Published:Updated:

`மலர்களுக்கு மனம் இரங்கிய பூங்கா ஊழியர்கள்..!' -நீலகிரி பூங்காக்களில் தினமும் நிகழும் நெகிழ்ச்சி

ooty botanical garden
ooty botanical garden

பாத்துப்பாத்து வளர்த்த செடி அத்தனையும் இன்னக்கி பூத்து நிக்கிது, இந்த நேரத்துல அதுங்கள தவிக்கவிட்டு எப்படி நிம்மதியா நாங்க இருக்க முடியும்.

ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவந்த நீலகிரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகவே இருந்துவந்தது. கொதிக்கும் கோடையின் குளிர் மருந்தாகவும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் அறிவிக்கப்படாத சுற்றுலா புனித ஸ்தலமாகவும் விளங்கியது இந்த மலைகளின் அரசி.

ooty botanical garden
ooty botanical garden

கோடையின் வெம்மை தாளாமல், குளிர் தேடி ஓடிவரும் அனைவரையும் பசுமை போர்த்திய மலைத் தொடர்களாலும் தவழும் மேகங்களாலும் தூறலுடன் வரவேற்றுவந்த மலையரசி இன்றைக்குக் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தன் வழிகளை மூடிக்கொண்டுள்ளது.

அடையாத கதவுகளைக் கொண்டிருக்கும் சந்நிதானம் எனும் அளவிற்கு நூற்றாண்டுகளாய் மூடப்படாத ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவும் இந்தக் கொரோனாவால் மூடப்பட்டுள்ளது.

ooty botanical garden
ooty botanical garden

பூங்காக்களாலும் புல்வெளிகளாலும் ஏரிகளாலும் நிறைந்த இந்த மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தேயிலை பூங்கா, ஊட்டி ரோஜா பூங்கா உள்ளிட்டவை உள்ளன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஊட்டி படகு இல்லம், பைக்காராப் படகு இல்லம், தொட்டப்பெட்டா காட்சி முனை போன்றவை உள்ளன. மேலும் வனத்துறை சார்பில் அவலாஞ்சி, கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டுவந்து.

ooty botanical garden
ooty botanical garden

கோடைக்காலமான மே மாத்தில் நடைபெறும் கோடை விழாவில் மலர்க் கண்காட்சி, காய்கறிக் கண்காட்சி, பழக் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி போன்றவை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கோடை விழாவிற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தயாராகிவந்தன.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. மலர்களாலும் மக்களாலும் எப்போதும் நிரம்பிக் காணப்படும் பூங்காக்கள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகிவிட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா எப்படி இருக்கிறது என்பதை அறிய பூங்காவிற்குள் நுழைந்தோம்.

ooty botanical garden
ooty botanical garden

ஆயிரக்கணக்கான மக்களால் நிரம்பிய இந்தப் பூங்காவில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மனித நடமாட்டமே இல்லை, காற்று முழுக்கப் பறவைகளின் ஓசையால் நிரம்பியது. மனிதர்கள் கால்படாமல் புற்கள் நன்கு செழித்து வளர்ந்து காணப்பட்டன.

நம்பிக்கையில் பூங்கா ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு பல ஆயிரம் தொட்டிகளில் விதைத்திருந்த மலர் நாற்றுகள் பூக்கும் தறுவாயில் இருந்தன. கண்ணாடி மாளிகை முழுவதும் பூக்களின் வண்ணங்களால் நிரந்துகாணப்பட்டது. பார்க்கும் இடமெல்லாம் பூக்களாகேவ இருந்தாலும் கண்டுரசிக்கத்தான் ஆட்கள் யாரும் இல்லை.

ooty botanical garden
ooty botanical garden

சற்று தொலைவில் பெண்கள் சிலர் பூந்தொட்டிகளை அடுக்கிக்கொண்டிருந்தனர். இன்னும் சில பெண்களும் ஆண்களும் புல் வெளிகளைச் சீரமைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் பேசத் தொடங்கினோம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூங்கா பராமரிப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவர் பேசுகையில், "இத்தனை வருஷத்துல இப்படி இந்த கார்டன் இருந்ததில்லை. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு நாளைக்கு ஊழியர்களே 300 பேர் வேலை செய்வோம். ஒவ்வொரு செடியையும் பாத்துப் பாத்து நட்டு தண்ணி ஊத்தி காப்பாத்துனோம்.

ooty botanical garden
ooty botanical garden

இன்னும் பத்து நாள் கழிச்சி எல்லாச் செடியும் பூத்துரும். இந்த நேரத்துல என்னமோ கொரோனானு சொல்லி எங்கள் வரவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ரெண்டு நாள் இருந்தோம் மனசு கேக்கல இந்தச் செடிகளை விட்டுட்டு நிம்மதியா இருக்க முடியல. பக்கத்துலதான் வீடு என்ன ஆனாலும் பரவாயில்ல நம்ம நட்ட பூச்செடிங்க வாடவிடக்கூடாதுனு வந்துட்டேன். மலர்க் கண்காட்சி நடக்குதோ இல்லையோ அதுக்காகப் பூக்கும் நாத்த கைவிட முடியுமா?" என அக்கறையுடன் பேசினார்.

புல் மைதான சீரமைப்பில் ஈடுபட்டிருந்த மற்றொரு பெண் நம்மிடம் பகிர்கையில் "இந்தப் பூச்செடிகளை வளர்க்கிறது ஒரு வேலையா பாக்கல, உண்மையில் இந்தப் பூக்களை நம்பித்தான் நாங்க இத்தனை வருஷமா சோறு சாப்பிடறோம். இதுங்கள வாடவிட்டா நாங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும். 400 பேர் வேலை செஞ்ச இடத்துல இன்னைக்கு 40 பேர் வேலை பாக்குறோம். மலர்க் கண்காட்சி நடந்தா எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இப்போதும் பராமரிக்கிறோம். இந்தச் செடிங்கதான் எங்களுக்கு உயிர்" என முடிக்கிறார்.

ooty botanical garden
ooty botanical garden

இந்த ஆண்டு கோடை விழா நடப்பது சந்தேகம் என்பதை அறிந்தும் தாங்கள் நட்டுவளர்த்த மலர் நாற்றுகளை விட்டுக்கொடுக்காமல் நேசித்துப் பராமரிக்கும் இந்தப் பூங்கா பணியாளர்கள் மலரை விட மெல்லிய மனம் படைத்தவர்கள் என மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு