Published:Updated:

பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்வு... விவசாயிகளுக்கு லாபமா, நஷ்டமா?

பால் கொள்முதல்

``ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி!.. மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 10 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முன் வர வேண்டும்..."

பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்வு... விவசாயிகளுக்கு லாபமா, நஷ்டமா?

``ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி!.. மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 10 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முன் வர வேண்டும்..."

Published:Updated:
பால் கொள்முதல்

2022 நவம்பர் 5, இன்றுமுதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 32 ரூபாயிலிருந்து, 35 ரூபாய் ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 ரூபாயிலிருந்து, 44 ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்தது. புண்ணாக்கு உட்பட மாட்டுதீவனங்கள்  விலையேற்றம் அடைந்த நிலையில் இந்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு பெரிய லாபத்தை கொடுத்து விடாது.

பால்
பால்

தமிழக அரசின் பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பெருமாள் வெளியிட்ட அறிக்கையில்,

''தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசிடமும் ஆவின் நிர்வாகத்திடமும் பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.10 கொள்முதல் விலை உயர்த்த கோரி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது 1 லிட்டர் பாலுக்கு ரூ.3 கொள்முதல் விலை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு பசும்பாலுக்கு ரூ.4 உயர்த்தி 1 லிட்டர் ரூ.32-க்கும், எருமைப்பாலுக்கு ரூ.6 உயர்த்தி ரூ.41 என அறிவித்தது. இடைப்பட்ட காலத்தில் கால்நடைத்தீவனங்களின் விலை உயர்வால் 1 லிட்டருக்கு ரூ.10 உயர்த்தக் கோரி கேட்டிருந்தோம்.

இந்நிலையில் ரூ.3 மட்டும் உயர்த்தியிருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஏற்கெனவே நுகர்வோருக்கு பால் விலை ரூ.3 குறைக்கப்பட்டதால் ஆவினுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது கொள்முதல் விலை உயர்வால் ரூ.400 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது.

பால் கொள்முதல்
பால் கொள்முதல்

மொத்தம் ரூ.700 கோடி கூடுதல் சுமை ஆவினுக்கு ஏற்படுகிறது. இந்த இழப்புக்கு மானியம் வழங்குவது குறித்து தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை . தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு ரூ.5-லிருந்து ரூ.10-வரை கொடுப்பதால் மொத்தமிருந்த 12,000 ஆரம்ப சங்கங்களில் தற்போது 8,000 சங்கங்கள்தான் ஆவினுக்கு பால் வழங்குகின்றன. இதனால் ஆரம்ப சங்கங்களும் ஆவின் நிறுவனமும் அழிந்துவிடும் ஆபத்தில் உள்ளது. இச்சூழலில் பாலின் கொள்முதல் விலை உயர்வுடன் இதர கோரிக்கைகள் குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை அழைத்து பேச வேண்டும். கொள்முதல் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து மேலும் உயர்த்தி அறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி! என்று மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்,

04/11/2022 தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019 -ம் ஆண்டுக்குப் பிறகு அரசு உயர்த்தாத சூழலில் பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

பால் கொள்முதல்
பால் கொள்முதல்

தற்போது பால் உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முன் வந்திருப்பதோடு, நிலைப்படுத்தப்பட்ட, சமன்படுத்தப்பட்ட பால் விற்பனை விலையை உயர்த்துவதில்லை என்கிற தமிழக அரசின் முடிவிற்கு பாராட்டுகள்.

அதே சமயம் பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு 15 ரூபாய் கொள்முதல் விலை உயர்வு கேட்ட நிலையில் யானை பசிக்கு சோளப்பொரியை உணவாக வழங்குவது போல் 3 ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்க தமிழக அரசு முன் வந்திருப்பதும், பால் முகவர்களுக்கான ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

மேலும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்கி விட்டு நிறைகொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விற்பனை விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாதாந்திர அட்டைக்கும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலை உயர்வுக்கும் லிட்டருக்கு 14 ரூபாய் வித்தியாசம் இருப்பதால் இது ஊழல், முறைகேடுகளுக்கே வழிவகுக்கும் என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பால்
பால்

அத்துடன் அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு என்பது தற்போதைய காலகட்டத்தில் கட்டுபடியாகாது என்பதால் அதனையும் மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 10 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முன் வர வேண்டும். மேலும் ஆவினின் வளர்ச்சி என்பது பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள், பொதுமக்களோடு தொடர்புடையது என்பதால் இனி வருங்காலங்களில் பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு, பால் விற்பனைக்கான கமிஷன் தொகை இம்மூன்றையும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு போல் ஆண்டுதோறும் மாற்றியமைக்க அரசு ஆவன செய்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.