Published:Updated:

விவசாயிகளை லட்சாதிபதியாக்கிய அஸ்வகந்தா! இந்தியாவில் வளரும் மூலிகைச் சாகுபடி!

கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கூட்டம்

நாட்டு நடப்பு

விவசாயிகளை லட்சாதிபதியாக்கிய அஸ்வகந்தா! இந்தியாவில் வளரும் மூலிகைச் சாகுபடி!

நாட்டு நடப்பு

Published:Updated:
கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கூட்டம்

தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம், தமிழ்நாடு மருத்துவத் தாவரங்கள் வாரியம், அண்ணா பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர் மண்டலம்), தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து ‘மருத்துவத் தாவரங்கள் சாகுபடி மற்றும் சாறு பிரித்தெடுத்தலில் தொழில் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பை கோயம்புத்தூரில் நடத்தின. இதில் மூலிகைச் சாகுபடி விவசாயிகள், தொழில்முனைவோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடக்க நிகழ்வில்
தொடக்க நிகழ்வில்

தொடக்க விழாவில் பேசிய தமிழ்நாடு மருத்துவத் தாவரங்கள் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியும், உறுப்பினர் செயலருமான கணேஷ் ஐ.ஏ.எஸ், “சீனா ஆண்டுக்கு 1 லட்சம் கோடி மருத்துவம் மற்றும் நறுமணத் தாவரப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இந்தியா 10,000 கோடி அளவுக்குத்தான் ஏற்றுமதி செய்கிறது. சீனா எந்தளவுக்குத் தொன்மையான நாடோ, அந்தளவுக்கு இந்தியாவும் தொன்மையான நாடுதான். இங்கே மருத்துவத் தாவரங்கள் சாகுபடிக்கு ஏற்ற விதவிதமான காலநிலை உள்ளது. ஒரேமாதிரியான காலநிலை கொண்ட சீனாவே இதை நேர்த்தியாகச் செய்யும்போது, நாம் ஏன் செய்ய முன்வரக் கூடாது. தற்போது திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் செங்காந்தள் செடியிலிருந்து விதைகள் எடுத்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அவுரி (திருநெல்வேலி சென்னா) மற்றும் நித்ய கல்யாணி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் கோலியஸ் சாகுபடியும், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மஞ்சளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதைத்தவிர்த்து முருங்கை, அஸ்வகந்தாவுக்கான (அமுக்குரா கிழங்கு) வர்த்தகமும் வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே கரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் முருங்கையை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்து வருகின்றன.

நிகழ்வில் கலந்துகொண்டோர்
நிகழ்வில் கலந்துகொண்டோர்


இந்த கொரோனா காலத்துக்குப் பிறகு, அஸ்வகந்தாவுக்கு உலக அளவிலான சந்தை உருவாகியிருக்கிறது. 6 மில்லியன் டன்னாக இருந்த அஸ்வகந்தாவின் ஏற்றுமதி 20 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. இதை உடனே தெரிந்துகொண்ட ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்ட விவசாயிகள் அதைச் சாகுபடி செய்து நிறைய பேர் லட்சாதிபதியாகியுள்ளனர். மூலிகைகளில் சிலவற்றில் அவ்வப்போது சந்தை ஏறும். அதைப் புரிந்து கொண்டு சாகுபடி செய்தால் மூலிகைச் சாகுபடி வருமானம் கொடுக்கக் கூடியதுதான். இப்போது அஸ்வகந்தாவை தமிழ்நாட்டில் 1,000 ஏக்கரில் சாகுபடி செய்ய முதற்கட்டமாக முயற்சி எடுத்துள்ளோம்.

மூலிகைப் பயிர்களைச் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், தமிழ்நாடு மருத்துவத் தாவரங்கள் வாரியத்தில் 5,000 ரூபாய் கட்டி உறுப்பினராகிக் கொண்டால் தொழில்நுட்ப வசதிகள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் வழங்கப்படும். ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படும் மானிய உதவிகளும் கிடைக்கும். ஆர்வமுள்ள விவசாயிகள் எங்களை அணுகலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா

வேடசந்தூரில் அமைந்துள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவேல் பேசியபோது, “மூலிகைப் பயிர்கள் சாகுபடியைப் பொறுத்தவரைப் பெரிய அளவில் தண்ணீர் வசதி தேவையில்லை. அதுவும் தென்னை போன்ற பயிர்களில் ஊடுபயிராகவே சாகுபடி செய்யலாம். அதே போன்று இசப்கோல் (ஸ்கூல் விதை) என்ற மூலிகைத் தாவரம் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்த இந்தத் தாவரத்தைக் குஜராத்தில் அதிகம் சாகுபடி செய்கிறார்கள். இது குளிர்காலத்தில் சாகுபடி செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் கம்பம், கொடைக்கானல், ஊட்டியில் சாகுபடி செய்யலாம். அதே போன்று தண்ணீர்விட்டான் கிழங்கும் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நறுமணப் பயிர்களில் வெட்டிவேர், லெமன் கிராஸ், துளசி, பச்சோலி, பாமரோசா பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக வாசனை சோப்பு, பாத்திரம் தேய்க்கும் சோப்புத் தயாரிப்பில் எலுமிச்சைக்கு மாற்றாக அதிகம் லெமன் கிராஸ்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் லெமன் கிராஸூக்கு நல்ல சந்தை வாய்ப்பு உருவாகி வருகிறது. விவசாயிகளிடம் மூலிகையை வாங்கும் வியாபாரிகள் எங்கு விற்கிறார்கள் என்ற சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால், மூலிகைப் பயிர் விற்பனைக்கான சந்தையை எளிதாக அடையலாம். சந்தை வாய்ப்புகள் அறிந்து சாகுபடி செய்தால் மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் சாகுபடி யில் நல்ல வருமானம் பார்க்கலாம்” என்றார்.

பெங்களூருவில் உள்ள மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சுந்தரேசன், “புதினாவை நாம் சமையலுக்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம். புதினா விலிருந்து எண்ணெய் எடுப்பதற்கென்றே ஒரு ரகம் இருக்கிறது. அதைச் சாகுபடி செய்து வடமாநில விவசாயிகளில் பலர் வசதியாக வாழ்கிறார்கள். காரணம், அங்கே விவசாயிகள் குழுவாக இணைந்து கம்பெனி களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் ஹிமாலயா, டாபர் போன்ற கம்பெனிகள் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்களைக் கொள்முதல் செய்வதில் முன்னணியில் இருக்கின்றன. இதைத் தவிரப் பல கம்பெனிகள் இருக்கின்றன. எந்தெந்த கம்பெனிகள் வாங்குகின்றன, எங்கு தயாரிக்கின்றன போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு களத்தில் இறங்கினால் மூலிகைப் பயிர் சாகுபடியில் கலக்கலாம். இப்போது தமிழகத்தில் ‘அரோமோ மிஷன்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளைக் குழுவாக இணைத்து வெட்டி வேர், எலுமிச்சைப் புல் (லெமன் கிராஸ்) மற்றும் துளசி சாகுபடியைத் தொடங்கியுள்ளோம்.

பெங்களூருவில் இருக்கும் எங்கள் ஆராய்ச்சி மையத்தில் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர் நாற்றுகள், கன்றுகள் கிடைக் கின்றன. இவற்றைச் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பங்களும், ஆலோசனைகளும் கிடைக்கின்றன. எங்கள் மையத்திலேயே தாவரங்களிலிருந்து எண்ணெய் பிரித் தெடுக்கும் கருவிகளும் இருக்கின்றன. அவற்றின் செயல்முறை விளக்கங்களையும் கற்றுத் தருகிறோம்.

கோவையில் தனலட்சுமி என்ற பெண்மணி ரோஜா மலரிலிருந்து சாறெடுத்து இயற்கை யான ‘ரோஸ் வாட்டர்’ தயாரிக்கிறார். இது போன்று வித்தியாசமான முயற்சியில் இறங்கினால் நல்ல வருமானம் பார்க்கலாம். இந்தியாவில் மூலிகை மருத்துவம் வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. அதைக் கைக்கொள்வதில்தான் வெற்றி அடங்கி யிருக்கிறது” என்றார்.

விவசாயி ஆனந்தன் பேசியபோது, “கோபிசெட்டிப்பாளையத்தில் 25 ஆண்டு களாக வெட்டி வேர், லெமன் கிராஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். எனக்குச் சொந்தமான 60 ஏக்கரிலும் வெட்டிவேர் சாகுபடிதான் நடக்கிறது. இதைத்தவிர 250 ஏக்கரைக் குத்தகை எடுத்து லெமன் கிராஸ் சாகுபடி செய்கிறேன். வெட்டிவேர், லெமன் கிராஸ் இரண்டிலும் எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறேன். இதன்மூலமா எண்ணெய் எடுத்து ஏற்றுமதி செய்கிறேன். என் அனுபவத்தில் ஒரு ஏக்கர் மூலிகைப் பயிர்கள் சாகுபடி மூலம் வருஷத் துக்கு 3 லட்சம் ரூபாய்த் தாராளமாகச் சம்பாதிக்க முடியும். மூலிகை மட்டுமல்ல, எந்த விவசாயமாக இருந்தாலும் உங்களுக்கான சந்தையைப் பிடித்துவிட்டால் ஏறுமுகம்தான்” என்றார்.

விஜயகுமார், ஆனந்தன், கணேஷ், சுந்தரேசன், கந்தவேல், மணிவேல்
விஜயகுமார், ஆனந்தன், கணேஷ், சுந்தரேசன், கந்தவேல், மணிவேல்

அரிய மூலிகைகள் குறித்து, தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியத்தின் துணை இயக்குநர் முருகேசன், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் மூலிகைப் பயிர்கள் சாகுபடிக்கு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து டாக்டர் விஜயகுமார், பாரம்பர்ய மூலிகை களின் பயன்கள் குறித்து வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்கள். புதுச்சேரி முதன்மை மருத்துவ அதிகாரி ஶ்ரீதரன், கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சரவணகுமார் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டார்கள். நிகழ்வை இயந்திரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கந்தவேல், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு மையத்தின் கள ஒருங்கிணைப் பாளர் சாம் ஜெயகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

தொடர்புக்கு, தமிழ்நாடு மருத்துவத் தாவரங்கள் வாரியம், அரும்பாக்கம், சென்னை. தொலைபேசி: 044 26222565

முனைவர் சுந்தரேசன்,
செல்போன்: 73531 00036

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism