Published:Updated:

தஞ்சை: புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி, எடப்பாடி பழனிசாமி! - முத்தரசன்

முத்தரசன்
முத்தரசன் ( ம.அரவிந்த் )

`விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு துரோகம் விளைவிக்க முடியுமோ அந்த அளவுக்கு துரோகம் செய்துவருகிறார் மோடி. விவசாயிகளை ஏமாற்றும் வகையில் பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்!’ - முத்தரசன்

`மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்கள் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்’ என கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன்
ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன்

மத்திய பா.ஜ.க அரசு மூன்று வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியிருக்கிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. `விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியாதாவது, ``மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிராக, விவசாயிகளுக்கு விரோதம் ஏற்படுத்தக்கூடிய மூன்று சட்டங்களைக்கொண்டு வந்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற மேலவையில் முறையாக விவாதிக்காமல், வாக்கெடுப்பு நடத்தாமல் இவை நிறைவேற்றப்பட்டிருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என எல்லோரும் கண்டிக்கிறார்கள். குடியரசுத் தலைவரிடம், `இந்தச் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது; நிராகரிக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் முறையிட்டும், இந்தச் சட்டங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தச் சட்டங்கள் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

முத்தரசன்
முத்தரசன்

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் `மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். அவருடைய பேச்சு மக்களின் மனசாட்சிக்கு விரோதமான குரலாக ஒலிக்கிறது. விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு துரோகம் விளைவிக்க முடியுமோ, அந்த அளவுக்கு துரோகம் செய்துவருகிறார் மோடி. விவசாயிகளை ஏமாற்றும் வகையில் பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு விவசாயி என அடிக்கடி கூறுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே ஒரு விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். விவசாயிகளுக்கு, விவசாயத்துக்க்கு எதிரான இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

முத்தரசன்
முத்தரசன்
ம.அரவிந்த்

இன்றைக்கு தமிழ்நாட்டில் அண்ணாவின் பெயரால் நடைபெறும் ஆட்சியில், தந்தை பெரியார் சிலை தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது. ஆனால், இப்படிச் செய்பவர்களைக் கைது செய்யாமல், யாருக்கோ பயந்து, அஞ்சி நடுங்கி சமூக விரோதிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அரசு செயல்படுவது வெட்கக்கேடானது; மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டம் வேளாண்மை மிகுந்த மாவட்டம். தற்போது இந்தப் பகுதியில் உரத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. குறுவை அறுவடை நடந்திருக்கிறது. ஆனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்” என்று சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு