கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பருவமழை காலங்களில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்து மத்திய துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்திய நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான இக்குழுவில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற் பொறியாளர் குமார், கேரள மாநில அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம் பெற்றனர். இதற்காக தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு வந்த துணைக் குழுவினர் அங்கிருந்து தமிழக அரசுக்கு சொந்தமான கண்ணகி படகில் அணைக்கு பயணம் செய்தனர். கேரள பிரதிநிதிகள் அம்மாநில அரசின் படகில் தனியே பயணம் செய்தனர்.
இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மதகுப்பகுதி, கசிவு நீர் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தமிழக அதிகாரிகள் அணை பராமரிப்பு பணிக்கான தளவாடப் பொருள்களைக் கூட கேரள வனத்துறை தடுக்கிறது எனக் கூறினர். அதற்கு துணைக்குழு அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருமாநில அரசுகளுடன் பேசி அதற்கு தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் என துணைக் கண்காணிப்பு குழுவினர் கூறிச் சென்றனர்.

மேலும், முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவி பொருத்த பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் துணைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவியும் நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆக்சிலரோ கிராப் கருவியும் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வினிடம் பேசினோம்...'' நிலச்சரிவை முன்கூட்டியே அறிவிக்கும் ஆக்சிலரோ கிராப் கருவி ஏற்கெனவே நம் அலுவலகத்துக்கு வந்துவிட்டது. நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவி கனடாவில் இருந்து வரவேண்டியுள்ளது. அந்தக் கருவி 3 மாதங்களின் நமக்கு கிடைத்துவிடும். ஐதராபாத்தில் உள்ள இந்திய அரசு நிறுவன விஞ்ஞானிகள் மூலமாக, இந்தக் கருவிகளை பொருத்த உள்ளோம். முன்னதாக அணைப்பகுதியில் கருவிகளை பொருத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்'' என்றார்.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.90அடியாகவும், நீர் இருப்பு 6,093மி.கன அடியாக இருக்கிறது. நீர் வரத்து விநாடிக்கு 1,879கன அடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 1867கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.20 அடியாகவும், நீர் இருப்பு 5446 மி.கன அடியாக இருக்கிறது. நீர் வரத்து விநாடிக்கு 8143 கன அடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 1789 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.