Published:Updated:

“நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது!”

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஸ்டாலின்

- வேளாண் பட்ஜெட் போட்ட முதல்வரே விவசாயிகளைத் தவிக்கவிடலாமா?

“நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது!”

- வேளாண் பட்ஜெட் போட்ட முதல்வரே விவசாயிகளைத் தவிக்கவிடலாமா?

Published:Updated:
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து, புதிய வரலாறு படைத்திருக்கிறது தி.மு.க அரசு. இதற்காக ஒட்டுமொத்த விவசாயிகளும் ஸ்டாலினைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போதே, ‘நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது’ என்று பயிர் இன்ஷூரன்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக அறிவித்து அதிரவும் வைத்திருக்கிறது அரசு. ‘‘இதென்ன இரட்டை வேடம்?’’ என்று கதறுகிறார்கள் விவசாயிகள்!

“நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது!”

கடந்த காலங்களில் மத்திய, மாநில அரசுகள் தலா 49 சதவிகிதமும், விவசாயிகள் இரண்டு சதவிகிதமும் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்திவந்தார்கள். அதில் பாதியளவுக்கு மத்திய அரசு குறைத்துக்கொண்டது. இந்த நிதிச்சுமையை ஏற்க முடியாமல், தமிழக அரசு திணறும் நிலையில்தான் ‘நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது’ என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதை முன்வைத்து, “தமிழக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது” என்று கொதிக்கிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்.

‘‘தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். விவசாயிகள் தங்கள் நெற்பயிரை இன்ஷூரன்ஸ் செய்தால்தான் இயற்கை இடர்பாடுகள், பூச்சித் தாக்குதல்களால் பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெற முடியும். இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரிலும், தமிழக அளவில் 5.5 லட்சம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. ஒருபக்கம் குறுவைச் சாகுபடியை ஊக்கப்படுத்த குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, மறுபக்கம் குறுவை நெல்லுக்கான இன்ஷூரன்ஸை ரத்துசெய்துள்ளது.

“நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது!”

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இஃப்கோ டோக்கியோ என்ற தனியார் நிறுவனமும், மத்திய அரசு நிறுவனமான இந்திய பயிர் காப்பீட்டு நிறுவனமும் பயிர் இன்ஷூரன்ஸ் தொகை வசூலித்தன. ‘நிவர்’, ‘புரெவி’ புயல்கள், பருவம் தவறிய மழை ஆகியவற்றால் விவசாயிகளுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான இழப்பீட்டுத் தொகையையே அந்த நிறுவனங்கள் இன்னும் தரவில்லை. இதனால்தான் இந்த ஆண்டு குறுவை நெற்பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் பெற அந்த நிறுவனங்கள் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதையே காரணமாகச் சொல்லி தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. மாறாக, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது ஆட்சியாளர்களின் கடமை. இதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. மத்திய அரசின் திட்டமான இது, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் என்றுதான் அழைக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு தமிழ்நாட்டில் நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.

திருவையாறைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், ‘‘நெல்லுக்கு இன்ஷூரன்ஸ் திட்டம் இல்லாவிட்டாலும், மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. நெற்பயிர்களில் முழுமையான பாதிப்பு ஏற்பட்டால், இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ஏக்கருக்கு 34,500 ரூபாய் இழப்பீடு கிடைக்கும். ஆனால், மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ஏக்கருக்கு அதிகபட்சம் 8,000 ரூபாய்தான் இழப்பீடு கிடைக்கும்’’ என்றார்.

ஆனால், “மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்குவது சாத்தியமே இல்லை” என்று மறுக்கும் தஞ்சையைச் சேர்ந்த வேளாண் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஜீவக்குமார், ‘‘மாநில அளவில், மாவட்ட அளவில் மழை, புயல், வறட்சி ஏற்பட்டால்தான் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க முடியும். அதிலும் பகுதி அளவில் பாதித்தால் கிடைக்காது. பூச்சி, நோய்த் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டால், இதிலிருந்து இழப்பீடே வழங்க முடியாது’’ என்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் பி.ஆர்.பாண்டியனோ, ‘‘தற்போது மேட்டூர் அணையில் 66 அடிதான் தண்ணீர் உள்ளது. நெற்பயிரில் கதிர் வரும் பருவத்தில், வறட்சி ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. பருவநிலை மாற்றங்களால் ஒருவேளை கனமழையாலும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, அரசு இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்’’ என்றார்.

சுந்தர விமல்நாதன், சுகுமாறன், ஜீவக்குமார், பி.ஆர்.பாண்டியன், கே.எஸ்.விஜயன்
சுந்தர விமல்நாதன், சுகுமாறன், ஜீவக்குமார், பி.ஆர்.பாண்டியன், கே.எஸ்.விஜயன்

தி.மு.க விவசாய அணி அமைப்பாளரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன், ‘‘பயிர் காப்பீடு பிரீமியத்தில் 20 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. தமிழக அரசும் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம் குறுவை நெற்பயிருக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் அறிவிக்கப்படவில்லை. சம்பாவுக்கு உண்டு’’ என்றார்.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் விளக்கம் கேட்டால், ‘‘கடந்த அ.தி.மு.க அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே குறுவை இன்ஷூரன்ஸுக்கு டெண்டர்விட்டு, ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நாங்கள் புதிய அரசு என்பதாலும், கொரோனா பிரச்னையாலும் காலம் போதவில்லை. குறுவை அறுவடையும் நெருங்கிவிட்டது. அதனால், இந்த அறிவிப்பால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், பிரீமியம் என்ற பெயரில் விவசாயிகளின் பணத்தை விரயம் செய்யவும் விரும்பவில்லை. சம்பாவில்தான் மழை, புயல் பாதிப்புகள் வரக்கூடும். சம்பா நெற்பயிர் இன்ஷூரன்ஸுக்கு டெண்டர்விட்டு, நிறுவனத்தை முடிவு செய்துவிட்டோம். அதனால், விவசாயிகள் பயப்படத் தேவையில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism