Published:Updated:

`ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் முருங்கை பவுடர் தொழிற்சாலை!’ - கரூர் விவசாயிகளுக்கு கைகொடுக்குமா?

 முருங்கை விவசாயிகள்
முருங்கை விவசாயிகள் ( நா.ராஜமுருகன் )

அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கை விளைச்சல் அதிகம் இருக்கும் சமயங்களில் 1 கிலோ முருங்கை 5 ரூபாய்க்கும் குறைவாகவும், விளைச்சல் குறைவாக உள்ள சமயங்களில் 1 கிலோ, 100 ரூபாய் வரை இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.

அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகம் விளையும் முருங்கைக்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக, அரசு சார்பில் சுமார் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில், நிறுவனம் அமைக்க இருப்பதாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். `இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடக் கூடாது; நடைமுறைக்கு வரணும்' என்று முருங்கை விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

முருங்கை
முருங்கை
நா.ராஜமுருகன்
`கிலோ 4 ரூபாய்க்கு வாங்கக்கூட ஆள் இல்லை!' - கொரோனா தாக்கத்தால் கலங்கும் முருங்கை விவசாயிகள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மழைப்பொழிவு குறைந்த வறண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் பிரதான விவசாயமாக முருங்கை உற்பத்தியை விவசாயிகள் செய்து வருகின்றனர். தமிழக அளவில் முருங்கை உற்பத்தியில் 60 சதவிகித முருங்கை உற்பத்தி அரவக்குறிச்சிப் பகுதியில்தான் நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் முருங்கை இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. ஆனால், அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கை விளைச்சல் அதிகம் இருக்கும் சமயங்களில் 1 கிலோ முருங்கை 5 ரூபாய்க்கும் குறைவாகவும், விளைச்சல் குறைவாக உள்ள சமயங்களில் 1 கிலோ, 100 ரூபாய் வரை இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.

முருங்கை
முருங்கை
நா.ராஜமுருகன்

அதேபோன்று, செங்காந்தள் மலர் விவசாயத்தில் அதன் விதை மிகக் குறைவான விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் பல ஆயிரக்கணக்கில் விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக, அப்பகுதி விவசாயிகள் இவற்றை மதிப்பு கூட்டுப் பொருள்களாக மாற்றி விற்பனை செய்ய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பலரும் இதைச் செய்துதருவதாக வாக்குறுதி கொடுத்து, வாக்குகளை அறுவடை செய்து வந்தனர். ஆனால், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை.

இந்த நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``இங்குள்ள முருங்கை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முருங்கை மற்றும் செங்காந்தள் மலர் விவசாயிகளை ஒன்றிணைத்து புதிதாக சங்கம் உருவாக்கப்பட உள்ளது.

விவசாயிகள் மத்தியில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
விவசாயிகள் மத்தியில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

அதோடு, அவர்களுக்குக் கிடைக்க கூடிய நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்யப்பட இருக்கிறது. மேலும், இப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் முருங்கைக்காய் பவுடர் செய்து, முருங்கையை மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்யும் நிறுவனம், ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு முருங்கை விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், `இந்தத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படுமா?' என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, நம்மிடம் பேசிய முருங்கை விவசாயிகள் சிலர்,

``அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த அறிவிப்பு உண்மையில் எங்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. ஆனால், பல திட்டங்கள் வெறும் அறிவிப்போடு மட்டும் நிற்பது போல் இந்தத் திட்டமும் நின்றுவிடுமோங்கிற அச்சமும் இருக்கிறது. ஏற்கெனவே, கடவூரில் அரசுக் கல்லூரி அமைப்பது, குளித்தலை, கரூர் நகராட்சிகளில் பேருந்து நிலையம் அமைப்பது, ஜவுளி பூங்கா அமைப்பது என்று அ.தி.மு.க அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் வெறும் அறிவிப்பு நிலையிலேயே, கிணற்றில் போடப்பட்ட கல்லாக கிடக்கிறது.

முருங்கை விவசாயிகள்
முருங்கை விவசாயிகள்
நா.ராஜமுருகன்

இதற்கு காரணம், அமைச்சருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் உள்ள அரசியல் யுத்தம்தான். அதுபோல் இல்லாமல், அமைச்சர் அறிவித்த இந்த முருங்கைப் பவுடர் தொழிற்சாலையை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு