Published:Updated:

`பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்!’ - சேலத்தில் முதல்வர் பழனிசாமி

``உழைக்க முடியாத வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு அம்மா அரசு அவர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். 5 லட்சம் முதியோர்களுக்குப் புதிய ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்''

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அதிரடியாகச் சிறப்பு குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்று வருகிறார். நேற்று முன்தினம் எடப்பாடி, வனவாசி, ஜலகண்டாபுரம் பகுதிகளிலும், நேற்று தலைவாசல், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதிகளிலும் மனுக்கள் பெறப்பட்டன. காலை முதல் மாலை வரை மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று உரையாற்றினார்.

முதல்வர்
முதல்வர்
எம்.விஜயகுமார்

தலைவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர், ``இங்கு பெரும்பாலும் முதியோர் ஓய்வூதிய தொகை வழங்குவதற்கான மனுக்கள் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. உழைக்க முடியாத வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு அரசு அவர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். 5 லட்சம் முதியோர்களுக்குப் புதிய ஓய்வூதியத் தொகை வழங்கப்படும். வீட்டு மனைப் பட்டா பலரும் கேட்டிருக்கிறீர்கள். தகுதியானவர்களுக்குப் பட்டாவும், பட்டா மாறுதலும் செய்து தரப்படும்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும். தமிழகத்தில் விரைவில் குடிசைகள் இல்லாமல் அடுக்குமாடிகளாக மாறும். கெங்கவல்லி பகுதியைப் பொறுத்தவரை பிரதான தொழிலாக இருப்பது விவசாயம். விவசாயத்தில் இரட்டிப்பு வருமான கிடைக்க புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். 1,000 கோடியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா தலைவாசலில் அமைய இருக்கிறது. இது மக்களுக்கான அரசு. மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும்'' என்றார்.

`பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்!’ - சேலத்தில் முதல்வர் பழனிசாமி

ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், ``ஆத்தூர் தொகுதியில் புறவழிச் சாலை வேண்டுமெனக் கேட்டிருக்கிறீர்கள். அரசு அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும். உயர் மட்ட பாலங்கள் கேட்டீர்கள். அதை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். ஆத்தூர் நகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு நீக்க 22 கோடியில் புதிய பைப் லைன் அமைக்கப்பட்டு மேட்டூர் குடிநீர் முழுமையாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடிமராமத்துப் பணியின் மூலம் 39 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிகம் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டம். அவர்களுக்கு அதிக நிதி வழங்கி சொந்தக் காலில் நின்று தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறோம். ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டமும், புதிய சுகாதார மாவட்டமாகவும் அமைக்கப்படும்'' என்றார்.

`பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்!’ - சேலத்தில் முதல்வர் பழனிசாமி

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள அபிநவம் ஏரியை முதல்வர் பார்வையிட்டு பனை நடவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பெத்தநாயக்கன்பாளையம் ஆயக்கட்டு விவசாயிகள் மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கேயம் பசு கன்றைப் பரிசாக வழங்கினார்கள்.

பிறகு அங்கு போடப்பட்டிருந்த விழா மேடையில் பேசிய முதல்வர், ``நேற்று தூர் வாரிய இந்த ஏரியில் இன்று நீரைப் பார்க்கிறோம். இந்த ஏரி நிரம்பினால் 424 ஏக்கர் பாசன வசதி பெறும். விவசாயம் என்பது சாதாரண பணி அல்ல. மிகவும் கடினமான பணி. ஓய்வில்லாதவன் விவசாயி. குழந்தையைப் போல் பாதுகாத்தால்தான் விவசாயத்தைப் பெருக்க முடியும். 50 ஆண்டுக்கால காவிரிப் பிரச்னைக்கு அம்மா அரசு நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளுக்கு மேலும் பல திட்டங்களைச் செய்து கொடுக்க ஆசை. ஆனால் முதலமைச்சர் பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்'' என்றார்.

`பொறுப்பை உணர்ந்து நடுநிலையாகச் செயல்படுகிறேன்!’ - சேலத்தில் முதல்வர் பழனிசாமி

வாழப்பாடி கூட்டத்தில் பேசுகையில், `குடிமராமத்துப் பணிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மழைநீர் வீணாகாமல் தடுப்பணைகள் மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முத்தம்பட்டி, அயோத்தியாப்பட்டணத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு நிதி, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன், அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எந்தத் திட்டமும் செயல்படவில்லை எனக் கூறி வருகிறார். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு அம்மா அரசு. தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு பிரச்னையால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். மீண்டும் ஜெயலலிதா வந்ததும் மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். தற்போது மின் நுகர்வு 15,500 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் வெறும் 10,000 மெகா வாட் அதைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. நாங்கள் தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம்'' என்றார்.

இந்த இரண்டு நாள்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் 13, 296 மனுக்களைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு