Published:Updated:

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வெட்டிவேர்..! - சொந்த செலவில் அனுப்பி வைக்கும் கலெக்டர் #MyVikatan

கஜாவின் பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்காக அப்பகுதியில் ஒருவித தன்னெழுச்சிப் புரட்சி தற்போது ஏற்பட்டுள்ளது.

Peravurani Periyakulam
Peravurani Periyakulam

எவ்வளவு பெரிய பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருந்தாலும் தான் பிறந்த ஊரை மறக்காமல் அந்த மண்ணின்மீது நேசம் கொண்டிருப்பார்கள் சிலர். அதிலும் அந்தப் பகுதி ஏதேனும் ஒருவித பாதிப்புக்கும் இயற்கைச் சீற்றத்துக்கும் உள்ளாகும்போது அதை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அவர்களில் ஒருவராய் இருக்கிறார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன். கலெக்டராய் பணிபுரியும் கடலூர் மாவட்டத்திலிருந்து கஜா புயலால் பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகி நிற்கும் பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகவும் மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் 25,000 வெட்டிவேர் நாற்றுகளை தன்னுடைய சொந்த செலவில் அனுப்பி வைக்க முன்வந்திருக்கிறார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைத்த மூதாட்டியின் வருமானம், சிறுவர்கள் சேமித்து வைத்த உண்டியல் பணம், இப்படி பல தரப்பினரும் தாங்கள் சேகரித்த பணத்தை தூர்வாரும் பணிக்கு மனமகிழ்ச்சியுடன் கொடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் கஜா புயல் நடத்திவிட்டுப்போன கோரத்தாண்டவத்துக்கு தஞ்சை டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மற்றும் பலவித வருமானம் தரும் மரங்களை பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகாவின் பெரும்பாலான கிராமங்கள் இழந்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கின்றன. அவர்களை அவர்களாகவே சுயமாய்க் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்துக்குள் அப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கை திணிக்கப்பட்டிருக்கிறது.

கஜாவின் பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்காக அப்பகுதியில் ஒருவித தன்னெழுச்சிப் புரட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் தாங்களாகவே நிதி திரட்டியும் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டும் நீர்நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பணிகளில் தீவிரமாய்க் களம் இறங்கியுள்ளனர்.

இதற்கு தொடக்கப்புள்ளியாய் இருந்தது ஆலங்குடி தாலுகாவில் உள்ள கொத்தமங்கலம் இளைஞர் நற்பணிமன்றம். அம்மன்றத்தினர்தான் அவர்களாகவே தங்கள் சொந்த செலவில் முதன்முதலாக கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரத் தொடங்கினர். இதனால் கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, வடகாடு, மறமடக்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் ஏராளமான நீர்நிலைகளை சீரமைக்கும் பணி மக்களின் மகத்தான ஆதரவுடன் நூறு நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

Peravurani Periyakulam work by Youths
Peravurani Periyakulam work by Youths

நூறு நாள் வேலை திட்டத்தில் கிடைத்த மூதாட்டியின் வருமானம், சிறுவர்கள் சேமித்து வைத்த உண்டியல் பணம், புதுமணமக்களுக்குக் கிடைத்த அன்பளிப்புத் தொகை இப்படி பல தரப்பினரும் தாங்கள் சேகரித்த பணத்தை தூர்வாரும் இந்தப் பணிக்கு மனமகிழ்ச்சியுடன் கொடுத்துள்ளனர். மேலும், பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். இதற்கான வரவு - செலவு கணக்குகள் அனைத்தும் வெளிப்படையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன..

இதன் நீட்சியாய் `கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்- `கைஃபா’ என்ற அமைப்பை பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகாவைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அரசாங்கத்திடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்காமல் பேராவூரணியின் 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் உட்பட பல்வேறு குளங்களில் தூர்வாரும் பணியை இப்பகுதி இளைஞர்கள் மிகப்பெரிய சாதனையாகச் செய்து கொண்டிருக்கின்றனர். மேலும், பேராவூரணியை ஒட்டிய குருவிக்கரம்பை, நாடியம், நெடுவாசல் போன்ற பல்வேறு கடைமடை பாசனப் பகுதி கிராம நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு வருகின்றன.

இப்பகுதி மக்களின் தன்னெழுச்சியான நீர்நிலை சீரமைப்பு பணியை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர்கள், மத்தியக் குழுவினர், நீரியல் நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலரும் நேரில் வந்து பார்வையிட்டு இப்பணியையும் கைஃபா அமைப்பினரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அனைத்து ஊடகங்களிலும் இச்செய்திகள் முக்கிய இடம்பிடித்து வருகின்றன. மாநில அளவில் நீர்நிலைகளைச் சீரமைப்பதில் முன்மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்தும் அமைப்பாக கைஃபா விளங்கிவருகிறது.

நீர்நிலைகளை சீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் கிராம திருவிழாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடல்-பாடல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளைக்கூட மூன்றாண்டுகளுக்கு ரத்துசெய்து சமீபத்தில் தீர்மானம் போட்டு அசத்தியது பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமம். அதற்கு ஆகும் செலவை வைத்து நீர்நிலைகளை தற்போது சீரமைத்து வருகின்றனர். நாடியம் கிராமத்தின் முன்மாதியான இந்தத் தீர்மானம் தமிழக அளவில் பேசப்படுகிறது.

Ram kumar
Ram kumar

பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கூட்டத்தில் ஒருவராய்க் கலந்துகொண்டவர்தான் தற்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியரும் நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவருமான அன்புச்செல்வன். அவர்தான் இப்போது இந்த வட்டாரத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகவும் மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் வெட்டிவேர் நாற்றுகளைச் சொந்த செலவில் அனுப்பி வைக்க முன்வந்துள்ளார்.

இதுதொடர்பாக கைஃபா அமைப்பின் தலைவர் ராம்குமாரிடம் தொடர்புகொண்டு பேசினேன். ``கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சார் இங்குள்ள நாடியம் கிராமத்தில் பிறந்தவர். எப்போதும் இந்த மண்ணுடனும் மனிதர்களுடனும் நெருக்கமான உறவும் உணர்வும் கொண்டவர். இந்த வட்டாரத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கும். அவர் இப்போது மட்டுமில்லை, எப்போதுமே இந்தப் பகுதியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய எளிமையான மனிதர்.

தற்போது நடைபெற்றுவரும் பேராவூரணி பெரியகுளம் தூர்வாரும் பணியை அவர் நேரடியாக வந்து பார்வையிட்டு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 25,000 ரூபாயை நன்கொடையாக கொடுத்துவிட்டுச் சென்றார். மேலும், இப்பணியில் ஈடுபட்டிருக்கும் எங்களுடைய கைபா உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்திச் சென்றார். கஜா புயல் பாதிப்பின்போதும் அவருடைய உதவியால் ஏராளமான நிவாரணப் பொருள்கள் இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தன. இத்துடன் நீர்நிலைகளை சீரமைக்கும் இந்தப் பணிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார். இப்பகுதிக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவிகளையும் பெற்றுத்தர உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அவர் இந்தப் பகுதியில் பிறந்தவர் என்பதற்காக மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இதுபோன்ற சேவைகளில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஈடுபட வேண்டும் என்பதை அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வலியுறுத்தி வருபவர். பொதுச்சேவைகளில் ஈடுபட இளைஞர்களுக்கு எப்போதும் உற்சாகம் தருபவர்.

Collector Anbu selvan helps the youths
Collector Anbu selvan helps the youths

தற்போது நாங்கள் சீரமைத்துவரும் பேராவூரணி பெரியகுளம் கண்மாயின் கரைகளை மண் அரிப்பிலிருந்து பாதுக்காத்து பலப்படுத்த முடிவு செய்தோம். அப்போது என்ன செய்யலாம்? என்று பலரிடம் ஆலோசனைகள் கேட்டோம். அதற்குப் பலரும் வெட்டிவேர் நாற்றுகளை நடுமாறு ஆலோசனை கூறினார்கள். வெட்டிவேரினால் கண்மாய்க் கரைகளின் மண் அரிப்பைத் தடுக்க முடிவதுடன் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த முடியும் எனத் தெரிந்துகொண்டோம். இதை எங்கு வாங்கலாம் என்று நாங்கள் தேடியபோது இது கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் கிடைப்பதாக தெரியவந்தது. இதனால் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அவர்களிடம் இதற்கான உதவி கோரினோம். அவர் உடனே எவ்வித தயக்கமும் இல்லாமல் முதல் கட்டமாக 25,000 வெட்டி வேர் நாற்றுகளை தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கி அவருடைய செலவிலேயே விரைவில் அனுப்பி வைப்பதாக தெரிவித்திருக்கிறார். இன்னும் ஒருசில தினங்களில் வந்து சேர்ந்துவிடும்.

முதல்கட்டமாக இந்த 25,000 வெட்டிவேர் நாற்றுகளை பேராவூரணி பெரியகுளம் கண்மாய்க் கரைகளிலும், அருகில் உள்ள ஒட்டங்காடு கண்மாய்க் கரைகளிலும் நடவு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். சீரமைக்கப்படும் அடுத்தடுத்த கண்மாய்க் கரைகளைப் பலப்படுத்தவும் வெட்டிவேர்களைத்தான் நடவு செய்ய இருக்கிறோம்.

``நீங்கள் பிறந்த மண்ணின்மீது அளவு கடந்த அன்பும், நீர்நிலை மேம்பாட்டில் அதிக ஆர்வமும் காட்ட என்ன காரணம்..?" என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை தொடர்புகொண்டு கேட்டோம். தன்னுடைய பரபரப்பான பணிகளுக்கு இடையிலும் இதற்கான நீண்ட பதிலை ஆடியோ வடிவில் நமக்கு அனுப்பி வைத்தார். அதிலிருந்து சுருக்கமாக..

``நான் பிறந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணிக்கு அருகில் உள்ள நாடியம் கிராமம் காவிரியின் கடைமடைப் பாசனப்பகுதி ஆகும். ஒரு காலகட்டத்தில் இந்தப் பகுதியே காவிரி பெருக்கெடுத்து ஓடி வயல்வெளிகளை எல்லாம் செழிப்பாக்கி அதன் உபரிநீர் கடலில் கலந்த காலம் இருந்தது. சுமார் நாற்பதாண்டு காலத்துக்கு முன்னர் எங்கள் பகுதியில் ஆண்டு முழுவதும் எப்போதும் காட்டாறுகள் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், காலப்போக்கில் இன்று அனைத்தும் வறண்டுவிட்டன.. இயற்கை இப்படி மாறிப்போகும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதற்கு காரணம் காவிரி நீர் கிடைக்காதது மட்டுமல்ல. இயற்கைக்கு எதிரான நம் நடவடிக்கைகளால் பருவகால மாற்றமும் மழை பொய்த்துப் போனதும்தான். எனவேதான், நீர்நிலைகளை நாம் உடனடியாக புதுப்பிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அரசின் திட்டங்களுடன் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த பூமியில் விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் நாம் சேகரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

இயற்கை இப்படி மாறிப்போகும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதற்கு காரணம் காவிரி நீர் கிடைக்காதது மட்டுமல்ல. இயற்கைக்கு எதிரான நம் நடவடிக்கைகளால் பருவகால மாற்றமும் மழை பொய்த்துப் போனதும்தான்.
மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்

இந்தப் பணிகளை `கைஃபா’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முனைப்புடன் செய்துவருகின்றனர். அவர்களின் பணியை பேராவூரணிக்கு நேரில் சென்று பார்வையிட்டுப் பாராட்டினேன். பேராவூரணி என்ற பெயர் பெறக் காரணமாயிருந்த அந்த மிகப்பெரிய குளத்தை இளைஞர்களாக நிதி திரட்டி தூர்வாருவது என்பது மிகப் பெரிய சவாலான பணி.

Anbu selvan
Anbu selvan

தான் பிறந்த மண்ணுக்கும், தான் சார்ந்த சமூகத்துக்கும் ஏதாவது பயனுள்ள வகையில் சில நன்மைகள் செய்ய வேண்டும் என்ற கருத்துடையவன் நான். அந்த அடிப்படையில் நான் பிறந்த பேராவூரணி வட்டாரத்துக்குப் என்னால் இயன்ற பங்களிப்பை செய்துவருகிறேன். நான் படித்த நாடியம் அரசுப் பள்ளியில் இருந்து இன்று என்னைப்போல் நிறைய பேர் நல்ல நிலையில் இருக்கிறோம். எனவே, அந்தப் பள்ளியின் அடிப்படை வசதிகளை சிறப்பாகச் செய்துகொடுக்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல் திருவிழாக்களில் தேவையற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை தவிர்த்து அந்தத் தொகையை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

நீர்நிலை சீர்மைப்பு பணிகளை கைஃபா அமைப்பினரின் செயல்பாடுகள் இந்த சமூகத்துக்கு வழிகாட்டும் விதமாக இருக்கிறது. அவர்களின் சமூக அக்கறையான பணிகளைப் பார்த்துவிட்டுத்தான் அவர்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறேன். நான் பிறந்த மண்ணைச் சேர்ந்த இளைஞர்கள் இதுபோன்ற தேசத்துக்கே முன்னுதாரணமான காரியங்களில் ஈடுபட்டிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது...” என்கிறார், கலெக்டர் அன்புச்செல்வன்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/