Published:Updated:

`நியூட்ரினோ குறித்து ஓ.பி.எஸ். பேசுவாரா?'- நியூட்ரினோவுக்கு எதிராகக் கேள்வி எழுப்பும் விவசாயிகள்

``நியூட்ரினோ திட்டத்தை பேரழிவுத் திட்டம் என்கிறோம். இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும். இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம்'' தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி. ஆர் பாண்டியன் கூறினார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில், மத்திய இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங், ``நியூட்ரினோ திட்டம் அமைக்க மத்திய அணுசக்தித் துறை அனுமதியளித்திருக்கிறது" என அறிக்கை தாக்கல் செய்தார். இதனால், மீண்டும் நியூட்ரினோ குறித்த அச்சம் பொட்டிபுரம் மக்களிடம் எழுந்துள்ளது.

விவசாய சங்கத்தினர்
விவசாய சங்கத்தினர்

இச்சூழலில், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி..ஆர் பாண்டியன், இன்று பொட்டிபுரம் அம்பரப்பர் மலைக்குச் செல்ல இருந்தார். ஆனால், புதுக்கோட்டை கிராமம் முத்தாளம்மன் கோயில் அருகே பி.ஆர்.பாண்டியன் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``நான் இங்கு போராட வரவில்லை. மக்களைச் சந்தித்துப் பேசவும், அம்பரப்பர் மலையை பார்க்கவும்தான் வந்தேன். ஆனால், நான் காலையில் புறப்படும்போது, `நீங்கள் பொட்டிபுரம் வரக் கூடாது. தேவாரம் வட்டாரத்தில் எங்குமே பேட்டி அளிக்கக் கூடாது' என போலீஸார் போனில் மிரட்டல் விடுக்கிறார்கள். நான் என்ன தீவிரவாதியா? நியூட்ரினோ என்கிற திட்டத்தால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தைப் போக்க, நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசு சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி. அவர் நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை பேரழிவுத் திட்டம் என்கிறோம். இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும். இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம்" என்றார்.