Published:Updated:

உச்சத்தைத் தொட்ட ஊட்டியின் `பச்சைத் தங்கம்'... 20 ஆண்டுகளுக்குப் பின் விவசாயிகள் மகிழ்ச்சி

tea estate wrokers
tea estate wrokers

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அங்கு தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது. அதே போல் கொரோனா பொது முடக்கம் காரணமாகவும் தேயிலை தேவை அதிகரித்துள்ளது.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர், நீலகிரியில் பெருந்தோட்டங்கள் நிறுவப்பட்டு, தேயிலை, காப்பி, ரப்பர் உள்ளிட்ட பணப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இவையே நீலகிரியின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.

tea estate
tea estate

தேயிலையை நம்பி ஒரு லட்சத்துக்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள், 50,000 சிறு குறு விவசாயிகள் உள்ளனர். நூற்றுக்கும் அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை தூள் பெரும்பாலும் ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

1998-ம் ஆண்டு வரை பசுந்தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. அப்போதே உச்ச விலையாக 1 கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.22 வரை வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலை நீண்ட காலம் தொடரவில்லை. தரத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் காரணமாக நீலகிரி பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோ ஒன்று ரூ.2-க்கு சரிந்தது.

tea estate workers
tea estate workers

இதனால் தேயிலைத் தோட்டங்களைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு பலரும் தோட்டங்களை விற்பனை செய்து பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்லத் தொடங்கினர். சிலர் குத்தகைக்கு விட்டனர். பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் காட்டேஜ்களாகவும் ரெசார்ட்டுகளாகவும் மாற்றப்பட்டன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நலிவடைந்து கிடந்த இந்தத் தேயிலைத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாகத் தற்போது புதிய விலை அறிவிப்பு வந்துள்ளது. இதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்துக்கான 1 கிலோ பசுந்தேயிலை விலை ரூ.27.60 நிர்ணயித்துள்ளது. இதனால், தேயிலை விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

tea estate workers
tea estate workers

இந்த விலை உயர்வு குறித்து தங்காடு மயில்வாகனம் நம்மிடம் பேசுகையில், "உண்மைய சொல்லணும்னா இந்த விலை உயர்வை நம்பவே முடியல. ஏன்னா? இத்தனை வருஷமா அவ்வளவு வேதனையை அனுபவிச்சிட்டோம். தோட்டத்துக்கு உரம் போட முடியல, வேலைக்கு வந்தவங்களுக்கு சரியா கூலி குடுக்க முடியல. பலபேர் இந்தப் பொழப்பே வேண்டாமுன்னு போயிட்டாங்க. அவ்வளோ கஷ்டப்பட்டோம்.

இந்த ரெண்டு மாசமா நிம்மதியா இருக்கோம். முன்னாடி இன்ட்கோ சர்வ் தொழிற்சாலை கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கொடுத்தாங்க இப்போ எங்களோட பச்சைத் தங்கத்துக்கு 22 ரூபா கொடுக்குறாங்க. இது தொடரணும்னு எல்லா கடவுள்களையும் பிராத்திக்கிறோம்" என்றார்.

indcoserve tea
indcoserve tea

திடீர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து நம்மிடம் பேசிய தேயிலை வாரிய அதிகாரிகள்" அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதித்துள்ளது. அதேபோல் கொரோனா பொது முடக்கம் காரணமாகவும் தேயிலைத் தேவை அதிகரித்துள்ளது. தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நல்ல விலை தொடர வாய்ப்பு உள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு