அன்னபூர்ணா சரக்கு ரயில். 88 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், 2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பஞ்சாப்பின் தண்டரிகலனிலிருந்து மேற்கு வங்காளத்தின் புதிய ஜல்பைகுரி வரை உள்ள 1,634 கிலோ மீட்டர் தூரத்தை 49 மணி 50 நிமிடங்களில் சென்றடைந்துள்ளது. வழக்கமாக இந்தத் தூரத்தைக் கடக்க 96 முதல் 100 மணி நேரம் ஆகும். இந்திய ரயில்வே துறை இவ்வளவு உணவுத் தானியங்களைக் கொண்டு செல்வது இதுவே முதல் முறை.

விவசாயப் பயிர்கள் சேதமடைந்தால் அதற்கான விலையை அரசு வழங்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள நெல் அரவை ஆலைகள், எண்ணெய் எடுக்கும் ஆலைகள் அனைத்தும் உடனடியாகத் திறக்க வேண்டும்.
முனைவர் என்.ரவீந்திரன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் (ஓய்வு)
முனைவர்.ரவீந்திரன்
முனைவர்.ரவீந்திரன்

விளைபொருள் வீணாவதைத் தடுக்க ஆலோசனை

இந்த நிலையில், தமிழகத்தில் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய சில ஆலோசனைகளைச் சொல்கிறார் ஓய்வுபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என்.ரவீந்திரன்.

``கொரோனா காலத்தில் வேளாண் விளைபொருள்களின் அவசியம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால், அதைச் சிதறவிடாது முழுமையாக அறுவடை, கொள்முதல் செய்ய வேண்டும். உடனடியாக அறுவடை செய்யவேண்டிய பயிர்கள், விரைவில் அறுவடை செய்ய வேண்டிய பயிர்கள் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தில் உள்ள பயனாளிகளை அறுவடைப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அரசின் ஒத்துழைப்போடு லாரிகள், வண்டிகள் மூலம் காய்கறிகள், பழங்களைக் கொள்முதல் செய்து நுகர்வோரிடம் சேர்க்க வேண்டும். நகர்ப் பகுதிகளில் சிறு வியாபாரிகள்மூலம் வீடு வீடாக விற்கும் முறையை அமல்படுத்த வேண்டும். பொதுமக்களை மார்க்கெட்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. அதே போன்று அறுவடைப் பணிகளில் ஈடுபடும் பயனாளிகளுக்குக் கையுறை, சானிடைஸர் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள கொள்முதல் நிலையங்கள், விற்னைக் கூடங்கள், உழவர் சந்தைகள், மண்டிகள், பொது சந்தைகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்களை இந்தச் சந்தைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்களுக்குத் தடையற்ற உணவுப் பொருளைக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபொருள்கள் தமிழ்நாட்டுக்குள் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்குச் சப்ளை செய்வதற்கு ஏற்றவாறு போக்குவரத்துக்கான சாலைகள் திறக்க வேண்டும்.

மத்திய அரசு நெல் கொள்முதலை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயப் பயிர்கள் சேதமடைந்தால் அதற்கான விலையை அரசு வழங்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள நெல் அரவை ஆலைகள், எண்ணெய் எடுக்கும் ஆலைகள் அனைத்தும் உடனடியாகத் திறக்க வேண்டும். மேற்சொன்ன வழிகளைப் பின்பற்றினாலே விவசாய நிலங்களில் நெல், காய்கறிகள், பழங்கள் வீணாவதைத் தடுக்க முடியும். இதில் ஏற்கெனவே அறிவித்த வழிமுறைகள் இருந்தாலும் அதைத் திறம்படச் செயல்படுவதற்கான வழிகளை ஆராய வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு