நாட்டு நடப்பு
Published:Updated:

மக்காசோளத்தில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல்... வேதனையில் விவசாயிகள்...

மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...
பிரீமியம் ஸ்டோரி
News
மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...

இயற்கை தீர்வு சொல்லும் வேளாண் அதிகாரி!

தீர்வு

அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் மக்காச்சோளப் பயிர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இதன் தாக்கம் சற்றுக் கூடுதலாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மிகவும் வறட்சியான மாவட்டங்களில் பெரம்பலூரும் ஒன்று. இங்குள்ள விவசாயிகள், மானாவாரி சாகுபடியைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர். மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், உளுந்து, மிளகாய் உள்ளிட்ட பயிர்களைப் பரவலாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு 2,09,950 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...
மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர், பேரளி, வேப்பந்தட்டை, எசனை, வேப்பூர், செந்துறை, அங்கனூர், திருமாந்துறை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைவிக்கப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் அதிகளவில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் இருப்பதாக மிகுந்த கவலையோடு தெரிவிக்கிறார்க்ள் இப்பகுதி விவசாயிகள்.

மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...
மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...

நம்மிடம் பேசிய எசனை கிராமத்தைச்சேர்ந்த விவசாயி செங்கமலை, “எனக்குச் சொந்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 4 ஏக்கர்ல மக்காச்சோளம் பயிரிட்டிருக்கேன். இந்த வருஷம் அமெரிக்கன் படைப்புழுவோட தாக்குதல் அதிகமாக இருக்கு. நான் பயிரிட்டு 60 நாள்கள் ஆகுது. விதைப்பு செஞ்சு 20 நாள்கள் ஆன பிறகு, இலைகள்ல புழுக்களோட எச்சங்கள் தென்பட்டுச்சு. அடுத்த சில நாள்கள்லயே செடி முழுக்கவும் புழுக்கள் பரவ ஆரம்பிச்சுது.

மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...
மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...

இதனால பயிர்கள் சுணக்கமா ஆயிடுச்சு. படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த... நாலு ஏக்கருக்கும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணி, ரசாயன பூச்சிமருந்துத் தெளிச்சி பார்த்தேன். ஆனா எந்தப் பலனுமே இல்லை. புழுக்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு. உழவு, அடியுரம், விதை, விதைப்பு செய்றதுக்கான கூலி, மேலுரம், பூச்சி மருந்துக்குனு இதுவரைக்கும் நாலு ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு பண்ணியிருக்கேன். ஆனா, போட்ட முதலுக்குக் கூட விளைச்சல் கிடைக்காது’’ எனக் கவலையுடன் தெரிவித்தார்.

மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...
மக்காசோளத்தில் படைப்புழுத் தாக்குதல்...

இப்பகுதி விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்து வரும் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லத்துரை, ‘‘படைப்புழுத் தாக்குதலால, இந்த மாவட்டத்துல உள்ள மக்காச்சோள விவசாயிகள் கடந்த நாலு வருஷமாவே தொடர் நஷ்டத்தைச் சந்திச்சுட்டு வர்றாங்க. வேளாண்மைத் துறை பலவிதமான நடவடிக்கைகளை எடுத்தும் கூட இந்தப் பிரச்னையைச் சரி செய்யவே முடியலை. கடந்த 2020-ம் வருஷம் நவம்பர், டிசம்பர் மாசங்கள்ல, வழக்கத்தைவிட அதிகமா பெய்ஞ்ச பருவ மழை, நிவர், புரெவி புயல் தாக்குதலால மக்காச்சோளப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுச்சு. குறிப்பா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021, ஜனவரி மாசம் பருவம் தவறிப் பெய்ஞ்ச தொடர் கன மழை காரணமா மக்காச்சோளக் கதிர்கள் முற்றி, அறுவடை செய்றதுக்கு முன்னாடியே, பயிர்கள்ல முளைப்பு வந்துடுச்சு.

‘‘ரசாயன பூச்சிமருந்துத் தெளிச்சி பார்த்தேன். ஆனா எந்தப் பலனுமே இல்லை. புழுக்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கிட்டேதான் இருக்கு.’’

இந்த வருஷம் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் விவசாயிங்க நிலைகுலைஞ்சி நிக்கிறாங்க. குறிப்பாக 45 நாள்களுக்கு உள்பட்ட இளம் பயிர்கள்ல தான் இந்தப் புழுக்கள் அதிகமா குடியேறி தண்டுகளையும் தோகைகளையும் குருத்துகளையும் தாக்குது. இந்தப் படைப்புழு பெருக்கத்துக்கு முக்கியக் காரணமா, பருவநிலை மாற்றம் தான்னு வேளாண்மை துறை அதிகாரிகள் சொல்றாங்க. அதிக வீரியமுள்ள மருந்துகளைப் பயன்படுத்தும் போது, அந்த வீரியத்தை ஏற்று வாழக்கூடிய தன்மையை இப்படைப்புழுக்கள் பெற்றுடுது. அதிக வீரியமுள்ள நச்சுத்தன்மை கொண்ட ரசாயன மருந்துகளைத் தெளிக்குறதுனால, பயிர்கள் முழுக்கவே நச்சுத்தன்மை அடையுது. இதைக் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்குறப்ப, அதோட உடல் நலம் பாதிக்கப்படுது. படைப்புழுத்தாக்குதலுக்கு உண்மையாகவே என்னதான் காரணம்னு கண்டுப்புடிச்சி, அதை முற்றிலுமா தடுத்து நிறுத்த தமிழக அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்ல இறங்கணும். விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய தொடர் நஷ்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்’’ என்றார்.

ஆய்வு செய்கிறோம்!

இதுகுறித்துப் பெரம்பலூர் ஆட்சியர் வெங்கட பிரியாவிடம் பேசினோம். ‘‘மக்காச் சோளாத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளார்கள். இத்தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

செல்லத்துரை, செங்கமலை, வேல்முருகன், வெங்கட பிரியா
செல்லத்துரை, செங்கமலை, வேல்முருகன், வெங்கட பிரியா

இயற்கை முறையில் தீர்வு!

சேலம், வேளாண் விற்பனை வாரிய பயிற்சி மையத்தின் உதவி இயக்குநர் பொ.வேல்முருகன் சில ஆலோசனைகளை முன் வைக்கிறார்.

“அமெரிக்கன் படைப்புழுக்கள் தென்பட தொடங்கியதுமே, வீரியமுள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை விவசாயிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி தெளித்தும் கட்டுப்படவில்லையென்றால், அதற்கு பிறகு வேறு தடுப்பு மருந்தும் பலன் கொடுக்காது. எனவே முதல்கட்டமாக, 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி வேப்பங்கொட்டை கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதற்கு நல்ல பலன் தெரியும். ஒருவேளை இதற்கு படைப்புழுக்கள் கட்டுப்படவில்லையென்றால், 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி வீதம் பத்திலை கரைசல் கலந்து தெளிக்கலாம். இதற்கும் கட்டுப்படவில்லையென்றால், 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மி.லி வீதம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் கலந்து தெளிக்கலாம். இது மிகவும் வீரியமானது. இந்த கரைகல் தெளித்த பிறகு, படைப்புழுக்களின் நடமாட்டம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மக்காச்சோள சாகுபடிக்கு விதைப்பு செய்யும்போதே, வரப்பு ஓரங்களில், தட்டைப்பயறு, சாமந்தி, ஆமணக்கு... இதில் ஏதாவது ஒன்று அல்லது இந்த மூன்றையுமே விதைப்புச் செய்து பயிர்களை வளர்த்தால் மிகவும் நல்லது. அமெரிக்கன் படைப்புழுக்களின் தாய் என்று சொல்லப்படும் அந்துப்பூச்சிகள் இந்த செடிகளைத்தான் அதிகமாக விரும்பும். இச்செடிகளில் தாய் அந்துப்பூச்சிகள் மற்றும் புழுக்கள் தென்பட தொடங்கியதும் இச்செடிகளை அகற்றிவிடலாம். இதன் மூலமாக மக்காச்சோள பயிர்களை, அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலிலிருந்து ஆரம்பத்திலேயே காப்பாற்றிவிடலாம்’’ என தெரிவித்தார்.

தொடர்புக்கு, வேல்முருகன், செல்போன்: 99524 17105