Published:Updated:

`இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டிய நேரமிது!' -நிதி ஆயோக்கின் கருத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிதி ஆயோக் தலைவர் ராஜூவ் குமார்
நிதி ஆயோக் தலைவர் ராஜூவ் குமார்

இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகள் பலவும் முழுவதுமே இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன.

சமூக நலனில் அக்கறை கொண்டவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ரசாயன உரங்களாலும் பூச்சிக் கொல்லிகளாலும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை உருவாகி, மக்களின் உடல் நலனை பாதிப்பதாகவும், இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்தால்தான் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும் என இயற்கை விவசாய ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

இந்த நிலையில்தான், கொரோனா தொடர்பாக, சர்வதேச அளவில் நடைபெற்ற காணொலி கலந்தாய்வில், இந்திய அரசின் நிதி ஆயோக், இயற்கை விவசாயத்தின் தேவை குறித்து தனது கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இது இயற்கை விவசாய ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கக்கூடிய நிதி ஆயோக் இவ்வாறு தெரிவித்திருப்பது, நாட்டுமக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நல்லதோர் தொடக்கம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட பலர் பெரும் பங்காற்றினார்கள். பசுமை விகடன் மூலம், தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு வேகமாக வளர்ந்தது. இயற்கை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுக்கவும், விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்றவும் மத்திய மாநில அரசுகள், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டுமென பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான உணவு குறித்தும் விவாதித்தப்பதற்காக, இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பானது, சர்வதேச அளவிலான காணொலி கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா அமைப்பினரும் கலந்துகொண்டார்கள்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

இதில் உரையாற்றிய இந்திய நிதி ஆயோக் தலைவர் ராஜூவ் குமார், ``இந்த இக்கட்டான நேரத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்வதே இந்த உலகை பாதுகாக்கும். இந்திய மக்கள், பாரம்பர்யமான இயற்கை வாழ்வியலோடு இணைந்து வாழ, முயற்சி செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் தவிர்த்து உணவு உற்பத்தி மேற்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகள் பலவும் முழுவதுமே இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் இயற்கை விவசாயத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வளமான சமுதாயத்தை வளர்த்தெடுக்க, இயற்கை இணைந்து வாழ்தலே சிறந்த வழி” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் ``மத்திய அரசு, ரசாயன உர நிறுவனங்களுக்கு ஏராளமான மானியங்களையும் நிதிகளையும் வாரி வழங்குகிறது. இவையெல்லாம், விவசாயிகளின் நலனுக்காகவே வழங்கப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினால்தான், விவசாயிகள் நேரடியாகப் பயன் அடைவார்கள். மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய ஆரோக்கிமான உணவும் தங்கு தடையின்றி கிடைக்கும். மத்திய அரசின் நிதி ஆயோக் இதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும்” என தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு