Published:Updated:

நேரடி கொள்முதல், நேரடி விற்பனை.. லாக் டவுணில் அதிரடி காட்டும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

நேரடி விற்பனையில் நீலகிரி தோட்டக்கலை
நேரடி விற்பனையில் நீலகிரி தோட்டக்கலை

காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து நேரடி விற்பனையில் களமிறங்கிய நீலகிரி தோட்டக்கலைத்துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊட்டி, குன்னூர்‌, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 20,000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேரடி விற்பனையில் நீலகிரி தோட்டக்கலை
நேரடி விற்பனையில் நீலகிரி தோட்டக்கலை

மற்ற பகுதிகளைப் போலவே நீலகிரியிலும் சுற்றுலா, தேயிலை, மலைக்காய்கறி போன்ற அனைத்தும் முடங்கி பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட‌ காய்கறிகளை விற்பனை செய்யமுடியாமல் சிறு, குறு விவசாயிகள் தவித்து வருகின்றனர். சிலர் சாலையோரங்களில் கால்நடைகளுக்கு உணவாக கொட்டிச் செல்கின்றனர்.

ஆனால், மற்ற பகுதிகளில் காய்கறிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரையும், நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் காய்கறி, பழம் போன்றவற்றை வாங்கிச் செல்கின்றனர். அல்லது தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.

நேரடி விற்பனையில் நீலகிரி தோட்டக்கலை
நேரடி விற்பனையில் நீலகிரி தோட்டக்கலை

போக்குவரத்து வசதிகள் குறைந்த தொலைதூர மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்கறிகள் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதோடு, உரிய விலைக்கும் வழங்கப்படுவதில்லை. இதைப் போக்க மாவட்ட நிர்வாகமும் தோட்டக்கலைத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிரடி நடவடிக்கையாக விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று காய்கறிகளை உரிய விலைக்கு வாங்கி வாகனங்களில் கொண்டு சென்று மலைவாழ் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பாராட்டுகளும் குவிகின்றன.

நேரடி கொள்முதலில் நீலகிரி தோட்டக்கலை
நேரடி கொள்முதலில் நீலகிரி தோட்டக்கலை

நேரடி கொள்முதல், விற்பனை குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர், ``நீலகிரி தோட்டக்கலை சார்பில் ரூ.150-க்கு காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்தவும் தட்டுப்பாட்டைப் போக்கவும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனையும் செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``விவசாயிகள் சிலர் தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை விற்பனை செய்யமுடியாமல் சாலையில் கொட்டுவதாக தகவல்கள் வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டால் போதும். உரிய விலைகொடுத்து வாங்கப்படும். மேலும், சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை" என்றார்.

நேரடி கொள்முதலில் நீலகிரி தோட்டக்கலை
நேரடி கொள்முதலில் நீலகிரி தோட்டக்கலை

இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் ``தோட்டத்துக்கே வாகனங்களைக் கொண்டுவந்து உரிய விலைகொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இந்தத் திட்டத்தை அரசு விரிவுபடுத்தினால் மக்கள் பயன்பெறுவார்கள்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு