Published:Updated:

`இந்த அதிசயம் இந்தியாவில் வேறு எங்கும் நடந்திருக்காது!' - செல்லூர் ராஜூவை விளாசிய ஐ.பெரியசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

``கூட்டுறவுத் துறையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றால் விசாரணையைத் தொடங்கிய உடனே ஏன் பதற வேண்டும். மடியில் கனம் இல்லாதவர்க்கு எதற்கு பயம்?"

தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

அக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ``கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்பட்டதாகப் புகார் வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். விசாரணையில் யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதுரை அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ``இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே கூட்டுறவுத் துறையைக் கணினி மயமாக்கி உள்ளது. அனைத்துக் கடன் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் எங்கேயும் தவறு செய்ய முடியாது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு துறையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை, விருப்பம் இல்லாமல் அத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருவதோடு, மன வெறுப்பில் இருக்கிறார்’’ என்று தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, ``கூட்டுறவுத் துறையில் அமைச்சராக இருந்த ஒருவருக்கு துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இன்றுவரை மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியுடன் தொடக்க வேளாண்மை வங்கிகள் ஆன்லைன் மூலமாக இணைக்கப்படவில்லை. 10 ஆண்டுகளாகக் கூட்டுறவுத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். செல்லூர் ராஜு விஞ்ஞான பூர்வமாகச் சிந்திப்பவர். அவரைப்போல நாங்கள் விஞ்ஞானியில்லை. நாங்கள் எதார்த்தமாகச் சட்டப்படி செயல்பட்டு வருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துறையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றால் விசாரணையைத் தொடங்கிய உடனே ஏன் பதற வேண்டும். மடியில் கனம் இல்லாதவர்க்கு எதற்கு பயம்? பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு 2 மாதங்களுக்கு முன்பிருந்து விவசாயிகள் அல்லாதவர்களுக்கும் கடன் வழங்கியிருப்பதாகப் புகார்களில் சொல்கிறார்கள். தொடக்க வேளாண்மை வங்கியில் கடன் கொடுப்பதற்குப் பணமே இல்லை. மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்தும் பணம் வாங்கவில்லை. ஆக, பணமே இல்லாமல் கடன் கொடுத்திருக்கிறார்கள். இந்த அதிசயம் இந்தியாவில் வேறு எங்கும் நடந்திருக்காது. அந்த விஞ்ஞான பூர்வமான முறைகேட்டைத்தான் விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறோம்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி

4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனுக்கும் கணினிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார், செல்லூர் ராஜு. வங்கிகளில் கணினி இருந்தாலே அது ஆன்லைன் என நினைத்துக் கொள்கிறார். முதலில் இதைப் பற்றிய தெளிவு பெறட்டும். அதன் பிறகு கூட்டுறவுத் துறையில் எனக்கு என்ன தெரியும், தெரியாது எனப் பேசட்டும்.

இந்தத்துறை முக்கியமான துறை. ஒவ்வொரு குடிமகனிடமும் நேரடித் தொடர்பில் உள்ள துறை. கடந்த 10 ஆண்டுகளில் சீர்கெட்டுப்போயுள்ள கூட்டுறவுத் துறையைச் சீர்படுத்திச் சிறப்பான துறையாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவுத் துறையைச் சிறப்பான துறையாக மாற்றுவேன். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாகக் கூட்டுறவு வங்கிகளையும் உயர்த்துவேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு