Published:Updated:

கச்சா எண்ணெய் கசிவால் பாழாகும் விளைநிலங்கள்!

பாதிக்கப்பட்ட வயல்
பிரீமியம் ஸ்டோரி
பாதிக்கப்பட்ட வயல்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் வெறும் ஏட்டுச்சுரைக்காயா?

கச்சா எண்ணெய் கசிவால் பாழாகும் விளைநிலங்கள்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் வெறும் ஏட்டுச்சுரைக்காயா?

Published:Updated:
பாதிக்கப்பட்ட வயல்
பிரீமியம் ஸ்டோரி
பாதிக்கப்பட்ட வயல்

பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்களின் வழியே மிக நீண்ட தூரத்திற்கு எரிவாயு-கச்சா எண்ணெய் குழாய்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில்தான் கடந்த ஜூன் 30-ம் தேதி கோட்டூர் அருகே உள்ள மேல பனையூரில் ஒ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சிவக்குமார் என்ற விவசாயியின் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி சிவக்குமார், ‘‘15 வருஷத்துக்கு முன்னாடி, ஒ.என்.ஜி.சி அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எங்களை அணுகி குழாய் பதிக்க அனுமதி கேட்டாங்க. எங்களால் மறுக்க முடியல. என்னோட 8 ஏக்கர் நிலத்துக்கடியிலயும் குழாய்ப் பதிக்கப்பட்டிருக்கு. குறுவை நெல் சாகுபடிக்காக, நிலத்தை உழுது அடியுரமெல்லாம் போட்டு, நேரடி நெல் விதைப்புச் செஞ்சிருந்தேன். குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கச்சா எண்ணெய் கசிஞ்சு, ஒரு ஏக்கர் பரப்புல படர்ந்திருக்கு. பல அடிகள் ஆழத்துக்கு மண்ணு மலடாகிடுச்சி. இன்னும் அஞ்சாறு வருஷத்துக்கு இதுல எதுவுமே பயிர் செய்ய முடியாது. இந்தப் பகுதி விவசாயிகள் ஒண்ணாக் கூடி போராட்டங்கள்ல இறங்கினதுனால, அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாங்க. இந்த ஒரு ஏக்கர் நிலத்துல எங்கெல்லாம் கச்சா எண்ணெய் படர்ந்து பாதிக்கப்பட்டிருக்கோ, அந்த மண்ணை மட்டும் 6 அடி ஆழத்துக்கு அப்புறப்படுத்திட்டு, புது மண்ணு மாற்றித் தர்றதா ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. மூணு போகத்துக்கு இழப்பீடாக ஒண்ணே முக்கால் லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர்றதாகவும் உறுதி அளிச்சிருக்காங்க’’ என்றார்.

சிவக்குமார்
சிவக்குமார்


இதுகுறித்துப் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ‘‘இந்தக் குழாய் உடைப்பை ஓ.என்.ஜி.சி நிறுவனம் உடனடியாகச் சரி செய்யவில்லை. வெள்ளக்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் செல்லும் இந்த எண்ணெய் குழாய் 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இக்குழாய்கள் அரித்துப்போய், விபத்துகளை ஏற்படுத்த கூடியவையாக இருக்கின்றன. கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் ஏராளமான கச்சா எண்ணெய் கிணறுகள் செயல்படுகின்றன.

பாதிக்கப்பட்ட வயல்
பாதிக்கப்பட்ட வயல்

2018-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம், எருக்காட்டூரில் குழாயில் ஏற்பட்ட உடைப்பினால், கச்சா எண்ணெய் வழிந்தோடி, தனசேகரன் என்பவரின் வயல் பாழானது. 2018 பிப்ரவரி 15-ம் தேதி திருவாரூர் பாண்டவை ஆற்றின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் ஓ.என்.ஜி.சி-யின் எண்ணெய்க் குழாயில் பெரிய அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஆற்றுநீர் பெருமளவில் பாழானது. 2019-ம் ஆண்டு எருக்காட்டூர் பகுதியில் பருத்திச் சாகுபடி செய்யப்பட்டு இருந்த செல்வராஜ் என்பவரின் நிலம் முழுவதும், ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பால் கச்சா எண்ணெய்க் நிரம்பிப் பாழானது. எருக்காட்டூரில் மட்டுமே சுமார் 8 எண்ணெய் கிணறுகள் உள்ளன. குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்கள் பாழாவது வாடிக்கையாகிவிட்டது. குழாய்கள் செல்லக்கூடிய வயல்களுக்கு வாடகை என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு, திருவாரூர் மாவட்டத்தையே ஓ.என்.ஜி.சி நிரந்தரமாகப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் போராடினால் காவல்துறை கைது செய்து விடுகிறது.

பாதிக்கப்பட்ட வயல்
பாதிக்கப்பட்ட வயல்


2017 ஜூன் 30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் வனதுர்க்கை அம்மன் கோயில் பகுதியில் எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவில் எண்ணெய் வெளியேறி, வயல்கள் பாதிக்கப்பட்டன. அப்போது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புக் கதிராமங்கலம் மக்களைத் திரட்டிப் போராடியது. ஆனால் போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பழைய எண்ணெய்க் கிணறுகள் மூடப்பட வேண்டும். கச்சா எண்ணெய்க் குழாய்கள் நீக்கப்பட வேண்டும் என்று போராடிய மக்களை ஒடுக்கிய தமிழக அரசால், கச்சா எண்ணெய் கசிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஜெயராமன்
ஜெயராமன்


2019-ல் கதிராமங்கலத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பால் விக்கிரமன் ஆற்றுப்படுகை பாழானது. தற்போது, கோட்டூரில் விவசாயி சிவகுமாரின் வயல் நாசமாகியுள்ளது. ‘இனி தமிழ்நாட்டில் எந்த எண்ணெய்-எரிவாயு கிணறும் அமைக்க அனுமதிக்கமாட்டோம்’ எனத் தற்போது, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு நின்றுவிடாமல், காவிரி டெல்டாவைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் பழைய எண்ணெய் -எரிவாயுத் திட்டங்களும் தடுத்து நிறுத்த வேண்டும். எண்ணெய்க் கிணறுகள் மூடப்பட வேண்டும். கச்சா எண்ணெய் குழாய்கள் முழுவதுமாகத் தோண்டி எடுக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும்’’ என்றார்.

இதற்குத் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism