Published:Updated:

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா... பயன்பாட்டுக்கு வராத அவலம்!

கால்நடைப் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
கால்நடைப் பூங்கா

பிரச்னை

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா... பயன்பாட்டுக்கு வராத அவலம்!

பிரச்னை

Published:Updated:
கால்நடைப் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
கால்நடைப் பூங்கா

சேலம் மாவட்டம், தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைப்பதற்கான திட்டத்தை, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்.

1,102 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 1,022 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதன் தொடக்க விழா 2020-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற்றது. துணை முதல்வர், அனைத்துத் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உட்பட பல்வேறு துறைச் செயலாளர்கள் புடைசூழ அடிக்கல் நாட்டப்பட்டது.மிகப் பிரமாண்டமாக சர்வதேச தரத்துடன், அதிநவீன வசதிகளுடன் இப்பூங்காவை உருவாக்க செயல் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன் அளிக்கும் வகையில் கால்நடைகள் தொடர்பான அனைத்து அம்சங்களும் இங்கு இடம்பெறும் எனவும், குறிப்பாக ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படும் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கால்நடைப் பூங்காவில்
கால்நடைப் பூங்காவில்

ஆனால், இத்திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கால்நடைப் பூங்கா விவசாயிகளின் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது கால்நடை மருத்துவக்கல்லூரி மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால், இத்திட்டம் முடக்கப்பட்டு விடுமோ என அச்சமடைந்துள்ளார்கள்.

கோவிந்தன்
கோவிந்தன்

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோவிந்தன், “கால்நடைப் பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டபோது இந்தப் பகுதி விவசாயிங்க ரொம்பவே சந்தோஷப்பட்டோம். ஆனா, இது இன்னும் பயன்பாட்டுக்கு வராமலே இருக்குறதுதான் வருத்தமா இருக்கு. இங்க திட்டமிடப்பட்ட பெரும் பாலான கட்டடங்கள், இன்னும் கட்டி முடிக்கப்படாம பாதியிலேயே நிக்குது. இப்போதைக்குக் கால்நடை மருத்துவக் கல்லூரி மட்டும்தான் இங்க, செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இதுலயும்கூட மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும்தான் நடந்துகிட்டு இருக்கு. ஆடு, மாடுகளுக்கான உயர் சிகிச்சைகள் அளிக்கப்படல.

கால்நடைப் பூங்காவில்
கால்நடைப் பூங்காவில்

கால்நடைப் பூங்காவுல ஆவின் நிறுவனத் துக்காக, தமிழ்நாட்டிலேயே இதுவரைக்கும் வேற எங்கயும் இல்லாத அளவுக்கு அதி நவீன தொழில்நுட்ப கட்டமைப்புடன்கூடிய பால் தூய்மை கண்டறியும் மையம் அமைக்குறதுக் காக, 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப் பட்டுச்சு. ஆனா, அதுக்கான எந்த வேலை களும் நடக்கலை. கால்நடைப் பூங்கா திட்டத்துல விவசாயிகளுக்குப் பயன்படுற வகையில பல இனங்களைச் சேர்ந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வாங்கிப் பராமரிக்கப்படும்னு அரசு தரப்புல அறிவிக்கப்பட்டுச்சு. ஆனா, மாடுகள் வாங்கப் படவில்லை. கோழி இனப்பெருக்கப் பண்ணை அமைக்கப்படும்னு சொல்லி யிருந்தாங்க. அதுவும் நடக்கல.

எந்த நோக்கத் துக்காகக் கால்நடைஆராய்ச்சி பூங்கா உருவாக்கப்படும்னு சொன்னாங்களோ அதுக்கான வேலைகள் எதுவும் நடக்காம முடங்கிக் கிடக்கு. இது விவசாயிகளுக்கு நேரடியா பயன்தரக்கூடிய திட்டம். இதை முறையா நடைமுறைப்படுத்தினா, விவசாயி கள் பயன் அடைவாங்க.

கால்நடைப் பூங்கா
கால்நடைப் பூங்கா

ஆனா, எந்தக் காரணத்துக்காக இப்படிக் கிடப்புல போட்டு வச்சிருக்காங்கனுதான் தெரியலை. எங்களுக்குக் கிடைச்ச தகவல்படி இப்பவுள்ள தி.மு.க அரசு, இந்தத் திட்டத் துக்கான நிதியை முறையா ஒதுக்கீடு செய்யாத தாலதான் பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்குறதா தெரிய வருது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டம்கிறதுனாலயே, இப்பவுள்ள தி.மு.க அரசு இதைப் புறக்கணுக்குறது நியாயமில்லை. இவங்களோட அரசியல் சண்டையைத் தனியா வச்சிக்கிடட்டும். விவசாயி களுக்குப் பயன் அளிக்கக்கூடிய திட்டத்தை முடக்கி வைக்குறது எந்த விதத்துலயும் நியாயம் இல்லை. அரசு உயரதிகாரிங்ககிட்ட இதைப் பத்திக் கேட்டா, அவங்க பேச மறுக்குறாங்க. இந்தத் திட்டத்தை விரைவுப்படுத்துறதுக்காக, எங்களோட விவசாயச் சங்கம் சார்பா, தமிழக முதல்வர் ஸ்டாலின்கிட்ட மனு கொடுக்க இருக்கோம்” என்றார்.

விவசாயிகளின் ஆதங்கம் குறித்து, இங்கு செயல்பட்டும் வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவிடம் பேசிய போது “கால்நடை சிகிச்சை வளாகத்தில் மாடுகள், ஆடுகள், குதிரைகள், நாய்கள், கோழிகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு இதய மின்னலை பதிவு செய்யும் கருவி (இ.சி.ஜி), கதல்ஒலி ஆய்வுக்கருவி (அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர்), உடல் உள்நோக்கி கருவி (எண்டோஸ்கோப்பி), கண் பரிசோதனைக் கருவி, பற்கள் சுத்தம் செய்யும் கருவி, ஊடுகதிரியக்கவியல் கருவி போன்றவற்றைக் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது.

இளங்கோ
இளங்கோ

மேலும் இங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறிய மற்றும் பெரிய பிராணிகள் அறுவை சிகிச்சை அரங்கம், சிறப்புத் தோல் நோய் சிகிச்சைப்பிரிவு, அதிநவீன வசதி களுடன்கூடிய நோய் கண்டறியும் ஆய்வுக் கூடம் போன்றவை அமைந்துள்ளது. இவை அனைத்தும் மக்களுடைய முழுப் பயன் பாட்டுக்கு விரைவில் வரும்’’ என்றார்.

கால்நடைப் பூங்கா கட்டு மானப்பணிகள் குறித்துக் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, “விவசாயிகளின் பயன்பாட்டுக்கு இன்னும் ஓர் ஆண்டுக் காலத்தில் வந்துவிடும். இதற்காகத் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

அடுத்த ஆண்டு ஜூலையில், இதே கேள்வியை அமைச்சரிடம் நாம் கேட்கும் நிலை வராது என்று நம்புவோம்.