Published:Updated:

யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி... மாற்றாக மீன் அமிலம் தயார் செய்வது எப்படி?

நாகை : 'யூரியா கிடைக்கலை' - விவசாயிகள் கவலை. ' மீன் அமிலம் இருக்கு' இயற்கை வேளாண் விவசாயிகள் மகிழ்ச்சி.

நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் யூரியா, உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டுதான் சுமார் 1,000 ஹெக்டேர் நிலப் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் அதிக ஆர்வம் செலுத்தி தற்போது வரை சுமார் 6,500 ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்துள்ளனர். நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்றங்கால் நடவு முறையில் சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள், பயிர்கள் பசுமை பெறுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் நைட்ரஜன் தேவை என்பதால் அடி உரமாக இடுவதற்கு யூரியா பயன்படுத்தி வருகின்றனர்.

யூரியா
யூரியா

இந்நிலையில் திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருந்தவன்புலம், நீர்மூளை, கீழையூர், திருவாய்மூர், எட்டுக்குடி, சித்தாய்மூர்,வாழக்கரை, மீனம்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா போதிய அளவில் கிடைக்காததால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும், விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றிருப்போருக்கு மட்டுமே உரம் வழங்கப்படுவதாகவும், அதுவும் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்படுவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். கடன் பெறாத விவசாயிகளுக்குத் தற்பொழுது உரம் வழங்கப்படுவதில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபற்றி அப்பகுதி விவசாயிகளிடம் பேசியபோது,

"மேட்டூர் அணையிலிருந்து சரியான நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து நல்ல மகசூல் காணலாமென எதிர்பார்த்திருந்தோம். எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த உரத் தட்டுப்பாடு கவலை அடைய வைத்துள்ளது. யூரியா தனியார் கடைகளில் கிராக்கி. அவுங்க வைக்கிறதுதான் விலையா இருக்கு. வேற வழியில்லாம யூரியாவை அதிக விலை கொடுத்து வாங்கறோம்" என்றனர்

இதுகுறித்து வேளாண்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,

" திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் உரத் தட்டுப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாள்களில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐ.பி.எல். ரக உரமானது நாகை மாவட்டத்துக்கு 1,003 டன் இறக்குமதி செய்யவுள்ளதால் உரத் தட்டுப்பாடு கூடிய விரைவிலேயே நீங்கிவிடும் என்றும் தெரிவித்தனர்.

குணசீலன்
குணசீலன்

ஆனால், "யூரியா தட்டுப்பாடு, யூரியா விலை அதிகம் என்று விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை யூரியாவைவிட பயிருக்கு நல்ல பசுமையும் வளர்ச்சியும தரக்கூடிய உரமாக மீன் அமிலம் உள்ளது" என்கிறார் இயற்கை வேளாண் விவசாயி சரபோஜிராஜபுரத்தைச் சேர்ந்த குணசீலன்.

அவரிடம் பேசினோம், "ஒரு பிளாஸ்டிக் கேனில் 10 கிலோ மீன் கழிவுகளோடு 10 கிலோ நாட்டு சர்க்கரையைக் கலந்து காற்றுப் புகாமல் இறுக்கி மூடி 21 நாள்கள் வைக்க வேண்டும். அதன்பின் அதனை எடுத்தால் தேன் போல மீன் அமிலம் தயாராகிவிடும். இதில் ஒரு ஏக்கர் பயிருக்கு ஒரு லிட்டர் அளவுக்கு எடுத்து 10 டேங்க் ஸ்பிரேயர் மூலம் தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மீன் அமிலத்தைக் கலந்து பயிருக்குப் பாய்கிற நீரிலும் கலந்துவிடலாம். இது யூரியாவைவிட அதிகப் பலன் தரக்கூடியதாகும்" என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு