Published:Updated:

கச்சா எண்ணெய் பரவி கருகிய பயிர்கள்... ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்ததால் பாழான விவசாய நிலம்!

ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு
ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு

திருவாரூர் அருகே விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பரவியதால் சம்பா பயிர்கள் சேதம். அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே உள்ள கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டுப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், எருக்காட்டு கிராமத்தைச் சுற்றிக் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு சுமார் எட்டு எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் எருக்காட்டு மேலத்தெருவில் கிராமத்தில் ஒரு எண்ணெய்க் கிணறு செயல்பட்டு வந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவரின் வயல் வழியாகக் குழாய் பதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு
ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு

நேற்றிரவு 11 மணியளவில் தனசேகரனின் வயலில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியிடத் தொடங்கி பகலில் வயல் முழுவதும் பரவியது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்து அந்த வயலில் 30 நாள்களே ஆன நிலையில் பயிர்கள் முழுவதும் கருகத் தொடங்கியுள்ளன. மண்வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் வயலில் பரவிய எண்ணெயை அகற்ற வந்தபோது அவர்களை விவசாயி தனசேகரன் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வயலில் பரவிய எண்ணெயை உடனடியாக அகற்றாவிட்டால் சுற்றியுள்ள மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெயை வயலிலிருந்து அகற்றி வருகின்றனர். இதேபோல் 2018-ம் வருடம் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகையாக ஒரு லட்சம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு
ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு

ஆனால், பயிருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கி உள்ளதாகவும், கச்சா எண்ணெய் பரவி வயலின் மண்ணைத் தற்போது தனசேகர் மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை. ஆனால், எண்ணெய்க் குழாய் அகற்ற வேண்டும் இல்லை என்றால் மண்ணை மாற்றிக் கொடுக்க வேண்டுமெனத் தனசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு