Published:Updated:

'விவசாய அறிவிப்புகளும்; 20 லட்சம் கோடியும்' - விவசாயிகளுக்கு ஏற்றமா... ஏமாற்றமா?!

விவசாயம்
விவசாயம்

மூன்றாம் கட்டமாக விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் இவை சார்ந்த துறைகளுக்கென மொத்தம் 11 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார், மத்திய நிதியமைச்சர்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, 'கொரோனா பேரிடரிலிருந்து பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும்' என அறிவித்தார். அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘சுயசார்பு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்.

கடந்த இரண்டு கட்ட அறிவிப்புகளில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிசார் நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், 'சுயசார்பு இந்தியா' பொருளாதார சிறப்புத் திட்டங்களின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று (15.05.2020) மாலை 4 மணிக்கு வெளியிட்டார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் இவை சார்ந்த துறைகளுக்கென மொத்தம் 11 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதில், எட்டு அறிவிப்புகள் விவசாயத் துறையின் உள்கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ், சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. மூன்று அறிவிப்புகள் அரசின் சீர்திருத்தங்கள் மற்றும் மேலாண்மை தொடர்பானவையாக இருக்கின்றன.

இனி, நிதியமைச்சரின் அறிவித்தவையிலிருந்து...

"குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் மொத்தம் 74,300 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பிஎம் கிஷான் திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.18,700 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 'பிஎம் ஃபசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழ் 6,400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு 2 சதவிகித வட்டிச் சலுகை வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 560 லட்சம் லிட்டர் அளவு பால் கூட்டுறவு மையங்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 111 கோடி லிட்டர் அளவு பால் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கு ரூ.4,100 கோடி வழங்கப்பட்டுள்ளது" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விவசாய நலத்திட்டங்கள்

* வேளாண்மை மற்றும் பண்ணை உள்கட்டுமானப் பணிகளை மேம்படுத்த, ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புக்கான உள்கட்டுமான வசதிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

* சிறு உணவு நிறுவனங்களுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இதன்மூலம் சுமார் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் அதிகமுள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்; 9 புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

* மீன் வளத்துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்திய ஏற்றுமதியில் இத்துறையின் பங்களிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களுக்கும் படகுகளுக்கும் காப்பீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மீன்பிடித் திறன் உயர்த்தப்பட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 70 லட்சம் டன் கூடுதலான அளவில் மீன் உற்பத்தி உயர்த்தப்படும். இதனால், மீன் உற்பத்தியில் இந்தியா சுயசார்பு நிலையை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தேசிய கால்நடை உள்கட்டுமான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம், ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும். தேசிய கால்நடை வியாதிகள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 13,343 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம், அனைத்து வகைக் கால்நடைகளுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்கும்.

'800 ஹெக்டேர்'
மூலிகை வளர்ப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலம்.

* மூலிகை வளர்ப்பை மேம்படுத்துவதற்காக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இத்துறையைச் சார்ந்துள்ள விவசாயிகளுக்கு 5,000 கோடி ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும். கங்கை நதிக்கரையில் மூலிகை மற்றும் மருத்துவத் தாவரங்களை வளர்க்கும் திட்டத்துக்காக 800 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டு, மூலிகை வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்.

* தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 2 லட்சம் தேனீ வளர்ப்பாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். இத்துறைக்கான உள்கட்டுமானம், சந்தைப்படுத்துதல், கொள்திறன் அதிகரிப்பு, ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் அரசு உதவும்.

தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு

* தக்காளி, வெங்காயம், உருளை ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான திட்டம் மற்ற காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் அழுகக்கூடிய காய்கறிகளுக்கான விநியோகச் சங்கிலி வலுப்பெறும். இத்திட்டத்தின் கீழ் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது

நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம், "நிதியமைச்சர் நேற்று அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் எந்த வகையிலும் விவசாயிகளுக்கு பயன் அளிக்காது. ஆனால், இன்றைக்கு அறிவித்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். குறிப்பாக, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விவசாய விளைபொருள்களை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்துவதில் இருந்த தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. விவசாய உற்பத்திப் பொருள்களை இருப்பு வைப்பதில் இருந்த தட்டுப்பாடும் நீக்கப்பட்டிருக்கிறது.

பி.ஆர் பாண்டியன்
பி.ஆர் பாண்டியன்

இயற்கை விவசாயப் பொருள்கள் மற்றும் மூலிகைகளை உலக அளவில் விளம்பரப்படுத்தும் நடவடிக்கையும் மத்திய அரசு முன்னெடுப்பதாக அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதே. மொத்தத்தில், இன்றைக்கு அறிவித்த அறிவிப்புகள் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதே நேரத்தில், ஆன்லைன் டிரேடிங் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்குப் பயன் தராது. அது, முழுமையான செயல்பாட்டுக்கு வந்தால், மற்ற அனைத்து அறிவிப்புகளும் பயனில்லாமல் போய்விடும். ஆன்லைன் டிரேடிங் மூலமாக பன்னாட்டு பெரு முதலாளிகள் மட்டுமே பயனடைய முடியும். எனவே, அந்த ஓர் அறிவிப்பைத் தவிர மற்ற அனைத்து அறிவிப்புகளையும் வரவேற்கிறோம்" என்றார்.

இது ஒரு வெற்று அறிவிப்பு!

நிதி அமைச்சரின் அறிவிப்பு குறித்து தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி பேசும்போது, "விளைபொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். இதை ஏற்கெனவே விவசாயிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், விலைகொடுத்து வாங்கத்தான் ஆட்கள் இல்லை. எனவே, இது ஒரு வெற்று அறிவிப்பே. இதற்குப் பதிலாக எம். எஸ். சுவாமிநாதன் அறிக்கையில் கொடுத்த உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50 மடங்கு விலை கொடுத்து விவசாய விளை பொருள்களை அரசே கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். அது ஒன்றுதான் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.

விவசாயம்
விவசாயம்

விளை பொருள்களைச் சேமித்துவைக்க குளிர்பதனக் கிடங்குகளை பெரும்பாலும் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. அதை வியாபாரிகள்தான் பயன்படுத்துகிறார்கள். அதேபோல இந்தியா முழுவதும் விற்பனை செய்யலாம் என்கிறார்கள். அதுவும் வியாபாரிகளுக்குச் சாதகமான விஷயமே தவிர, விவசாயிகளுக்கு சாதகமானது அல்ல. பெரும்பாலான விவசாயிகள் உள்ளூரிலேயே விற்பனை செய்துவிடுகிறார்கள். வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய வியாபாரிகள்தான் பொருள்களை வாங்கி அவர்கள் மாநிலங்களுக்கு கொண்டுசெல்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.

`விவசாயத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு' - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்பு

கூட்டுறவு வங்கியில் மட்டுமே விவசாயிகளை மதித்து ஓரளவுக்கு கடன் கொடுக்கிறார்கள். கிசான் கிரடிட் கார்டை அங்குதான் மதிக்கிறார்கள். மற்றபடி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பது மிகமிகக் குறைவு. கிசான் கிரடிட் கார்ட் அவர்களுடைய டார்கெட்டை அடைவதற்காக சிலருக்கு மட்டும் கொடுக்கிறார்கள். விவசாயக் கடன்களை வங்கியில் வாடிக்கையாளராக இருக்கும் தொழில் அதிபர்களுக்குதான் கொடுக்கிறார்கள். எனவே, நிதியமைச்சர் கொடுத்த அத்தனை அறிவிப்புகளும் பெரும் முதலாளிகளை வாழ வைக்குமே தவிர, விவசாயிகளுக்கு எந்த பயனையும் தராது என்பதே நிதர்சனம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு